சொல்லொன்று வேண்டும்

சொல்லொன்று வேண்டும் சொல்லொன்று வேண்டும்
சோதனை தீர்க்கின்ற சொல்லொன்று வேண்டும் !
அல்லவை மாய்க்கின்ற சொல்லொன்று வேண்டும்
அடையாளம் காக்கின்ற சொல்லொன்று வேண்டும்
நில்லாமல் ஓடிடும் நிலையற்ற வாழ்விலே
நிஜம்சொல்ல நிழல்சொல்லச் சொல்லொன்று வேண்டும் !
சொல்லொன்று வேண்டும் சொல்லொன்று வேண்டும்
சோகங்கள் தேய்க்கின்ற சொல்லொன்று வேண்டும் !

தத்தகிட தத்தகிட தத்தகிட தித்தோம் !

மின்னலைப் போலிங்கு சொல்லொன்று வேண்டும்
மீறிடும் குளிரோடும் சொல்லொன்று வேண்டும்
கன்னலைப் போலவும் சொல்லொன்று வேண்டும்
கனல்போல வளிபோலச் சொல்லொன்று வேண்டும் !
இன்னலை இல்லாமல் ஆக்கும்சொல் வேண்டும்
இயலாமை தனையிங்கு போக்கும்சொல் வேண்டும் !
மன்னவர்க் கஞ்சாத சொல்லொன்று வேண்டும்
மரியாதை மாறாத சொல்லொன்று வேண்டும் !

தத்தகிட தத்தகிட தத்தகிட தித்தோம் !

அச்சொல்லை யார்சொல்வ தென்கின்ற பேச்சே
அமையாமல் யாவர்க்கும் பொதுவாக வேண்டும்
அச்சத்தை நீக்கினோர் அடிநெஞ்சில் மூளும்
அக்கினிச் சுடர்கொண்ட சொல்லொன்று வேண்டும் !
உச்சத்தைக் கண்டாலும் வீழ்ந்தாலும் எண்ணம்
உருவத்தை இழக்காத சொல்லொன்று வேண்டும்
அச்சொல்லைச் சீக்கிரம் தாஜெகத் காளி
அறிவோடு முறவாடும் சொல்வீசு காளி !

தத்தகிட தத்தகிட தத்தகிட தித்தோம் !

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (6-Sep-17, 8:22 pm)
சேர்த்தது : விவேக்பாரதி
பார்வை : 52

மேலே