மாலாவின் டைரி - 3

" ஐய்யோ நேரமாகிவிட்டதே!.
சுவேதா கோபப்படுவா. ", என்று என் தோழி சுவேதாவின் பிறந்தநாள் விருந்திற்கு அன்றிரவு கிளம்பிக் கொண்டிருந்தேன்.
அப்போது, தொலைக்காட்சியில் , " இன்றிரவு பலத்தக் காற்றுடன் கனமழை பெய்யும். ", என்ற செய்தியைக் கேட்டதும் விஞ்ஞான வளர்ச்சியை மேச்சி கையில் குடை எடுத்துக் கொண்டு சென்றேன்...
என் வீட்டிலிருந்து என் தொழியின் வீட்டிற்கு நடந்து சென்றால் 15 நிமிடங்களே ஆகும் என்பதால் நடந்து சென்றேன்..
காற்று வலுவடைந்து மழைத்துளிகள் முத்துகளாய் சிதற நனைந்துவிடக் கூடாதென குடையை விரித்துப் பிடித்துக் கொண்டு வேகமாக நடந்தேன்...
அப்போது, இருட்டிலிருந்து ஒருவர், " ஹேய் மாலா. மண்ணில் மழை விழும் முன்பே குடையால் தடைவிதிக்கிறீர்கள்.
அப்புறம் மழை பெய்யவில்லை என்றால் உலகம் வெப்பமாகிறது. மழையே பெய்ய மாட்டேங்கிறதே என்று அலட்டிக் கொள்கிறீர்கள். ", என்றார்..
" நீங்கள் யார்? ", என்றேன்..
" என்னைத் தெரியவில்லையா? நான் யார் என்பதே உனது தேடல். நானும் என்னைக் கண்டுபிடிக்கவே விரும்புகிறேன்.
அதற்கு நீ உதவுவாயா? ", என்றார் அந்த இருள் மனிதர்..
" நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று புரியவில்லை. இருந்தாலும் இருட்டுக்குள்ளேயே நீங்கள் இருந்தால்,
நீங்கள் யார் என்பதை உங்களால் அறிய முடியாது.
வெளிச்சத்திற்கு வாருங்கள்.. ", என்றேன்.
" நன்றாகப் பேசக் கற்றுக் கொண்டாய் மாலா.
உன் பயம் குறைந்துள்ளது தெரிகிறது. ", என்றார் அந்த இருள் மனிதர்..
அந்தக் குரல் முன்பு தொலைபேசியில் உரைத்தக் குரலே என என் மனம் சொல்லியது..
அதன் உருவத்தைக் காண நினைத்து பொறுமையாக, " நீங்கள் வெளிச்சத்திற்கு வாருங்கள். ", என்றேன்..
அந்த இருளுக்குள் இருந்து அந்த இருள் மனிதரின் கை மட்டும் வெளிச்சத்தில் நீண்டது.
" என் கையைப் பற்றிக் கொள். உனக்கு ஒரு உண்மையை உணர வைக்கிறேன். ", என்றது அந்தக் குரல்..
சற்று பயந்தாலும் அதன் கையைப் பற்றிக் கொண்டேன்.
அந்த நொடி மேகங்களுக்கு அப்பால் பறந்து கொண்டிருந்தேன்.
என்னால் நம்ப முடியவில்லை.
நடுவானில் ஒரு ஒளிவட்டம் தோன்றியது.
அதனுள் நுழைந்தேன்.
எங்கும் ஒளிமயம்...
அங்கு நான் ஜொலித்தேன்..
" நாம் எங்கிருக்கிறோம்? ", என்றேன்.
" இது நம் உலகம் தான். இங்கு ஆன்மாகள் வாழ்கின்றன. ஒவ்வொரு ஆன்மாவும் ஒளிவடிவமாக இருப்பதால், நீயும் ஜொலிக்கிறாய். ", என்றது என் அருகில் இருந்த அந்த பிரகாசமான உருவம்...
" இப்போதாவது சொல்லுங்களேன். உங்கள் பெயர் என்ன? ", என்றேன்..
" உனக்கு எப்படி அழைக்கத் தோன்றுகிறதோ, அப்படியே என்னை அழைக்கலாம்.
எனக்கென்று ஒரு வரையறை இல்லை.. ", என்றது அந்த ஒளி உருவம்..
" அப்படியென்றால் நீங்கள் கடவுளா? ", என்றேன்..
" ஆம். அனைத்தையும் கடந்து அளவில்லாமல் இருப்பதால் நான் கடவுள். ", என்றது அந்த ஒளி வடிவம்..
" நீங்கள் கடவுள் என்றால் ஷாத்தான் யார்? அவர் எங்கே? ",
என்றேன்.
" ஹாஹாஹா ", என்ற சிரிப்பொலியில் அவ்விடம் அதிர,
" ஷாத்தான் என்று தனியே எவரும் இல்லை. நான் கடவுள் என்று நீ நினைத்தால் நான் கடவுளாகத் தெரிகிறேன்.
நான் ஷாத்தான் என்று நீ நினைத்தால் நான் ஷாத்தானாகத் தெரிகிறேன்... ", என்றது அந்த ஒளி வடிவம்..
" நீங்கள் ஏன் எப்போதும் குழப்பமாகவே பேசுகிறீர்கள்?!.
", என்றேன்...
மீண்டும் பயங்கரச் சிரிப்பொலி...
" மாலா, உன்னிடம் ஒரு கேள்வி. கடவுளுக்கும், ஷாத்தானுக்கும் என்ன வித்தியாசம்? ", என்றது அந்த ஒளி வடிவம்..
" கடவுள் வணங்குதலுக்குரியவர்.
ஷாத்தான் தூற்றுதலுக்குரியவர்.
", என்றேன்..
" அதை நீ எப்படி உறுதியாகச் சொல்கிறாய்? ", என்றது அந்த ஒளி வடிவம்.
" மனித உலகில் அது குறித்து பல நூல்கள் உள்ளன. ", என்றேன்..
" ஓ! நூல்களில் இருந்தால் அவை உண்மையாக இருக்குமென்று நீ நம்புகிறாய் அல்லவா!.
ஆனால், உண்மை வேறு விதமாக உள்ளது. ", என்றது அந்த ஒளி வடிவம்..
" அது என்ன உண்மை? ", என்றேன்..
" ஜனனம், மரணம் என்ற இரண்டுமே மனித உலகம் நிலைத்து வாழ்வதற்காகவே...
இதில் ஒரு உயிர் ஜனனமெடுத்தால் மனிதர்கள் மகிழ்வதும்,
ஒரு உயிர் மரணமடைந்தால் அதற்காக மனிதர்கள் வருந்துவதும் மனித உலகின் நடைமுறையாக உள்ளது..
காரணம் மனித உணர்ச்சிகள்..
அவை மற்ற உயிரினங்களைவிட மனிதர்களிடமே மேலோங்கி காணப்படுகிறது. ", என்றது அந்த ஒளி வடிவம்..
" உண்மை தான். ஆனால்..? ", என்றேன்..
" பொறுமையாக நான் சொல்வதை சிந்தித்து உணர்ந்து பார். மனிதர்கள் தங்கள் புலன்கள் வழியாக இச்சா (ஆசைகளால்) உந்தப்பட்டு மற்ற மனிதர்களுக்கும், உயிர்களுக்கும் தீங்கு செய்கிறர்கள். பகுத்தறிவுள்ள மனிதர்கள் அல்லவா!.
அதன் தங்கள் செயல்களை நியாயப்படுத்த ஒரு ஷாத்தானை உருவகம் செய்துவிட்டார்கள்.
ஷாத்தானின் படைகளாய் பயங்கரத் தோற்றமுள்ள உருவங்களையும், பேய்களையும் உருவகம் செய்துவிட்டார்கள். ", என்றது அந்த ஒளி வடிவம்...
" நீங்கள் சொல்வதைப் பார்த்தால் ஷாத்தான் என்று யாரும் இல்லையா?", என்றேன்.
" உண்மையில் ஷாத்தான் என்று யாரும் இல்லை. அது வெறும் கற்பனை.
அந்த கற்பனையான ஷாத்தான் மனிதர்களின் மனதைத் தன்வசமாக்கிக் கொண்டு பல தீய வேலைகளைச் செய்கிறான்.. ", என்றது அந்த ஒளி வடிவம்.
அந்த நொடி நாய் குரைக்கும் சத்தம் கேட்டது..
கண் விழித்தேன்...
என் படுக்கையில் படுத்திருப்பதை உணர்ந்தேன்...
நடந்தது கனவாக இருந்தாலும், அதில் நடைபெற்ற அந்த உரையாடல்கள் எனக்கு உண்மையாகத் தோன்றியது...
அதை எனது டைரியில் எழுதிக் கொண்டிருந்தேன்.
அலைபேசி ஒலித்தது.
பேசியது சுவேதா..
" பிறந்தநாள் நல்வாழ்த்துகள். ", என்றேன்.
" நன்றி மாலா. இன்று இரவு பார்ட்டி இருக்கு. மறக்காமல் வந்திரு. ", என்று அழைப்பைத் துண்டித்துவிட்டாள்..
டைரி எழுதிவிட்டு மீண்டும் படுக்கையில் படுத்து தூங்க முயற்சித்தேன்..
கண்களை மூடியதும் அந்த ஒளி வடிவம் தோன்றியது..
அதைப் பார்த்துக்கொண்டே உறங்கிப் போனேன் என்னை அறியாமலே...