சமரசம்

"பிரியா கண்ணு உன் தோஸ்துகளெல்லாம் கூட்டிண்டு வா, பூஜையாக போகிறது"...அன்று என் தாத்தா என்னை அழைத்தது இன்னமும் காதில் ஒலிக்கிறது .  ஆம், நான் தான் பிரியா. அன்று எங்கள் வீட்டில் விநாயகர் சதுர்த்தி பூஜை. அன்று அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து விட்டேன். அப்பொழுது தானே, அம்மாவுக்கு ஒத்தாசை செய்யும் சாக்கில் சில மோதகங்களை அமுக்கி விடலாம்!  ஆனால், அன்று அம்மா கட்டாயமாக உண்ணக் கூடாது; பிள்ளையாருக்கு படைத்த பிறகே உண்ண வேண்டும் என்று கட்டளை இட்டுவிட்டார்.  வேறு வழியில்லாமல் ஆசைகளை அடக்கிக் கொண்டு நாவைக் கட்டி வைத்து போராடி , இறுதியில் விரல்களில் ஒட்டியிருந்த பூரணத்தை நாவினில் வைக்க, என் அம்மா பார்த்துவிட்டார்.  அக்கம் பக்கத்தவர்கள் உச் கொட்டும் அளவிற்கு அளவில்லா அர்ச்சனைகள்.  அப்பொழுது, எனக்காக பரிந்து பேசி, " அவ சின்ன கொழந்தை.... அவளுக்கு என்ன தெரியும்?", என சொல்லி அம்மாவிடம் இருந்து என்னைக் காப்பாற்றியதும் என் தாத்தா தான்.

     " பிரியா, திவ்யா, வசந்தி, ஜெனி ,  எல்லாரும் உள்ள வாங்கோ....வந்து பிள்ளையார் முன்னாடி மூணு தோப்புக்கரணம் போட்டுட்டு, சாமி, நல்ல புத்தியை கொடுனு வேண்டிட்டு மோதகத்தை எடுத்துக்கோங்கோ"

     " சரி தாத்தா"

     " ஏண்டியம்மா ஜெனி நீ மட்டும் ஏன் வெளியில் நிக்கிற ? உள்ள வா....பிரியா அவள உள்ள கூப்பிடு".

     " இல்ல தாத்தா ... அவ கிறிஸ்டியனா.... அப்புறம் அவ நம்ம ஜாதியும் இல்லயா....அதான்...அவ உள்ள வர மாட்டேங்குறா"

     " அடியே அசடு அசடு, மனுஷாளுக்குத் தாண்டி சாதி மதமெல்லாம். பகவானுக்கு எல்லாக் குழந்தைகளும் ஒன்னு தான்.  நீ போய் முதல்ல அவள உள்ள கூட்டிண்டு வா".

     "சரி தாத்தா" .  பொதுவாகவே , நான் தாத்தா கூறுவது எதற்கும்  மறுப்பு தெரிவித்ததில்லை.  ஏனெனில், தாத்தா ஒரு சமத்துவவாதி.  சாதி, மதம், உயர்ந்தவன், தாழ்ந்தவன், பணக்காரன், ஏழை என்று பாராமல் அனைவரையும் சமமாகப் பார்க்க வேண்டுமென்ற சமத்துவ விதையை சிறு வயதிலேயே என் நெஞ்சில் விதைத்தவர்.

     காலச்சக்கரம் வேகமாக உருண்டோடியது. இல்லை, எங்களையும் சேர்த்து உருட்டிக் கொண்டே ஓடியது.  ஆம், பால் மணம் மாறா மழலைப் பருவத்திலிருந்து பருவம் கொஞ்சும் பதினாறினை எட்டிவிட்டேன்.

      அன்று , வீடு சற்று பரபரப்பாகவே இயங்கிக் கொண்டிருந்தது. ஆம், என் மனதும் பதட்டத்தில் படபடத்துக் கொண்டிருந்தது.  ஏனெனில், அன்று பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள்.  பரபிறப்புகளுக்கு இடையில் , தொலைபேசி ஒலித்தது.  எதிர்முனையில் எனது சித்தி.  தொலைபேசியை எடுத்தது என் அப்பா.

      "அத்தான் நம்ம குடும்பதுலயும் ஒரு டாக்டர் உருவாக ஆரம்பிச்சுட்டாங்க போல!"

     " என்ன உளர்ற... சுத்தி வளைக்காம தெளிவா சொல்லு"

     " சரி நான் விஷயத்துக்கு வர்றேன். உங்க பொண்ணு....அதான் நம்ம பிரியா....பத்தாம் வகுப்புல 485 மார்க் வாங்கியிருக்கா!".

     "ஏ , கௌரி நிஜமாத்தான் சொல்றியா?"

     "ஆமா, அத்தான்".

     அன்று , வீடே கோலாகலமானது.   தொலைதூரத்து உறவினர்களுக்கும் அழைப்புகள் பறந்தன; சந்தோஷம் பகிரப்பட்டது; என் தலை மீது சுமத்தப்பட்ட பாரம் மட்டும் பன்மடங்கானது.

"பிரியா கண்ணு , நீ பெரிய டாக்டரா ஆகி நம்ம ஊர்லயே பெரிய ஆஸ்பத்திரி திறப்பியாம்....தாத்தா உனக்கு ஒத்தாசையா அதே ஆஸ்பத்திரிலேயே கம்பவுண்டெர் ஆயிடுவேணாம்....".

"அட , போ தாத்தா. நான் மட்டும் டாக்டர் ஆகட்டும்....அப்புறம் பாரு உன்ன ராஜா மாதிரி வச்சி பாத்துக்குவேன்".

"சரிங்கம்மா, பெரிய மனுஷி!".

இவ்வாறாக, பற்பல கணவுகளுடனும் கற்பனைகளுடனும் வாழ்க்கை சுழன்று கொண்டிருந்தது. அந்த வருடம், வாழ்க்கையின் திசையை நிர்ணயிக்க போகும் மிக முக்கியமான வருடம். ஆம், நான் அந்த வருடம் தான் பன்னிரெண்டாம் வகுப்பில் ஆதி எடுத்து வைத்தேன்.

அடி எடுத்து வைக்கும் பொழுது என்னவோ, வகுப்பறை என்று தான் நினைத்திருந்தேன்; அடி எடுத்து வைத்த பின்னரே அது கடிவாளம் இடப்பட்ட குதிரைகள் ஓடும் பந்தயத் திடல் என்பதை உணர்ந்து கொண்டேன். மதிப்பெண்ணை மட்டும் இலக்காக வைத்துக் கொண்டு ஓடும் ஐந்தறிவு ஜீவங்களுடன் என்னை அறியாமல் நானும் ஐக்கியமானேன்.

மதிப்பெண்ணிற்காக வேண்டி நான் செய்த தியாகங்கள் பல. எனக்காக என் குடும்பத்தினர் செய்த தியாகங்கள் பல. இவ்வாறான தியாகங்கள் என் மனதில் ஏற்றி வைத்த சுமைகளும் சுமைகள் தந்த அழுத்தங்களும் பற்பல. மன அழுத்தத்திலும் குழப்பத்திலுமே ஓர் ஆண்டு ஓடிவிட்டது.

பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகின. இல்லை, இல்லை, பந்தய முடிவுகள் வெளியாகின. தேர்வெழுதச் செல்லும் பொழுது வாழ்த்து சொல்லாத உறவுகளும் கூட, வசை பாட வரிந்து கட்டிக் கொண்டு வந்திவிட்டனர். 'சிரத்தையோடு படிக்கவில்லை', 'கவனக் குறைவு', 'வயதுக் கோளாறு', 'சோம்பேறித்தனம்' என எனது மதிப்பெண் குறைந்ததற்கும் மறுத்துவத் துறையில் இடம் பெற முடியாமல் போனதற்கும் ஆயிரமாயரம் காரணங்கள் சொல்லிக் களிப்படையும் கல் நெஞ்சங்களுக்கு என் கடின உழைப்பு என்ன புரியவா போகிறது.

அன்று கலை கட்டியிருந்த வீடு, இன்று களையற்று இருந்தது. வீடெங்கும் பரவியிருந்த நிசப்தம் என்னை நிற்க வைத்துக் கேள்விக் கணைகளை தொடுப்பது போல் இருந்தது.

கண்ணோரம் வழிந்தக் கண்ணீரைத் துடைத்தபடி தாத்தாவின் கால் மாட்டில் மண்டியிட்டு உட்கார்ந்தேன். ஒரு கை என் தலையை மெதுவாக வருடிவிட்டது. நிமிர்ந்து பார்த்து, தாத்தாவிடம் ஒரு கேள்வி கேட்டேன், "சாதி இல்ல , மதம் இல்ல , உயர்ந்தவன் இல்ல, தாழ்ந்தவன் இல்ல ; எல்லாரும் சமம் தான்னு சொன்னியே தாத்தா...பகவானுக்கு முன்னாடி எல்லா குழந்தைகளும் ஒண்ணுன்னு சொன்னியே தாத்தா....வார்த்தைக்கு வார்த்தை சமத்துவம் சமரசம் னு சொன்னியே...அதெல்லாம் எங்க போச்சு தாத்தா?" கண் இமைகளை மூடியவாறு சாய்வு நாற்காலியில் சாய்ந்து விட்டார் தாத்தா. கடவுளும் கூட இப்படித்தான் பல சமயங்களில் கண்களை மூடிக் கொள்கின்றான் போலும்!!!

எழுதியவர் : ரம்யா நம்பி (16-Sep-17, 11:04 pm)
சேர்த்தது : ரம்யா நம்பி
Tanglish : SAMARASAM
பார்வை : 350

மேலே