மரம் வளர்ப்போம் – இயற்கை வளங்களை பாதுகாப்போம்

மரங்கள் மனித சமுதாயத்துக்கு பல்வேறு பலன்களை அளித்து வருகின்றன. மரங்கள் மற்றும் மரங்கள் அடர்ந்த காடுகள் மனிதன் சுவாசிக்க உதவும் ஆக்ஸிஜன் என்கிற பிராணவாயுவை உற்பத்தி செய்யும் மையமாகத் திகழ்கின்றன. தூசி, புகை, காற்றில் கலந்திருக்கும் பல்வேறு நச்சுப் பொருட்களை மரத்தின் இலைகள் வடிகட்டி விடுகின்றன.மழை நீரினாலும், காற்றினாலும் மண்ணரிப்பு ஏற்படுகிறது. இதனால் நம்நாட்டில் ஆண்டுதோறும் பல மில்லியன் டன் அளவுக்கு வளமான மண் அடித்துச் செல்லப்படுகிறது. அவை மேடாகக் குவியவும், ஆற்று நீரோடு அடித்துச் சென்று கடலில் கலக்கவும் நேரிடுகிறது.

இதனால் மண்வளம் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் மண்வளம் பாதுகாக்க அடர்ந்த மரங்கள் உதவுகின்றன. ஒவ்வொரு மரத்தின் வேரும் மண்ணை இறுகப்பற்றிக் கொள்கிறது.புவி வெப்பமயமாவதற்கு காரணமான பசுமைக்குடில் வாயுக்களில் முதலிடத்தில் இருக்கும் கரியமில வாயுவை உள்கிரகித்து பூமியை மிதமான வெப்ப நிலையில் வைத்திருப்பதில் மரங்களின் பங்கு முக்கியமானது. மரங்கள் பறவைகளின் வாழ்விடங்களாக உள்ளன. பறவைகள் பூச்சிகளை உணவாக உண்பதால் பூச்சி இனங்கள் பெருகாமல் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றன. இவ்வாறு மரங்களால் பல்வேறு நன்மைகள் உள்ள நிலையில் மனிதனின் சுய நலத்துக்காக அவை பெருமளவு அழிக்கப்பட்டு விட்டன. தொடர்ந்து அழிக்கப்பட்டும் வருகின்றன.

மரங்கள் மற்றும் காடுகளை அழிப்பதால் அவற்றால் கிடைத்து வந்த பயன்கள் மறைந்து எதிர்மாறான விளைவு ஏற்படும் என்பதை மறந்து, சாலைகள் அமைத்தல், சாலை விரிவாக்கம், தொழிற்சாலைகள், கட்டிடங்கள், நீர் மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பது, விமான நிலையங்கள், சுரங்கப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டும், காடுகள் அழிக்கப்பட்டும் வருகின்றன. இதனால் பருவநிலை மாற்றம், இயற்கைப் பேரழிவு போன்றவை அதிகரித்துள்ளது.மரங்களைப் போன்று காடுகளை வளர்க்க முடியாது. காடுகளானது மரங்கள் மட்டும் அடங்கியவையல்ல. அவை மரங்கள், செடிகள், கொடிகள், புல் பூண்டு உள்ளிட்ட தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிரிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை கொண்டவை. காடுகளின் இயல்பான போக்கினை மனிதனால் கொண்டுவர முடியாது. காடுகளில் அடர்த்தியான மரங்கள் இருப்பதால் மண்வளம் அதிக அளவு பாதுகாக்கப்படுகிறது. பூமியின் மேல் விழும் மழையின் வேகத்தை, காட்டிலுள்ள தாவரங்கள் தங்கள் மீது தாங்கிக் கொள்கின்றன. மழை நேரடியாக பூமியின் மீது விழுந்தால் நிலப்பரப்பின் மேல்மண் தண்ணீரோடு அரித்துச் செல்லப்பட்டு நிலம் பலவீனம் அடையும். அப்படித் தொடர்ந்து பலவீனம் அடைந்தால் நிலச்சரிவு ஏற்படும். அவை நிகழாமல் காடுகளில் உள்ள தாவரங்கள் காப்பாற்றுகின்றன. தாவரங்கள் வேர்களை நிலத்தின் உள்ளேபரப்பி நிலத்தை கெட்டிப்படுத்துகின்றன.சிலவகைத் தாவரங்கள் தங்களுக்கு இருக்கும் நீரை நீராவியாக வெளியேற்றுகின்றன. அது காற்றை ஈரப்பசையாக்கி வறண்ட நிலையை மாற்றுகின்றன.

இந்நிலையில் காடுகள் அழிக்கப்படும்போது அவற்றிலுள்ள விலங்குகள் அழியவும், இடம் பெயரவும் நேரிடும். வன விலங்குகள் அழிவதால் ஏராளமான இழப்புகள் ஏற்படுவது நமக்குத் தெரிவதில்லை. உதாரணமாக யானைகள் போடும் சாணம் சிலவகை மரங்கள் வளர உதவுகிறது. அவற்றால் காடுகளில் நுண்ணுயிரிகள் உற்பத்தியாகி மண்ணின் வளம் அதிகரிக்கவும், சிலவகை தாவரங்கள் வளரவும் உதவுகிறது. எனவே இனிமேலாவது காடுகளை அழிக்காமல், இருப்பவற்றை பாதுகாக்கச் செய்தாலே போதுமானது. காடுகளில் மரங்களை வெட்டிக் கடத்துபவர்களை பிடித்து தண்டிக்கும் அரசுதான், வளர்ச்சிப் பணிகள் என்ற பெயரில் பெரும்பாலான காடுகளை அழித்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.அண்மையில் உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பாதிப்பை நினைவு கூரலாம். கேதார்நாத் உள்ளிட்ட இயற்கை வளம் சார்ந்த ஆன்மிகப் பகுதிகளிலும், இதர சுற்றுலாப் பகுதிகளிலும் சுற்றுச்சூழல் விதிகளை மீறிய கட்டடங்கள் பெருகியதும், அதற்காக அங்குள்ள இயற்கைவளங்களை அழித்ததுமே அங்குஏற்பட்ட பேரழிவுக்கு காரணமாக அமைந்தது. அங்கு கட்டப்பட்டிருந்த விடுதிகள் வெள்ளம் காரணமாக சீட்டுக்கட்டுகள் போன்றுசரிந்து விழுந்தன. பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். மண்ணரிப்பின் காரணமாகவே அவைநிகழ்ந்தன. ஏராளமான மரங்களை வெட்டி எறிந்துவிட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டன.

அதுவேமுன்பு போல் மரங்கள் அடர்ந்திருந்தால் அவற்றின் வேர்கள் மண்ணைஇறுகப்பற்றி நிலச்சரிவைத் தடுத்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் காடுகளை அழித்து ஆக்கிரமித்ததின் விளைவாக யானைக் கூட்டங்கள் ஊருக்குள் தண்ணீர் தேடி வருவது அன்றாட நிகழ்வாக மாறி வருவது குறிப்பிடத்தக்கது. எனவே ஒவ்வொரு வீட்டிலும் மரக்கன்றுகளை நட்டு, மரம் வளர்க்க முயற்சிக்க வேண்டும். இடவசதி இல்லாதவர்கள் ஒன்றிணைந்து அருகிலுள்ள மைதானங்கள், பூங்காக்களில் வளர்க்க முயற்சிக்கலாம். குடியிருப்பு வளாகங்கள், பள்ளி, கல்லூரி வளாகங்கள் என பல்வேறு இடங்களில் இதற்கான முயற்சிகளை அனைவரும் ஒன்றிணைந்து மேற்கொள்ளலாம். அரசும் இப்படிப்பட்ட திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். மரம் வளர்க்க முயற்சிப்பவர்களுக்கு உரிய உதவிபுரிய வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் இயற்கை வளங்களை நிச்சயமாக பாதுகாக்க முடியும். நாமும் நோய் நொடியின்றி இயற்கையான வாழ்க்கையை வாழலாம்.

எழுதியவர் : எஸ்.ராமு (30-Aug-17, 6:12 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
பார்வை : 4255

சிறந்த கட்டுரைகள்

மேலே