எல்லாம் சினிமா மையம்
நடிகன்; நாயகன் ;
நாலும் தெரிந்தவன்;
நாடாளத் துணிந்தவன்.
உணவு உடை
குளியல் கழுவல்
அனைத்துக்கும் அவனே
பரிந்துரை செய்கிறான்.
துயிலுரித்தது முதல் உறங்கப்போகும் வரை
உபயோகிப்பதெல்லாம் அவன் கைகாட்டியது தான்.
பள்ளி மாணவிகள் வன்முறைகளுக்காளான போது
பரிகாசம் செய்த கூட்டம்
ஓவியாவைக் காக்க ஓடிவரும்.
விவசாயி விஷம் அருந்துகையில்
வேடிக்கை பார்த்த கூட்டம்
நாட்டை விட்டு ஓடத்தயாராகும்
நடிகனுக்கு நியாயம் கேட்கும்.
தேசத்திற்காக போராடியவனையெல்லாம்
தெருவில் நிற்க வைத்துவிட்டு
நடித்தவனை நாற்காலியில் அமரவைப்போம்.
நேற்றைய போராட்ட நிகழ்வினை
கடைசி பக்க மூலைக்குத் தள்ளி
தலைப்புச் செய்திக்கு தயாராகிறது
நடிகன் முனுமுனுத்த அரசியல் வார்த்தை.
மனம் தட்டுதடுமாறிய வயதில்
வாழ்க்கையை சினிமாவில் தேடியதில்
போதையை போதித்தான் புத்தன்.