விமர்சகன்

பாதையில் போவோரையும், நடப்பதையும் பார்த்து, ரசித்து, பக்கத்தில் நின்ற தன் நண்பன் ரவிக்கு விமர்சித்தபடி நின்றான் சுரேஷ். பத்திரிகைக்கு விமர்சனம் எழுதிப் பழகிய தோஷம் சுரேசுக்கு அவன். எந்தக் கூட்டத்துக்குப் போனாலும் பேச்சாளர் பேச்சில் பிழை கண்டு பிடிக்கத் தவற மாட்டான். எதிலும் ஒரு சந்தேகம். ஒரு கேள்வி பிழை பிடிக்காமல் விட்டால் அவனுக்கு மன திருப்தி கிடையது

ஒரு பெண் கறுப்புக் கண்ணாடி அணிந்து பாதையில் செல்வதைப் பார்த்து.
“உவள் கெதியிலை தடுக்கி விழப்போறாள்.”

ஒரு கிழவன் தல்லாடித் தல்லாடி செல்வதைப் பார்த்து
“இந்த கிழவன் ஒரு கைத்தடியை வைத்திருக்கலாமே”

ஒரு சிறுவன் சிகரட் பிடித்தபடி செல்வதைப் பார்த்து
“இது பெற்றோர் வளர்த்த வளர்ப்பு”

ஒருவன் சுவரில் அரசியல்வாதியின் படப் போஸ்டரை ஓட்டுவதை பாரத்ததும்.
“கெதியிலை போஸ்டருக்கு சாணம் வீசப்படும்”

பென்ஸ் காரில் போகிறவரைப் பார்த்து
“உது ஊழலில் உழைத்த பணம்”

தலையில் மூட்டை ஒன்றை ஒருவன் சுமந்து செல்வதைப் பார்த்து
“ஏன் உவன் இவ்வளவு பாரத்தை தூக்குவான். ஒரு தாள்ளு வண்டி வைத்திருக்கலாமே”

ஒரு போலீஸ்காரன் கடையில் சாமான் வாங்குவதை கண்டு
“ஓசியிலை வாங்குறார் போலத் தெரியுது”

ஒரு மாணவி பல புத்தகங்களை சுமந்த படி செல்வதை பார்த்து
“அப்படி என்ன படித்துக் கிழிக்கப் போறாள் உவள்”.

ஒரு’ ஆணும் பெண்ணும் ஸ்கூட்டரில் போவததைப் பார்த்து
“பின்னுக்கு இருப்பது உவனின் மனைவியா காதலியா”?

“விரைவில் முடி வளரும் தைலம் வாங்குங்கோ” என்று கூவி விற்பவனைப் பார்த்து
“உவன் சரியான ஏமாற்றுக்காரன்.”

மாம்பழங்கள் மலிவு மலிவு என்று கூவி விற்பவளைப் பார்த்து
“உது எல்லாம் அழுகிய பழங்கள் அது தான் மலிவு”

நண்பனின் விமர்சனத்தைக் கேட்டு பொறுமை இழந்தான் ரவி.

“அது சரி சுரேஷ் உன் பார்வை எபோதும் நெகடிவ்வா?. ஒன்றையும் இதுவரைக்கும் நீ நல்லதாய் சொல்லவில்லையே. நீ போட்டிருக்கும் சேர்ட் முதுகிலை கிழிந்து இருக்கு அதை முதலில் கவனித்தாயா?. யாரும் உன்னைப் பார்த்து சேர்ட் வாங்க காசு இல்லையாக்கும் இவனுக்கு என்று விமர்சிக்கப் போகிறார்கள்” என்றான் ரவி.
*******

எழுதியவர் : பொன் குலேந்திரன் – கனடா (10-Sep-17, 4:08 am)
பார்வை : 143

மேலே