சின்னக் கோணங்கி

குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு
ஊருப் புறத்தார்க்கு நல்லகுறி சொல்லு !!
அம்மா தாயீ அகிலாண்ட மாரீ !
இந்தக் காலத்துக்கு நல்லகுறி சொல்லு !
அறிவியல் ஓங்குது அதுவோங்குவதால்
செறிவுற மக்களின் செழிப்பு ஓங்குது !!
எந்திர மோகம் குறையுது குறையுது
தந்திர வாழ்க்கைத் தரித்திரம் போகுது
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு
இந்தக் காலத்துக்கும் நல்லகுறி சொல்லு !!
அரசியல் புரியுது அவசியம் தெரியுது
இளசுங்க மனசில் இயக்கம் உதிக்குது !
கண்களுக் கெல்லாம் காந்தி பிறக்குது !
மண்ணில் பாரதி திகழுது வளருது !
வீரீ ! காளி !! மலையாள பகவதீ !!
உன்பெயர் சொல்லிட உச்சி குளுருது
துன்பங்க ளெல்லாம் தொலையுது தொலையுது !!
தாய்மொழிப் பற்றை மறந்து வாழ்பவன்
காய்ந்து போவான் !! கருத்து வெளங்குது !!
ஆத்திரம் சண்டை அடங்குது ! பூமியும்
நேத்திரம் மூடி நிம்மதி கொள்ளுது !!
பொம்பள சக்தி பொசுக்குன்னு புரியுது
அம்புட்டு புதுமையும் நேருது மாறுது !
இயற்கை வளருது ! இயல்பு தெரியுது !
முயற்சி பெருகுது ! மூர்க்கம் குறையுது !
காற்றும், புனலும், வானும், மீனும்
கடலும் முத்தும் கதிரும் செழிக்குது !
சிரிக்குது சிரிக்குது அன்பு சிலிர்க்குது
துன்பப் பேயைத் துறத்தி அடிக்குது !
வாழ்க்கை ஓட்டம் விளங்குது ! மனசுல
வேட்கை நேருது ! ஏறுது ! மாறுது !
குடுகுடு குடுகுடு குடுகுடு குடு்குடு
குடுகுடு குடுகுடு குடுகுடு குடு்குடு !!!

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (6-Sep-17, 8:26 pm)
சேர்த்தது : விவேக்பாரதி
பார்வை : 67

மேலே