சினிமாக்காரன் காதல்
அறையில் என்னோடு கதைத்து கொண்டிருந்தது மின் விசிறி. யாருமற்ற இந்த அறையை நிறைப்பது இந்த மின் விசிறி மட்டும் தான். மனிதமற்ற மனிதர்களோடு பேசுவதை விட, இந்த விசிறியுடன் பேசுவது என் இயல்பு. உண்ண உணவில்லை. தின்ன காற்று இருக்கிறது. இன்றோடு பத்தாவது நாள் ஸ்ட்ரைக். பத்தாவது நாள் பட்டினி. பிச்சைக்காரன் என்றால் ரோஷம் இருக்காது. யாரிடமாவது பிச்சை எடுத்து வயிற்றை ரொப்பிக் கொள்ளலாம். சினிமாக்காரன், கொஞ்சம் ரோஷம் இருக்கிறது.
நேற்று இரவு குடித்த டீயும் பண்ணும் செரிமானம் ஆகி இருபது மணி நேரம் ஆகிறது. உலகம் பார்ப்பது வெற்றியாளர்களை தான். என்னை போல் சினிமா எடுபிடிகள் நிலை அறிவதில்லை. அறியவும் வேண்டாம். எழுத்தாளன் என் கனவு. எடுபிடியானேன் சில நிஜமற்ற எழுத்தாளர்களுக்கு. பல நேரங்களில், எழுத்து என்னுடையது, பெயர் பெரிய மனிதர்களுடையது.
சாதிக்கப் போகும் அந்த பெரிய நாளிற்காக காத்துக் கொண்டிருக்கும் என்னை போல் பலர் இங்கே, வயிரற்று வாயற்று வாழ்க்கையை தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். அதில் நானும் ஒருவன் என்பதில் பெருமிதம் இல்லை என்றாலும், பொறுமை மிக்கவன் என்பதில் ஓர் பெருமை.
உனக்கு வயிறு என்று ஒன்று இருக்கின்றது என்பதை போல் சத்தம் கொடுத்த என் வயிற்றை தண்ணீர் ஊற்றி அணைத்தேன் . பதினேழாவது முறையாக கவிதாயினி அனுப்பிய கடிதத்தை படித்தேன்.
"எங்கப்பன் குடிக்க போன இடத்துல, கூட்டியாந்தான் ஒரு கூனன. சீலையை மாத்த சொல்லி, அப்பவே மாலையை மாத்திப்புட்டான். கேக்க எங்கம்மா இல்ல. பல நாளா உன்கிட்ட சொல்லினு இருக்கேன். என்னிக்கு எங்கப்பன் குடிச்சிட்டு ஒரு நா என்ன தொட போறான்னு தெரியல. நீ போய் ஒரு வருஷம் ஆச்சி. நம்ப ஊர்லயே குடிக்காத ஒரே ஆளு நீ தான். வர்றவன் போறவன் எல்லாம் என் மாராப்ப பாக்க, நீ மட்டும் தான் உள்ள இருந்த என் மனச பாத்த. ஊர விட்டு போற வரைக்கும் நீ என் உள்ளங்கையை கூட தொட்டதில்லை.
உன் கண்ணியத்துக்கு தான் அடிமையா இருக்கிறேன். உன் எழுத்துக்கு நான் என்றும் ரசிகை. கூனன் ன்றதால இல்ல, உன்ன மனசுல வச்சிட்டு யாரையும் கட்டிக்க முடியாது. கௌரவமா என்ன வந்து ஊரறிய கல்யாணம் பண்ணி கூட்டுனு போ. இல்லன்னா .. இல்லன்னா என்ன பண்ணனும் னு தெரியலை யா . ஒரு பொம்பள தனியா வாழறது ரொம்ப கஷ்டம் யா. ஏதோ என் பொழப்புக்கு காய்கறி வித்து ஒப்பேத்தரேன். கண்ணியமா வாழனும் னு நெனக்கிறேன். என்னை கரைசேத்து."
கவிதாயினி, என் எழுத்துக்கு வித்து. அவள் பேசுவது மிகக் குறைவு. கண்கள் பேசியது தான் மிக அதிகம். அவள் அப்பன் ஒரு மகா குடிகாரன். குடிக்க காரணங்கள் வெறும் சாக்கு. பாவம், அவள் பிறந்தவுடன் பரலோகம் சென்று விட்டாள் அவள் தாய்.
ஊரையே திரும்பி பார்க்க வைக்கும் கறுப்பழகி. இன்று வரை கண்ணியமாக வாழ்கிறாள். காய் கரி விற்பது, தேயிலை பறிப்பது என அவள் பிழைப்பை ஒட்டுகிறாள். ஊரை விட்டு வரும் போது கூட , அவள் சேமிப்பிலிருந்து பணம் தந்து தைரியமூட்டி அனுப்பினாள்.
சினிமா எல்லோருக்கும் கை கொடுப்பதில்லை. நடிகைக்கு குடை புடிப்பது முதல் எல்லா விதமான வேலைகளும் செய்கிறேன். எல்லாவற்றிக்கும் தேவை படுகிறது பணம். பணம் இருந்தால், இன்று நான் ஓர் மிக பெரிய எழுத்தாளனாக உலா வந்திருப்பேன். திறமையை நம்பி வந்தவர்களுக்கு சிரமம் அதிகம் பார்க்க முடியும்.
ஏதுமற்ற நிலையில், நம்பிக்கையும் திறமையும் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றன. ஊருக்கு செல்ல கூட காசில்லாத என் நிலையை எப்படி என் கவிதாயினிக்கு சொல்வது. என்னோடு அவள் வந்தால், என்னை போல் அவளும் உணவின்றி உயிர் வாழ கூடும். என் காலம் மிக தொலைவில் உள்ளது. எனக்காக அவள் என்னையும் சேர்த்து காப்பாற்றுவாள் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.
ஆனால் நான் என்ன செய்வேன் அவளுக்காக. என் எழுத்துக்களை அவள் காலடியில் சமர்ப்பிப்பதை தவிர. அவள் காதலிப்பது என் வைராக்கியதையும் கண்ணியத்தையும். அதை இழந்து நான் அவளோடு ஊர் சென்று வாழ்ந்தால், நான் நானாக எப்படி இருப்பேன். என் காதல் வாழ வைக்க, வாழ்த்துகிறேன் என் காதலியின் புது மண வாழ்க்கையை . வாழட்டும் வலிகள் என்னோடு மட்டும்.