அவளும் நானும் - பள்ளி பருவ காதல்

"சரிதானா?" என்று யார் கேட்கும் போதும்
உன் மீதான என் காதல் சரிதானா என்று திக்கித்தவித்த ஞாபகங்கள்
நொடிகள், நிமிடங்கள், நாட்கள்,
வாரங்கள், மாதங்கள், வருடங்கள்
என நான் சுமந்த காதல் பொன்மூட்டை
உன் பார்வையில் வெறும் பொதிமூட்டை
சொன்னால் பிழையாகுமோ
சொல்லாமல் வலி கூடுமோ
காதலன் ஆகிட முயன்று
நண்பனெனும் உறவினை இழக்க நேரிடுமோ
என்ற அச்சங்களின் ஊஞ்சலாட்டத்தில்
உன் பக்கம் நிற்கும் வாஞ்சை ஏக்கத்தில்
பின்னல் போல உன் பின்னே திரிந்தேன்
ரிப்பன் போல நானும் வளைந்தேன்
பொட்டு வைத்த நெற்றியின் கீழே
புருவமாகும் ஆசைகள் கொண்டேன்
தொட்டு பேச வாய்ப்புகள் இருந்தும்
எட்டி நின்று வாயசைவினை ரசித்தேன்
நீண்டு கிடந்த வரிசைகள் எல்லாம்
உன்னோடு இணைந்து இனிதாய் கடந்தேன்
தேர்வு கூட அமைதியில் உந்தன்
மூச்சு சத்தம் கேட்கையில் சிலிர்த்தேன்
கேள்வி தாளின் விளிம்புகள் எல்லாம்
உந்தன் பெயரை செதுக்கி மகிழ்ந்தேன்
விடுமுறைகள் வாட்டிடஉணர்ந்தேன்
நாள்காட்டியை நகர்த்திட முயன்றேன்
உன்பிறந்தநாளை அறிந்திட துடித்தேன்
பரிசு நானே செய்து அசத்திட அயர்ந்தேன்
இனிப்பு கொடுக்கும் நொடியினில் உந்தன்
கைகள் குலுக்கி மெய்ய்யினை உணர்ந்தேன்
பிறரும் உந்தன் கைகளை பிடிக்க
காரம் உண்ட நாவென தவித்தேன்
மாலை வீட்டில் விருந்தென நீயும்
அழைக்க வேண்டி தவங்கள் இருந்தேன்
சிறப்பு உடுப்பு ஏதும் இருந்தால்
உடுத்தி உந்தன் வாசல் அடைந்தேன்
உந்தன் தந்தை குரலினை கேட்டு
எந்தன் சிந்தை நடுங்கிட நின்றேன்
மனதின் மகிழ்வை கொஞ்சமாய் நானும்
முகத்தில் புகுத்தி போய்வர சென்றேன்
நீ பருவம் எய்திய விடுப்பினில் ஏதோ
உடல் நல குறை என்றே பயந்தேன்
பூப்பெய்திய பூவே உந்தன்
வாசம் எங்கும் கமழ்ந்திட கண்டேன்
மூத்தோர்கள் உன்னை ரசித்திட
கனலாக கோபம் கொண்டேன்
பிறர் தூதனுப்பிய கடிதங்கள் எல்லாம்
நீ அறியாமல் அக்ஷதை செய்தேன்
ஆண்டு நிறைவில் நினைவான் பதிப்பில்
ரசித்து ரசித்து சொற்கள் வடித்தேன்

பள்ளி மாறி நீயும் போக
சொல்லி சொல்லி நானும் அழுதேன்
மீண்டும் உன்னை நேரில் பார்த்து
கை குலுக்கி காதல் சொன்னேன்
மெய் சிலிர்த்த உந்தன் கண்ணில்
நானும் என்னை பார்த்து நின்றேன்
கை இணைத்து காதல் சொல்லி
காலம் கடந்து நாமும் செல்ல
கால போக்கில் மாற்றம் நிகழ்ந்து
காயம் தந்து போனாய் மெல்ல...

எழுதியவர் : எளிநன் (5-Sep-17, 2:52 pm)
பார்வை : 229

மேலே