மாலாவின் டைரி - 2

காற்று வாங்க நடந்துவிட்டு வருவோமென்று நடந்து சென்று கொண்டிருந்தார் மிஷ்டர் செல்வராஜ்.
கொஞ்சம் கொஞ்சமாக காற்றின் வேகம் அதிகரிக்க ஆரம்பித்தது.

பேய்க்காற்றாக இருக்குமோ என்றவர் வீடுநோக்கி வேகமாகச் செல்ல முற்பட்டார்.
அதற்குள் மழை பெய்யத் தொடங்கியது.
பக்கத்திலிருந்த வீட்டில் மழையில் நனையாமல் இருக்க ஒதுங்கி நின்றார்.

நேரம் ஆக ஆக மழை விடுவதாக இல்லை.
வீட்டின் வெளியில் குளிர் அதிகமாக இருந்ததால் அந்த வீட்டினுள் பார்த்தார் செல்வராஜ்.

உள்ளிருந்து ஒரு அம்மா வந்து கதவைத் திறந்து செல்வராஜை உள்ளே வரச் சொன்னாங்க.

குளிரால் நடுங்கிய செல்வராஜுக்கு தேநீர் கொண்டுவருவதாகச் சொல்லிவிட்டு உள்ளே சென்றார் அந்த அம்மா.

சிறிது நேரம் கழித்து தேநீர் வர அருந்திய செல்வராஜ், " அம்மா, நீங்க இங்கதான் குடியிருக்கிறீங்களா? நான் உங்களை இதுக்கு முன்னாடி பார்த்ததில்லையே. ", என்றார்.

" என் பெயர் மேரி. நான் இந்த வீட்டில் தான் வசித்து வருகிறேன். ", என்றார் அந்த அம்மா.

அதற்கு மேல் பேசவில்லை.
மழை அதிகமாகவே பெய்தது.

" மழை விடுவதாகத் தெரியவில்லை. இந்த பக்கத்து அறை எனது மகனுடையது தான். நீங்க அங்க தங்கிட்டு காலையில கூட போகலாம். பசியாக இருந்தால் சாப்பிட உணவு கொண்டுவருகிறேன். ", என்றார் மேரி அம்மா.

கொஞ்சம் பசியாக உள்ளதென்றாலும் உணவு கேட்கக் கூச்சப்பட்ட செல்வராஜின் முகத்தில் பசியை உணர்ந்தவராய் உணவைக் கொண்டு வந்து வைத்து சாப்பிடச் சொன்னார்.

வயிறாரச் சாப்பிட்டு பசியாறிய செல்வராஜ் மேரி அம்மா சொன்ன பக்கத்து அறையில் சென்று படுத்தவர் கண்ணயர்ந்தார்.
விடியும் வரை நல்ல நிம்மதியான உறக்கம்.

காலையில் எழுந்ததும் மேரி அம்மாவிடம் சொல்லிவிட்டுக் கிளம்பலாமென்று எண்ணிய செல்வராஜ் வீடெங்கும் தேடினார்.
மேரி அம்மாவைக் காணவில்லை.

கடைசியாக ஒரு அறையில் சாய்ந்த நாற்காலியில் யாரோ படுத்திருப்பது போல் தெரிய மெல்ல மெல்ல அருகில் சென்ற செல்வராஜ் அதிர்ச்சியடைந்தார்.
அங்கிருந்தது சதை பாதி சிதைந்த நிலையிலுள்ள எலும்புக்கூடு.

அதன் விகாரமான தோற்றத்தைக் காணப் பயமாக இருந்தாலும் செல்வராஜ் அந்த எலும்புக் கூடின் மடியைக் கண்டார்.
அங்க பைபிள் இருந்தது.
அதோடு ஒரு கடிதம் இருந்தது.

அதில் எழுதப்பட்டிருந்து என்னவென்றால்,

அன்பு மகன் செல்வராஜுக்கு,

உன்னை மகனே என்று அழைக்க நான் உயிருடன் இல்லை. நீ இங்கு வருவாய் என்று தெரியும்.
என் வாழ்நாளின் கடைசி கர்த்தரிடம் பிரார்த்தனை செய்தேன். இன்னும் செய்கிறேன்.
என் மகன் இறந்துவிட்டதால் எனக்கு உறவென்று சொல்ல கர்த்தரைத் தவிர யாரும் இல்லை.
எனக்காக பிரார்த்திக்க வேண்டாம். ஆனால், சிறு உதவி. என் மகன் என்னிடம் ஒப்புவித்த அவனது தோழியின் டைரியை இப்போது உன்னிடம் ஒப்புவிக்கிறேன்.
இதை எல்லாருக்கும் கொண்டு போய் நீதான் சேர்க்க வேண்டும்.
அதுவே எனது ஆன்மாவின் ஆசை. அதை நிறைவேற்றி வை..
இதை செய்யும் போது உனக்கு நிறைய தடங்கல்கள் வரும்.
செய்து முடிப்பது உன் பொறுப்பு..
இப்படிக்கு,
மேரி அம்மா " , என்று எழுதியிருந்தது.
கடிதத்தை மடித்து தனது பைக்குள் வைத்தார் செல்வராஜ்.

அடுத்த என்ன செய்யலாமென்று செல்வராஜ் யோசித்துக் கொண்டிருந்த நேரம்,
"டிங்ரிங் டிங்ரிங் யு வக் அப். ", என்று அலாரம் அடிக்க தூக்கத்திலிருந்து விழித்தெழுந்தார் செல்வராஜ்.

அவருடைய சட்டை பையில் மேரி அம்மாவின் கடிதமும்,
அவருடைய சட்டை மேஜையில் மாலாவின் டைரியும் இருந்தன.
அவற்றைக் கண்டு செல்வராஜ் ஆச்சர்யமடைந்தார்.
அந்த டைரியை புத்தகமாக வெளியிடும் முன் அதில் என்ன உள்ளது என்பதை அறிந்து கொள்ள விரும்பினார்.
செல்வராஜ் ஒரு பதிப்பாசிரியர்.

காலைக்கடன்களை முடித்து கொண்டு உணவு அருந்திவிட்டு அவருடைய அறைக்கு சென்று அந்த டைரியைப் படிக்கலானார்..

" கடவுள் யார்?
ஷாத்தான் யார்?
கடவுளை ஏன் ஷாத்தான் எதிர்க்கிறார்?
இப்படி எண்ணற்ற கேள்விகள் என் சிறுவயதிலிருந்தே எனக்குள் தோன்றிக் கொண்டே இருந்தன.
அவற்றிற்கான விடைகளை என் வாழ்க்கையில் தேட ஆரம்பித்தேன்.
தெரிந்த நண்பர்களிடம் அவற்றைப் பற்றி அதிகம் பேசினேன்.
சிலர் கடவுள் என்பவர் வேறு எங்கோ இருப்பதாகவும்,
அவரைக் சிலரே கண்டதாகவும் பல கதைகள் கூறினார்கள்.

அவற்றில் திருப்பதி அடையாத நான் தேடலைத் தொடர்ந்தேன்.
அன்று மாலை நடந்து வந்து கொண்டு இருந்தேன்.
வானம் திடீரென இருண்டது.
மாலைவேளையில் இது சாதாரணமான நிகழ்வு என்று நினைத்தேன்.
கைக்கடிகாரத்தைப் பார்த்தப் போது அது இயங்கவில்லை. அதன் முள்கள்
4:45 PM மணியைக் காட்டியவாறு நின்றன.
சற்று முன் வரை அது இயக்கத்தில் தான் இருந்தது.

ஒரே அதிர்ச்சியாக இருந்தது.
எப்போதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் தெருவில் அன்று ஆள் நடமாட்டமே இல்லை.

வேகமாக நடந்தேன்.
நிழல் போல் ஒரு உருவம் என்னைப் பின் தொடர்வதைக் கண்டேன்.

உதவிக்கு யாரையாவது அழைக்கலாமென்று அலைபேசியை எடுத்தேன்.
அதுவும் இயங்கவில்லை.
என் இதயம் வேகமாக துடிப்பதை உணர்ந்தேன்.
இந்த மாதிரி என்றும் நான் உணர்ந்ததில்லை.
அது தான் பயம் என்று உணரும் நிலையில் கூட நான் இல்லை.

திடீரென அலைபேசி ஒலித்தது.
அதை எடுத்துப் பார்த்தேன்.
நம்பர்கள் எதும் தெரியவில்லை.

அழைப்பு தானாகவே ஏற்கப்பட்டது.
மறுமுனையில் ஒரே நிசப்தம்.
எனக்கும் பேச நாக்கு எழவில்லை.

நிசப்தம் களைந்து, " ஹாய்! மாலா, எப்படி இருக்கிறாய்? ", என்றது அந்த குரல்.
" நீங்க யாரு? என்னைத் தெரியுமா? ", என்று கேட்டேன்.

" ஹாஹா. நான் யார்? நான் யார்? அதுவே உனது தேடல்.
உன்னை ரொம்ப நாட்களாகப் பார்க்கிறேன்.
நீ என்னைத் தேடுகிறாய்.
சரி, உன்னை பார்த்து பேசலாமென்று வந்தேன்.
ஆனால், நீ பயந்துவிட்டாய்.
பயந்த உன் முன் நான் தோன்றினால், நீ மயக்கமடைந்து மூர்ச்சையாகிப் போவாய்.
அதான் அலைபேசியில் தொடர்பு கொண்டேன். ", என்றது அந்த குரல்.

" எனது தேடல் இருவரைப் பற்றியது அதில நீங்கள் யார்? ", என்றேன்.

" உன்னிடம் வெளிப்படுத்துவதற்கான வேளை வரவில்லை.
உன்னுள் உள்ள அந்த பயத்தை நீ மரணிக்கச் செய். இல்லையெனில் அது உன்னை மரணிக்கச் செய்துவிடும். ", என்று அழைப்பைத் துண்டித்தது..
மீண்டும் எல்லாம் பழைய நிலைக்குத் திரும்பியது.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (9-Sep-17, 10:40 pm)
பார்வை : 427

மேலே