இரத்த கோடுகள்
வண்ணத்து பூச்சிகளுக்கு
வகுப்பெடுக்கும் வேலை
என் வேலை
பூக்களுக்கு புகட்டுவதென்றால்
திகட்டும் .,
அப்படித்தான்
சிறகு முளைத்த
சின்னப்பூ ஒன்று -என்
வகுப்பு தேடி வந்தது
தொகுப்பாய் புத்தகம் சுமந்து ,!!!
வரும்போது
சாதுவாய் வந்தது
மின்னிடும் கண்களில்
மிரட்சி !!
புன்னகையால் அழைத்து
வகுப்பறை பயம்
கலைத்தேன்!
மெல்ல அமர்ந்த பூ
என்னை அளந்தது,,!
ஏடுகளை புரட்டி
அம்மாவில் ஆரம்பித்தேன்,
பயந்தே பதிலுரைத்தாள்!!
கூச்சம் என்றே நான்
குறைபட்டு கொள்ளவில்லை,,
எதேச்சையாய்
பூவின் விரல்
பார்த்தேன்,
சூரிய கதிராய் தழும்புகள்,
விக்கித்து போனேன்,
மலரிடம் கேட்டேன்,
விழுப்புண்ணா ?
கீறலா?
அரிப்பா?
பதில் ஏதும் சொல்லாமல்
பொம்மையாய் தலையாட்டியது..
வகுப்பு முடியும் நேரம்,
காதோரம் ரகசியமாய்
சொன்னது :
எழுத்தை வரவழைக்க
என் அம்மா இட்ட
ரத்த கோடுகள் என்று!!!!