பதிலில்லா கேள்விகளோடு
நீட் நுழைவு தேர்வு எனும் இறுதி
வாயிலில் நுழைபவர்கள் மட்டுமே
இனி வருங்கால மருத்துவர்கள்
எனச் ஆணையிட்ட அரசு...
என்றால் அதுவரை வந்தவர்கள்
திரும்பி போக வேண்டியது தானோ
விழுந்து விழுந்து படித்த
பன்னிரண்டு வருட தவமும்
கடந்து வந்த நீண்ட பயணமும்
எதற்கு எனக் கதறும் மாணவர்கள்
இறுக்க சாத்தப்பட்ட கதவுகளின் வாசலில் ...!
அம்பானி மகளுக்கும் அனிதாவுக்கும்
ஒரே வானம் ஒரே மழை என
ஒரே கல்வியை தந்திடுமா என் நாடு...
அந்த நகரத்து மாணவனும்
என் கிராமப்புறது மாணவனும்
ஒன்றென இயம்பிட முடியுமா என் கூடு ..
எல்லாம் பெற்ற மேல்வர்க்கமும்
எதுவும் இல்லா கீழ்வர்க்கமும்
ஒன்றென மாறித்தான்
போய்விடுமா இங்கு
சாதிகள் இல்லையடி பாப்பா
என்று முண்டாசுக் கவிஞன்
சொன்னது நிஜம் என ஆகிடுமா
அது என்று
பூணூல் என்று ஒன்றுமில்லை
பார்ப்பனர் என்று ஒன்றுமில்லை
தலித்து என்று ஒன்றுமில்லை
என்று தான் நாம் கொடுத்த
அடையாளங்கள் அழிந்திடுமா...
சிறுபான்மை இனம்
என்றும் இல்லை
பெரும்பான்மை என்ற
பேச்சும் இல்லை
என்ற நிலை தான்
வந்திடுமா
எல்லோரும் சமம்
என ஆகிடுமா
எல்லோருக்கும் ஒரு நீதி
என ஆகிடுமா
எல்லாக் கேள்விகளுக்கும்
பதில் ஏதோ
விடை தருவது
அது யாரோ
பதிலில்லா கேள்விகளோடு
இப்பக்கமும் அப்பக்கமும்
விடைதெரியா வினாக்களோடு
அவர்களும் நாமும்
வரையறைக்குள் வராமல்
முடிவுறும் விவாதங்கள்
முடிவில்லா தொடர்கதைகளாய்
தமிழனின் குமுறல்கள்
முடிவுறா விவாதங்கள்
குதிக்கிறது அடுத்த
சூடான தலைப்புகளில்
முந்தய பிரச்சனைகள்
முடிவுக்கு வராமலே
சூடாறி மடிகின்றன
செய்தித்தாளின் மடியிலே
துடுப்பில்லாமல் கரை
ஒதுங்க முடியாத மாணவர்கள்
கேட்பாரில்லாமல் கரைந்து
போன சில கனவுகள்
விடைதெரியா விழித்த
சமூகமாய் நாம்
போராடித்தான்
வாழ்ந்து பாப்போம்
நீரோடை போல
படித்துத் தேறுவோம்
ஊர்போற்ற தான்
வாழ்ந்து காட்டுவோம்
தேர்போல மெல்ல
மெல்ல எழும்பட்டும்
நம் பகுத்தறிவு சிந்தனை
பிறைபோல மெல்ல
மெல்ல கரையட்டும்
நமக்குள் ஊற்றப்பட்ட மூடங்கள்
விழித்த மாணவச் சமூகமே
பதினெட்டை கடந்த போது
உன் ஓட்டை பதிவு செய்
உன் அறிவு சுட்டிக்காட்டுகிறபடி
மறக்காமல் ஓட்டை பதிவு செய்துகொள்
தேர்தலில் உன்னை ஆள்பவனைத் தேடு
உன் சாதியில் அல்ல
மனித சாதியில்
விழித்த மாணவச் சமூகமே
காலம் கனியும் போது
திருமணம் செய்துகொள்
காதலித்தோ பெற்றோர் காட்டியோ
மறக்காமல் திருமணம் செய்துகொள்
உன்னவளைத் தேடு
உன் சாதியில் அல்ல
மனித சாதியில்
சாதிகள் இல்லையடி பாப்பா
என்று சொல்ல முடியவில்லை
சாதிகள் தொலையட்டும்டா
என்று சொல்லிவிட்டுப் போகிறேன்.