நன்றியுணர்வு

நன்றியுணர்வு
பாவலர் கருமலைத்தமிழாழன்

கால்களிலே ஊற்றிட்ட நீரைத் தென்னைக்
----கலசமாக்கித் தலைகொடுத்து நன்றி காட்டும்
கால்களினைச் சுற்றிவந்து நாய்தான் போட்ட
-----கையளவு உணவிற்காய் நன்றி காட்டும் !
பால்கறந்த போதுமீந்த புல்லுக் காகப்
----பசுநம்மை முட்டாமல் நன்றி காட்டும்
நூல்கற்ற மனிதர்தாம் உதவி பெற்றும்
----நுவலாமல் மறைக்கின்றார் நன்றி கொன்றே !

செஞ்சோற்றுக் கடனுக்காய் நன்றி காட்ட
----செவ்வுயிரை அறத்துடனே கொடுத்தான் கர்ணன்
வெஞ்சமரில் சாய்ந்தபாரி மகளி ருக்காய்
----வேலியானார் கபிலர்தாம் நன்றி யோடே !
கொஞ்சுதமிழ் சுவைக்கநெல்லி அதியன் ஈயக்
----கொண்டஅவ்வை பாபொழிந்தார் நன்றி யோடு
கிஞ்சித்தும் செய்நன்றி நினைத்தி டாமல்
----கீழானார் மனிதரின்று தன்ன லத்தால் !

கற்பித்த ஆசானை நினைத்து நாளும்
----கடமைதனைச் செய்வோனைப் போற்றல் போல
பெற்றிட்ட சிறுவுதவி என்ற போதும்
----பெருமையுடன் சொல்பவனைப் போற்றும் ஞாலம் !
பெற்றோரைத் தாய்மொழியைப் பிறந்த நாட்டைப்
----பேணுவோனே நன்றியுடை மனித னாவான்
உற்றதொரு குறள்கூறும் கருத்தைப் போல
----உய்வின்றிப் போயிடுவர் மறந்தால் நன்றி !
( 9443458550)

எழுதியவர் : பாவலர் கருமலைத்தமிழாழன் (13-Sep-17, 6:42 pm)
பார்வை : 81

மேலே