என் உயிரினும் மேலான - நெடுந்தொடர் - - - பாகம் 41

நாட்கள் நகர்ந்தன.

பிரவீன் - விஜி, காயத்ரி - நர்கீஸ் - முபாரக் இடையே பல கருத்து பரிமாற்றங்கள், சந்திப்புகள் என்று நிகழ்ந்தது.

முபாரக் - காயத்ரி இடையே நெருக்கமான சகோதரத்துவம் வளர்ந்தது. மெல்ல காயத்ரி வீட்டில் அனைவரும் முபாரக்கோடு நல்ல ஒரு சொந்தத்தை ஏற்படுத்திக்கொண்டனர். அடிக்கடி தொலைபேசி அழைப்பும் மெசேஜும் நேரில் சந்திப்பதும் என்று அவர்களின் வாழ்வில் புதிய சொந்தங்கள் உருவானது,

அடிக்கடி காயத்ரியும் "முபாரக் அண்ணா அப்டி சொன்னார் முபாரக் அண்ணா இப்படி சொன்னார்" என்று விஜி பிரவீன் அனைவரிடமும் கூறுவதிலிருந்து அவர்களுக்குள் ஒரு நல்ல புரிதல் இருப்பதை உணர முடிந்தது.

முபாரக் மற்றும் பிரவீன் இருவரும் அடிக்கடி வளவனூர் விருந்தாளிகள் ஆயினர். எப்போதெல்லாம் நர்கீஸை பார்க்க சென்றார்களோ அப்போதெல்லாம் தவறாமல் வளவனூர் சென்று விஜி வீட்டிற்கும் காயத்ரி வீட்டிற்கும் சென்று வருவதை ஏற்படுத்திக்கொண்டனர்.

ஆரம்பத்தில் ஒன்றும் பெரிதாக யாரும் இதை கண்டுகொள்ளவில்லை, ஆனால் கொஞ்ச நாளிலேயே முபாரக் அடிக்கடி காயத்ரி வீட்டிற்கு வருவதும் காயத்ரி அவனுடன் வெளியே செல்வதும் முபாரக்கின் அதிக உரிமை எடுத்துக்கொள்ளும் பேச்சும் நடவடிக்கைகளும் காயத்ரியின் தந்தைக்கு பிடிக்கவில்லை. மறைமுகமாக இதை வெளிப்படுத்த எண்ணினார்.

ஒருநாள், விஜியை சந்தித்து "என்ன விஜி, எப்படி இருக்க, வீட்டுப்பக்கம் வர்றதே இல்ல?" என்றார் காயத்ரியின் தந்தை.

"இல்ல அப்பா, எக்ஸாம்ஸ் நெருங்குது, அதான், ஏன், காயத்ரி கூட தான் இந்தப்பக்கம் வர்றதே இல்ல, எப்போ பிரவீன் அண்ட் முபாரக் வர்றாங்களோ அப்போதான் வர்றா" என்றாள் விஜி.

"அதான் நானும் பேசலாம்னு வந்தேன் விஜி, இந்த பசங்க வந்ததுலேந்து காயத்ரி ரொம்ப மாறி இருக்கானு நான் பீல் பண்றேன்" என்றார் காயத்ரியின் தந்தை.

"என்ன சேஞ் பா, அப்டி எல்லாம் இல்லையே" என்றாள் விஜி.

"இல்லம்மா, அவங்க அடிக்கடி வர்றது, போன் பண்றது, மெசேஜ் பண்றது இது எல்லாம் நல்லாவா இருக்கு, அவங்களுக்கே தெரியவேணாமா, ஒரு வயசு பொண்ணுக்கு இப்டி எல்லாமா மெசேஜ் போன் னு பண்ணிட்டே இருப்பாங்க?" என்றார் காயத்ரியின் தந்தை.

அவரது மனதின் எண்ணத்தை நன்றாக புரிந்துகொண்டாள் விஜி.

"இப்போ என்னப்பா பண்ணனும் சொல்லுங்க" என்றாள் சற்று கோபமாக.

"நீ கோவப்படாத விஜி, நான் சொல்றது சரியா இல்லையான்னு நீ யோசி, காயத்ரி ஒரு வெளி உலகமே தெரியாத அப்பாவி பொண்ணு, அவளோட வயசும் ஒரு அலைபாயற வயசு. இந்த பசங்க இப்டி விடாம டிஸ்டர்ப் பண்ணிட்டே இருந்தா அவ எப்படி ஸ்டடீஸ் ல கான்சண்ட்ரட் பண்ண முடியும், அது மட்டும் இல்ல, எல்லாரும் தப்பா பேசமாட்டாங்களா?" என்றார் காயத்ரியின் தந்தை.

விஜிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை, கோபத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டாள். "அப்பா, என்ன சொல்ல வரீங்க, நேரடியா சொல்லுங்க" என்றாள் விஜி.

"இல்ல, நீ தான் கொஞ்சம் பக்குவமா அந்த பசங்க கிட்ட சொல்லி காயத்ரிக்கு இனிமே போன் மெசேஜ் எல்லாம் பண்ணவேணாம், வீட்டுக்கு அடிக்கடி வரவேணாம் னு சொல்லணும்" என்றார் காயத்ரியின் தந்தை.

"அப்பா, அவங்க கிட்ட சொல்றதுக்கு எனக்கு எந்த ரைட்ஸும் இல்ல, நீங்க உங்க பொண்ணுகிட்ட சொல்லுங்க, அவங்ககூட பேசாத, அவங்களுக்கு மெசேஜ் பண்ணாத, அவங்க வர்றத என்டேர்டைன் பண்ணாத அப்டின்னு நீங்க காயத்ரிக்கு சொல்லுங்க, அப்டி இல்லன்னா நீங்க நேரடியா அவங்க கிட்ட சொல்லிடுங்க, இதுல நான் இன்வால்வ் ஆகமாட்டேன்" என்றாள் விஜி.

"இல்ல விஜி, நான் காயத்ரிகிட்ட சொன்னா அவமேல நான் நம்பிக்கை வெக்கலன்னு நெனச்சுக்குவா" என்றார் காயத்ரியின் தந்தை.

"சோ, அந்த பசங்ககிட்ட நான் சொல்லி நான் அவங்க முன்னாடி கெட்டவளாகணுமா" என்றாள் விஜி.

"அவங்க யாரு விஜி, அவங்ககிட்ட நீ நல்லவ கேட்டவன்னு பேரு எடுத்து என்ன பண்ண போற" என்றார் காயத்ரியின் தந்தை.

"அது உங்களுக்கு தேவை இல்லாத விஷயம் பா, எனக்கு காயத்ரி எவ்ளோ முக்கியமோ அவ்ளோ முக்கியம் அவங்க, எனக்கு அப்பா, அம்மா, ரம்யாக்கு அப்புறம் அவங்க தான்" என்றாள் விஜி.

விஜி தனது கண்ட்ரோல் முழுவதும் இழந்துவிட்டாள் என்பது அவள் வார்த்தைகளில் இருந்து தெரிந்தது.

காயத்ரியின் தந்தையும் கோபமானார்.

"விஜி, உனக்கு வேணும்னா அவங்க எப்படி வேணும்னாலும் இருக்கட்டும், என்னோட பொண்ணுக்கு அவங்க எந்த தொல்லையும் தர வேணாம், நீ சொல்லறீயா இல்ல நான் வேறமாதிரி பண்ணிடட்டுமா" என்றார் காயத்ரியின் தந்தை.

"அப்பா, சும்மா என்கிட்டே கோவப்படாதிங்க, அவங்க யாரு தெரியுமா, உங்க பொண்ணுக்கு அவங்க என்ன என்ன பண்ணிருக்காங்கன்னு தெரியுமா?" என்றாள் விஜி.

"என்ன பண்ணிருக்க போறாங்க விஜி, ஒரு அப்பாவை விட என்ன பண்ணிருக்க போறாங்க" என்றார் காயத்ரியின் தந்தை.

"ஒரு அப்பாவை விட அதிகமா பண்ணிருக்காங்க, ஒரு தகப்பனுக்கு தன்னோட பொண்ணை உயிரோட சந்தோஷமா கொடுத்திருக்காங்க, உங்களுக்கு அது கடமை, ஆனா எந்த சம்மந்தமும் இல்லாத அவங்க, என்னோட பிரென்ட் காயத்ரின்னு ஒரே காரணத்துக்காக எவ்ளோ பண்ணிருக்காங்கன்னு போய் அவகிட்ட கேளுங்க. ஒன்னு சொல்றேன், உங்க பொண்ணு ரொம்ப நல்லவளா வெளி உலகம் தெரியாத அப்பிராணியாவே இருக்கட்டும், அந்த பசங்க கெட்டவங்களாவே இருக்கட்டும், இனிமே அந்த பசங்க யாரும் உங்க பொண்ணுகிட்ட பேசமாட்டாங்க, இன்க்ளூடிங் மீ, ஆனா இதுனால லாஸ் உங்க பொண்ணுக்கு தான், அவ மனசு குற்ற உணர்ச்சில கண்டிப்பா துடிக்கும், போய் அவகிட்ட நான் சொன்னேன் னு சொல்லுங்க, இனிமே அவ யாரோ நான் யாரோ, கண்டிப்பா அந்த பசங்க உங்க பொண்ணு கிட்ட பேசமாட்டாங்க, நீங்க கெளம்புங்கப்பா, எனக்கு வேலை இருக்கு" என்று முகத்தில் அடித்தாற்போல சொன்னாள் விஜி.

இதை காயத்ரியின் தந்தை சற்றும் எதிர்பார்க்கவில்லை.

"விஜி, நான் சொல்றத நீ புரிஞ்சுக்கோ" என்றார் காயத்ரியின் தந்தை.

"எனக்கு கொஞ்சம் போன் பண்ணனும், நீங்க கெளம்புங்கப்பா" என்றாள் விஜி.

சற்றே அவமானப்பட்டதை உணர்ந்தார். வீட்டிற்கு சென்றதும் சற்று நேரம் மௌனமாய் இருந்த அவர், "காயத்ரி....கொஞ்சம் இங்க வா டா கண்ணா" என்றார்.

"என்னப்பா, சொல்லுங்க, " என்றபடி வந்தாள் காயத்ரி.

"இந்த முபாரக் பிரவீன் எல்லாம் உனக்கு எதுக்கு அடிக்கடி கால் பண்றங்க, அடிக்கடி வீட்டுக்கு வராங்க, அது தப்பில்லையா, ஊரு எப்படி பேசும்?" என்றார்.

"அப்பா, ஊரு எப்படி பேசினா என்ன, நீங்க நம்பறீங்க இல்ல, அது போதும், உங்க பொண்ணு என்னிக்கும் தப்பான வழி போகமாட்டா னு நீங்க நம்புனா போதும் பா, அவங்க ரொம்ப நல்லவங்க" என்றாள் காயத்ரி.

"நல்லவங்கன்னு நீ எப்படி சர்டிபிகேட் குடுக்கற, அவங்க யாரு, எவ்ளோ நாளா தெரியும், அவங்களுக்காக இப்டி கான்பிடெண்டா பேசற?" என்றார் காயத்ரியின் தந்தை.

"அப்பா, அவங்க நல்லவங்கன்னு தெரிஞ்சுக்க எவ்ளோ...ஒரு பத்து வருஷம் வேணுமா அப்பா?" என்றாள் காயத்ரி.

இதற்கு மேலும் பொறுக்க முடியாமல் விஜியுடன் நடந்த உரையாடலை சொன்னார் காயத்ரியின் தந்தை.

காயத்ரிக்கு தூக்கிவாரி போட்டது.

"அப்பா, என்ன சொல்றீங்க, விஜிகிட்ட ஏன் அப்பா அப்டி போய் பேசினீங்க, என்கிட்டே முதல்ல கேக்க வேண்டிது தான, அப்டின்னா நீங்க என்னை நம்பலையாப்பா, அவங்க பாவம் பா, இப்போ இவ்ளோ நேரம் விஜி எல்லாத்தயும் அவங்க கிட்ட சொல்லி இருப்பா, அவங்க ரொம்ப சென்சிடிவ் பா, விஜி முகத்துல இனிமே எப்படி முழிப்பேன்? அவ ரொம்ப கோவப்படுவா, அவகிட்ட எக்ஸ்பிளேன் கூட பண்ண எனக்கு சந்தர்ப்பம் குடுக்க மாட்டா" என்றாள் காயத்ரி. கண்கள் கலங்கிவிட்டன.

"காயத்ரி, இப்போ எதுக்கு இவ்ளோ பீல் பண்ற, அந்த பசங்களுக்காக அவ உன்னோட அப்பாவை இன்சல்ட் பண்ணிருக்கா" என்றார் காயத்ரியின் தந்தை.

"அவ அப்டி பேசினதுக்கு பின்னாடி உங்க பொண்ணோட உயிரே இருக்கு பா, இன்னிக்கு உங்க முன்னாடி நான் சந்தோஷமா ஈவன் உயிரோட இருக்கேன் னா அது அவங்களால தான்." என்றாள் காயத்ரி.

சற்று ஆடிப்போனார் காயத்ரியின் தந்தை.

செந்தில் தனது வாழ்க்கையில் உண்டாக்கிய பிரச்சனைகளையும் அதனால் தான் அடைந்த துன்பங்களையும் அது தீர்ந்த விதத்தையும் மற்ற அனைத்தையும் சொன்னாள் காயத்ரி.

தனது மகள் வெளி உலகம் தெரியாதவள் அவள் பிரவீன் முபாரக்கோடு பேசுவது அவளை தவறான பாதையில் கொண்டு செல்லும் என்று நினைத்த தந்தைக்கு தனது மகளை காப்பாற்றியதே அந்த இருவரும் தான் என்பது நன்றாக புரிந்தது அவருக்கு. "சாரி டா பட்டு, நான் வேணும்னா விஜிகிட்ட போய் பேசறேன், இல்லன்னா அந்த பசங்க கிட்ட பேசறேன்,புரிய வெக்கறேன்" என்றார் காயத்ரியின் தந்தை.

"இல்லப்பா, கண்டிப்பா அவங்க உங்ககிட்ட பேச மாட்டாங்க, அது மட்டும் இல்ல, விஜி கூட உங்ககிட்ட பேசமாட்டா, விடுங்க அப்பா, என்னோட நேரம், நான் உங்ககிட்ட எல்லாத்தையும் சொல்லி இருக்கணும், நான் தான் சொல்லாம தப்பு பண்ணிட்டேன், அதுக்கு நான் தர விலை என்னோட பிரெண்ட்ஷிப். விடுங்கப்பா நான் பாத்துக்கறேன்" அழுதபடியே உள்ளே சென்றாள் காயத்ரி.

காயத்ரியின் தந்தைக்கு எல்லாமே புரிந்து விட்டது.தன்னுடைய மகளை கஷ்டப்படுத்திவிட்டதை உணர்ந்தார். ஆனால் என்ன செய்வது......

பாவம் காயத்ரி.

பகுதி 41 முடிந்தது.

-------------------தொடரும்------------------

எழுதியவர் : ஜெயராமன் (17-Sep-17, 9:44 am)
சேர்த்தது : நிழலின் குரல்
பார்வை : 210

மேலே