விழித்திடு தமிழா

அனிதாவின் மரணம் என் அடுத்த வீட்டுச் சிறுமியின் மரணத்தைப் போன்ற வலியை எனக்குத் தந்திருக்கிறது. எனக்கு மட்டுமல்ல நிச்சயம் ஒவ்வொரு தமிழனுக்கும். சவப்பெட்டிக்குள் உறங்கும் சிறுமியைத் தற்கொலை செய்ய வைத்தது எது... அவள் கனவுகளைக் கொன்றது யார்.. . மத்திய அரசின் தான்தோன்றித்தனமா அல்லது மாநில அரசின் கும்பிடுபோடும் அடிமைத்தனமா. இப்படி கேள்வியை அடுத்தவர் பக்கம் நீட்டுவது எப்போதும் மனிதனுக்கும் மனசுக்கும் மிக எளிது. நமக்கும் அதுவே பழகிப் போனது.

குற்றம் சாட்டும் அந்த விரலைக் கொஞ்சம் உற்றுப் பாருங்கள் . அது உங்களைக் காட்டுகிறது. குற்றம் சொல்லும் பேச்சை நிறுத்தி ஒரு நிமிடம் மவுனித்துப் பாருங்கள். அது உங்களிடம் எதோ சொல்லுகிறது.அத்தனையும் கண்டும் அமைதி காத்த நம் தமிழ் இனத்தின் நீயும் நானும் இதற்கு ஒரு காரணமே. கிணற்றில் பிடித்து தள்ளாவிட்டாலும் சாவின் கிணற்றை உற்றுப் பார்க்கும் வரை கொண்டுச் சென்றது யாராகவும் எதுவாகவும் இருக்கட்டும். இந்தாப் பந்த போடுறோம் போடுறோம் பிடிச்சுக்க என்று இறுதி வரை நம்பிக்கை கொடுத்த அரசும் அதைச் சார்ந்த தலைவர்களும் இறுதியியில் பந்தைக் காற்றில் எங்கோ வீச அந்த குழந்தை அதை காற்றில் தேடித் போகிறது ஒரு மரணப் பயணம்.

சிறுமியின் வலியில் நாம் கரம் கோர்த்திருக்க வேண்டாமா. கிணற்றில் விழுந்து பிணம் மிதந்ததும் எட்டிப் பார்க்கும் நம் அமைதி கொடுமையானது. அதுவரை அவரவர் பிரச்சினை என்று கதவுகளை சாத்திக் கொண்டிருந்து விட்டோமே.இதுவரை அப்படியா என்று செய்தியைக் கேட்டு என்று கண்களை மூடிக் கொண்டோமே.

இன்று அனிதாவின் மரணத்தில் எழுந்த குரல் இன்னும் இருக்கும் மனிதத்தைக் காட்டுகிறது. ஆனால் ஒரு மரணம் நிகழ்ந்ததும் எழும் தமிழனின் ஆதங்கம் அன்பு உரிமைக் குரல் இவை எல்லாம் ஒவ்வொரு சமூக அநீதியைக் கண்டவுடன் வெடிக்க வேண்டாமா. ஓவியா படைக்குள்ளும் இன்னும் பிற பொழுதுபோக்குக்குள்ளும் மூழ்கிக்கிடக்கும் நம் கண்களுக்கு சில சமூக அநீதிகள் தெரியாமல் போய்விடுகிறது. சில நேரம் தெரிந்தாலும் இரண்டு நிமிடம் உணர்ந்தாலும் மூன்றாவது நிமிடம் முகநூலில் ஒரு லைக் கொடுத்து விட்டு அடுத்த வேலைக்கு நகர்ந்து விடுகிறோம்.
திருமுருகனுக்காக கதிராமங்கலத்துக்காக முதல் மூன்று நாட்கள் பதிவிட்ட நாம் பின் தூங்கித்தான் விட்டோம். அப்பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்துவிட்டதா. நாம் தான் மறந்து விட்டோம். தமிழனின் உணர்வுகள் தூங்குகிற உணர்வுகளா. சமூகப் பிரச்னைகளைத் தாங்கும் தோள்களாக வேண்டாமா நாம் .

இனியாவது மாறுவோமோ.. என் காலை அதில் என் வேலை, என் குடும்பம் அதில்என் குழந்தைகள் ,என் முகநூல் என் முதல், என் வாட்ஸாப்ப் என் வாழ்க்கை ,என் அலைபேசி, என் ஆசைகள், என் உறவு என் இரவு என நம் உலகத்தைச் சுருக்கிக்கொள்ளாமல் இனியாவது சுருக்கென எழுவோம் அநீதிகளை அருகில் கண்டாலும் தொலைவில் கண்டாலும் அது நீ அறியாத முகத்துக்கு என்றாலும் எழுந்திடு. காதுகளையும் கண்களையும் திறந்து வைத்திருக்கும் நாம் வாயை மட்டும் திறந்து பேசுவதில்லை . அது ஏன். செய்திகள் செய்திகளாக மடிந்து போகாமல் அதைக் கேட்கும் பார்க்கும் உன்னால் சரித்திர நிகழ்வுகளாக மாறக் கூடும் நீ உயிர் பெற்றால் .

தமிழா வாய் திற. குரல் கொடு. களம் காண். ஒரு ஐந்தறிவு கொண்ட பசுவிற்கே அநீதிக்கு குரல் கொடுக்க வாய்ப்பு கொடுத்த தமிழகமடா . அந்தப் பசுவிற்கு ஏற்பட்ட அநீதிக்கு தன் மகனையே பலிகொடுத்த அற்புதமான அரசனையும் கொண்டதடா. இன்று நீதி கேட்டு அடிக்கவேண்டிய மணிகள் வெகு உயரத்தில் சிலர்க்கு மட்டுமே எட்டும் தூரத்தில் . அதையும் தாண்டி நீதி கேட்டு அந்தச் சிறுமி அடித்த மணி சாவு மணி ஆனது ஏனோ. தூங்கும் தமிழனின் அமைதி கலையட்டும் இந்தச் சாவு மணி சத்தத்திலாவது. விழித்திடு அனிதாவுக்காக நீட்டுக்காக மட்டுமல்ல தமிழகத்தில் அரங்கேறும் அத்தனை அநீதிகளுக்காகவும் .

யாழினி வளன்
இப்பதிவு ஒன்னு இந்தியா இணையதளத்திலும் வெளி வந்துள்ளது.

எழுதியவர் : யாழினி வளன் (2-Sep-17, 6:40 pm)
சேர்த்தது : யாழினி வளன்
பார்வை : 732

சிறந்த கட்டுரைகள்

மேலே