அந்தமானைப் பாருங்கள் அழகு

அந்தமான் பயணம்...
என் நினைவுப்
பென் டிரைவில்
மேலும் பல இனிய
நிகழ்வுகள் பதிந்து
வைக்கப்பட்டது...
மனதோடு ஒட்டிக்
கொண்டதால் ஆன்டிவைரஸ்
பேக்கேஜ் தேவையே
இல்லாமல் போனது...
எந்த வைரஸும்
அழித்துவிடாது இந்த
இனிய பதிவுகளை...

மீண்டும் எனது இனிய
பதினேழு முதல்
இருபத்து ஒன்று
வயதுகளுக்குள் ஒருமுறை
சென்று வந்தேன்
அந்தமான் சந்திப்பில்..
அந்த மான் நிற்குது பார்
என்பது மருகி
அந்தமான் நிக்கோபார்
ஆனதாம் கால ஓட்டத்தில்...
இளமைக் காலங்கள்
'ஜிஸிஇ'யில் நிற்குது பார்
என்பது மருகி
ஜிஸிஇ நிக்கோபார்
ஆகுமோ வருங்காலத்தில்...

அந்தமான் பயணம்
எனக்கு ஆரம்பித்தது
திருநெல்வேலி
ரயில் நிலையத்தில்...
ரயிலுக்கு பச்சைக்கொடி
காட்டியது ரயிலின் கார்டு...
எனது இனிய பயணத்துக்கு
பச்சைக்கொடி காட்டியது
என்னவோ அது
நண்பன் ராஜலிங்கம்தான்...
நாகர்கோவிலில் புறப்பட்ட
அவன் திருநெல்வேலியில்
இணைந்து கொண்டான்
எனது ரயில் பயணத்தில்...
பயணத்தில் பகிர்ந்து கொண்டது
காலையுணவு மதிய உணவு
மட்டுமல்ல கரைபுரண்டோடிய
இனிய கல்லூரி
நினைவுகளையும்தான்...

மகிழ்ச்சி சென்னை
விமான நிலையத்தில்
மீண்டும் நிலை கொண்டது...
இந்த மகிழ்ச்சி அழுத்த
உயர்வு மண்டலம்
வலிமை பெற்றுக்கொண்டே
வந்தது அந்தமான்
பயணம் முழுவதும்...
ஏர்இந்தியா விமானத்தில்
கிடைக்கப்பெற்றது
நடைபாதை ஓர இருக்கை...
கேட்டுப் பெற்றது
ஜன்னலோர இருக்கை...
ஏர்இந்தியா வானதேவதை
அழகாய் இருந்தாளோ
இல்லையோ
அன்பாய் இருந்தாள்
ஜன்னலோர இருக்கை
பெற்றுத் தந்தாள்...

திரைப்படங்களில்
ரசித்து மகிழ்ந்த
கடற்கரைகளை நேரடியாய்
கண்டு மகிழ்ந்து
காலார நண்பர்களோடு
நடந்து வந்ததில்
இதய நந்தவனத்தில்
இன்பப் பூக்கள்
இனிமையாய்ப் பூத்தது...

அந்தமான்
செல்லுலார் சிறையில்
மின்சார விளக்குகளின்
வெளிச்சக் காட்சிகளோடு
அந்தநாள் விடுதலைப்
போராட்டங்களின்
வர்ணனைகள் சற்றே
அதிகமாய் தோன்றினாலும்
சுதந்திர இந்தியா
அமைந்திட தம்
சுதந்திரம் மட்டுமல்ல
தம் நல்லுயிர்களையும்
இழந்த விடுதலை வீரர்களின்
தியாகங்கள் நினைவில்
வந்து போனது...
தமிழ் நாட்டிலிருந்து
பேக்கேஜ் டூர்
சென்று வந்த நமக்கு
வங்கத்திலிருந்து
பிரிட்டிஷ் அரசை எதிர்த்து
அந்தமான் சென்று வந்த
சுபாஷ் சந்திரபோஸின்
துணிச்சல்... அர்ப்பணிப்பு
மனதில் நின்றுபோனது...

ஹேவ்லாக் தீவு
சென்று வந்த
கப்பல் பயணம்
சாண்டில்யனின்
கடல்புறா... யவனராணி...
ஜலதீபங்களை மீண்டும்
படிக்கத் தூண்டுகிறது...
தீவுக் கடலில்
நண்பர்களோடு குளியல்
இதுவரை கடலில் குளித்த
நேரங்களைவிட அதிகநேரம்
குளித்ததாய்
ரெகார்டு பிரேக்
செய்யப்பட்டது...
பளிங்கு போன்ற
தண்ணீரில் பாந்தமாய்க்
குளித்தது புதிய அனுபவம்...
ஜோடியாய் வந்து
ஜோடியாய் இளநீர்
குடித்த காட்சிகளில்
ஜோடிகள் மகிழ்ந்து போயினர்...
கவலைகள் மறந்து போயினர்...

மாலைநேர
அரட்டைக் கச்சேரி
கல்லூரிக் கால
கலந்துரையாடல்களையும்
மிஞ்சியது...
வாட்ஸ்அப் குழுவில் அடிக்கடி
வந்து போகிறவர்களையும்விட
வராமலேயே நூறு சதவீதம்
மெஸேஜ்கள் படிக்கும்
பரதன் போன்றோரின்
ஒப்புதல் வாக்குமூலம்
பெறப்பட்டது...
பிக்பாஸ் லிவிங்ஸ்டன்
எங்கிருந்தோ இயக்காமல்
உடன் தங்கியிருந்து
செயல்பட்டதில் பிக்பாஸ்
டிவி சீரியலை விடவும்
அந்தமான் டிஎஸ்ஜி கிராண்ட் ஸ்டே
சுவாரசியமாய் இருந்தது...

பன்னிரண்டு ராசிக்காரர்களுக்கும்
மகிழ்ச்சி இந்த நாட்களில்
பொதுவாய்ப் போனது...
சென்னை நோக்கிய
விமான பயணத்தில்
ஸ்பைஸ் ஜெட்
வான தேவதைகள்
பயணிகளை நன்றாகவே
உபசரித்தார்கள்...
அவர்களின் சிரிப்பில்
அற்புத அழகில்
ஆடைகளின் நேர்த்தியில்
ஜன்னலோர இருக்கை
தேவையில்லாமல் போனது...

இஸிஜி டெஸ்ட் முடிவுகள்
ரத்தத்தில் சர்க்கரை அளவு
அனைத்தும்
வழக்கத்தைவிட
சரியான அளவுக்குள்
இருந்தது கண்டு
மருத்துவர் மிரண்டுபோனார்...
டோஸேஜ் குறைத்து
எழுதப்பட்ட
மருந்துச் சீட்டை
அவரிடம் வாங்கி
உடல்நலம் மனநலம்
இவை எல்லாம்
நட்பின் பகிர்தலில்
மருந்துகள் இல்லாமலேயே
மேம்படுகிறது
என எழுதப்படா
மருந்துச்சீட்டை மருத்துவருக்கு
வழங்கி வந்தேன்...

உண்டியல் ஒன்று
வாங்கி வைத்துக்கொள்ளப்
போகிறேன்...
ஜிஸிஇ நண்பர்களோடு
அடுத்த பயணத்திற்கு
காசு சேர்த்துவைக்க...
பயணங்கள் முடிவதில்லை
பயணிக்க உடலுக்கு
முடியும் வரை...
நன்றிகள் பல
பயணிக்க ஆவன செய்த
நண்பர்களுக்கும்
உடன் பயணித்த
நண்பர்களுக்கும்...

குறிப்பு: ஜிஸிஇ --- Government College of Engineering, Tirunelveli.. 1982-86 batch.
👍😀🙏🙋🏻‍♂🌺🌹🌷🍏🍇🍎

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (6-Sep-17, 9:27 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 114

மேலே