முதுமை

ஓயாம பேசினவன் நான்
ஓஞ்சிப் போன காலத்திலே
வாயாடி பட்டத்தை
வலிய வந்து கொடுத்தது
என் மூத்த மவன்

மூக்குறிஞ்சி சளியை
காரித்துப்ப
முகஞ்சுளிச்சு கடந்து போறது
என் ரெண்டாமவன்

நாதியத்து பொணமா சாஞ்சிட்டா
நடுவீடு நாறுமுன்னு
கடைசி வரை எனக்கு
கொல்லைப்புற ஓட்டு வீடுன்னு
ஒதுக்கி வைச்சவன்
என் மூனாமவன்

தொண்டைக் குழி வரண்டு
ஒரு வாய்த் தண்ணி கேட்டா
தண்ணியோட விலையைச் சொல்லி
வாயடைக்க வைக்கிறவ
என் மூத்த மருமவ

வேட்டியிலே களிஞ்சு வைச்சு
பாயையும் ஈரமாக்கினாலும்
கசக்கிப் போட கிணத்தடிக்கு போற
தகுதியில்லாம ஆக்கினது
என் இளைய மருமவ

இப்படி சொந்தமெல்லாம்
என்னை விட்டு போனதிலே
சத்தியமா துக்கமில்லை எனக்கு.

ஒத்தை இட்டிலி கூட சாப்பிட்டா
மைனர் உடம்பு கெட்டுடுமான்னு
உரிமையா கோவிக்கும் செல்லம்மா
நீ மட்டும் போயிருக்க வேணாம்
எனக்கு முன்னே
இவ்வளவு சீக்கிரமா.

எழுதியவர் : பிரேம பிரபா (29-Aug-17, 9:25 pm)
Tanglish : muthumai
பார்வை : 170

மேலே