தீவிரவாதி

நெடுநேரமாய் தண்டாவாளத்தையே பார்த்து கொண்டிருந்தார் அந்த பெரியவர்..
தொலை தூரத்தில் இசை போல கேட்ட சப்தம் மெதுவாய் இரைச்சலாய் மாறி முன்னேறி கொண்டிருந்தது.
நடை மேடையில் வெளிச்சம் பாய்ந்து கொண்டிருந்தது..
அவரின் கண்களின் கீழ் கருவளையங்கள் இருள் போல் கவ்வி கொண்டிருந்தது..
ஏற்கனவே எடுத்த டிக்கெட் இருக்கிறதா என தன் சட்டை பையை துழவி ஊர்ஜிதப்படுத்தி கொண்டு ரயிலில் ஏறி ஜன்னலோர ஒற்றை சீட்டில் தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டார்..
ஒவ்வொரு மின் விளக்கும் படிப்படியாய் மூர்ச்சையற்றது.
இருள் பரவ துவங்கியதும் மின்விசிறியின் சப்தமும் ரயில் சக்கரத்திலெழும் தடக் தடக் என்ற சப்தமும் இதய சப்தத்தை விட மெதுவாகவே கேட்டது போல பிரமை வந்து சென்றிருந்தது..
பெரும்பாலானோர் நித்திரையை வரம் வாங்கி வந்திருந்தனர்.
ஜன்னல் வழியே வெளி உலகத்தை இருளில் தேடி கொண்டிருந்தார்.
அப்போது ஏதோ ஒரு சப்தம் மனதிற்குள் இடைச்செறுகல் போல் வந்து இம்சித்தது..
கொஞ்ச நேரத்தில் இரயில் பெட்டி கொஞ்சம் வழக்கத்திற்கு மாறாய் தள்ளாடியது,உள்ளுணர்வு சொன்னது போலவே இரண்டு பேட்டிகளுக்கு இடையேயான இணைப்பு லேசாய் சுழன்று வெளியேற நேரம் பார்த்து கொண்டிருந்தது..
சடாரென அவசர நிறுத்தத்துகான செயினை பிடித்து இழுத்ததும் அதிக சப்தத்துடன் ஊர்ந்து சென்று நின்றது.
தூக்கம் கலைந்தவர்கள் முறைத்து பார்த்தனர் தலையில் குல்லாவை பார்த்ததும் சிலர் முணுமுணுத்தனர்.அருகில் வர பயந்து கொண்டு அவசரமாய் யாருக்கோ ஒருவர் போன் செய்தார்.அதற்குள் அதிகாரிகள் வந்ததும் எல்லோரும் ஒரு சேர அவர்களின் பக்கம் ஒதுங்கி கொண்டனர்.இரயிலை நிறுத்தியதற்கான காரணத்தை சொன்னதும் அதிகாரிகள் சோதனையிட்டு அதை உறுதிபடுத்தி கொண்டனர்..
தக்க சமயத்தில் பல உயிர்களை காப்பாற்றி உள்ளீர்கள் உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை என்று கை குலுக்கி விட்டு இணைப்பை சரி செய்ய ஊழியர்களை அழைத்து சென்றனர்..
கூட்டத்திலிருந்த சக பயணிகளின் ஒவ்வொருத்தரும் நன்றி தெரிவித்தனர்..அந்த ஆளை பார்த்ததும் ரயிலுக்கு குண்டு வைக்கதான் ஏறினானோனு பயந்துட்டேன் தெரியுமா என கூட்டத்துக்குள் யாரோ இருவர் பேசியது காதில் விழுந்ததும் இயல்பாய் ஒரு வலி மிகுந்த புன்னகையை உதிர்த்து விட்டு திரும்பி கொண்டார்..
பழுது சரி செய்யப்பட்டு ஏறி அமர்ந்து மீண்டும் ரயில் பெட்டியின் ஜன்னலோரத்தில் அமர்ந்ததும் பழைய நினைவுகள் படர துவங்கியது.

அன்றும் இதே போன்ற ஒரு ரயிலுக்காகத்தான் தன் மனைவியுடன் காத்திருந்தார்.அவளுக்கு தன்னுடன் ரயில் பயணம் செய்ய வேண்டுமென நெடுநாள் ஆசை.திருமணமான மூன்றாம் மாதம் புதிதாய் ஒரு உயிர் தங்கள் வாழ்வில் உதித்ததை சந்தோசமாய் கொண்டாட அவளின் கனவு பயணத்தை உயிர்பிக்க ஒரு சுற்றுலாக்காக ரயிலை எதிர்பாத்து கொண்டிருந்தனர்..தூரத்தில் ரயிலின் சப்தம் சங்கீத சிணுகலாய் ஆரம்பித்து அருகில் வர வர மொத்த சங்கீத ஸ்வரங்களையும் ஒற்றை ஓசையில் வாரி இறைத்து கொண்டிருந்தது.ஏறி அமர்ந்ததும் சுற்றி நின்ற கண்களெல்லாம் தங்களையே பார்பது போன்ற பிரமையில் தலை கவிழ்த்து சந்தோஷ சம்பாஷணை செய்து கொண்டனர்..இடை இடையே பல நிறுத்தங்களையும் பல மொழி பேசுபோவரையும் கடந்து போய்க் கொண்டிருந்தது..
ஏங்க எனக்கு சூடா ஒரு காபி வேணும்க ..அதோ அந்த ஸ்டால்ல ப்ரஸ்ஸா போடுறாங்க பாருங்க என்றதும் நடைமேடையில் இறங்கி கடையை அடைந்திருந்தார்.கூட்டமாய் இருந்தாலும் தன் மனைவி ஆசை பட்டதை வாங்கி விட்டோம் என்ற மகிழ்ச்சி மேலோட்டமாய் வந்து சென்றது.இரயில் மெதுவாய் நகர ஆரம்பித்ததும் தன்னுடைய இரயில் பெட்டி கடந்து சென்றதை உணர்ந்தார்..சூடான காபி கையை சுட ஆரம்பித்ததும் பக்கத்து பெட்டியில் ஏற நினைத்த போது அதிலிருந்து இரண்டு பேர் குதித்தனர்..இன்னும் சரியாக ஒரு நிமிடத்தில் பாம் வெடித்துவிடும் தலைமைக்கு தகவல் அனுப்புவோம் என்று ஹிந்தியில் சொல்லியவாறு காபி குவளையுடன் எதிரே வந்தது தெரியாமல் எதிர் திசையில் அவசரமாய் நகர்ந்து சென்றனர்..நடுக்கத்தில் காபி சூடாய் கைகளில் கொட்டியது.ரயில் வேகமெடுக்க ஆரம்பித்தது.தடக் தடக்கென்ற சப்தம் மரண ஓலமாய் கேட்டது.மனைவி எட்டி பார்த்து சீக்கிரம் வருமாறு கையசைத்தாள்..தனக்கு அவள் பிரிந்து செல்லும் போது கடைசியாய் கையசைத்து பை சொல்லுவது போலிருந்தது..செய்வதறியாது அவளை நோக்கி சேர்ந்து சாக முற்பட்டு தொடர்ந்து மூச்சிரைக்க ஓடினார்.தன் மனைவி முந்தி சென்று விட்டாள்.ஆம் அந்த குண்டு வெடிப்பில் அவள் உடல் சிதறி போயிருந்தாள்..கொத்து கொத்தாய் உடல்கள் குற்றுயிராய் போயிருந்தது.உயிரின் வலி கண்ணீர் செறிய அழுது ஓயும் முன்பே சந்தேக கேஸில் பிடித்து சென்று விசாரணை கைதியாகவே இருபது வருடங்களை இழக்க வைத்து விட்டனர்...
இன்றுதான் நிரபராதி என நடைபிணத்திற்கு விடுதலை கொடுத்து அவளற்ற திறந்தவெளி சிறைசாலையாய் மாறியிருந்த வெளி உலகத்தில் பிரவேசிக்க செய்து விட்டனர்..

ரயில் அவர் இறங்கும் ஊரை வந்தடைந்து பெரு மூச்சு விட்டு நின்றது.நினைவு கலைந்து சொந்த மண்ணில் காலடி எடுத்து வைத்ததும் எதிரே ஓட்டபட்டு இருந்த நாளிதழில் தலைப்பு செய்தியை வாசிக்க நேரிட்டது.
"ரயில் குண்டு வெடிப்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தீவிரவாதி கைது.."
கொஞ்ச நேரம் முன்பு அந்த இருவர் பேசி கொண்ட வார்த்தை சுரீரென மீண்டும் தாக்கியது..

எழுதியவர் : சையது சேக் (10-Sep-17, 4:27 pm)
சேர்த்தது : சையது சேக்
Tanglish : theeviravathi
பார்வை : 155

மேலே