சக்தி வெள்ளம்

வெள்ளமொன்று நமையிழுக்க வந்ததடா தம்பி !
வேகமாக அதில்குதிக்க வேண்டுமடா தம்பி !
கள்ளமற்ற கருணைவெள்ளம் வந்ததடா தம்பி !
காற்றிலேகி வானுலாவி நீகுதிப்பாய் எம்பி !
முள்ளுமாகி மலருமாகி வீற்றிருக்கும் தெய்வம்
மூளுகின்ற சுடருமாகிக் காத்திருக்கும் தெய்வம்
வெள்ளமென்று வந்ததிங்கு வெந்துயரைத் தீர்க்க
வேதனைவாழ் விட்டகற்றித் தன்கடலில் சேர்க்க !

ஆதிசக்தி யென்னும்வெள்ளம் ஆர்ப்பரித்துப் பாயும்
அனுபவத்தைக் கண்டவுள்ளம் அதில்மகிழ்ந்து சாயும் !
நீதிதன்னை நிலைநிறுத்த வந்ததிந்த வெள்ளம்
நீசர்தம்மை உள்விழுங்கி நிம்மதியைக் கொள்ளும் !
ஜோதியான சக்திவெள்ளம் தோன்றுமின்பம் மாயம்
சோதனைகள் தாங்குவதே கரையாகும் காயம் !
போதனைகள் சொல்லியின்பம் நுகரும்பொருள் அல்ல
போய்வீழ்வோம் ஆதிசக்தி வெள்ளம்நமைக் கொள்ள !

வந்தவெள்ளம் சந்தவெள்ளம் வாதைகளைத் தீர்க்கும்
வளமையென்னும் நிலைமையேற்று வாரிதிகள் கோக்கும் !
முந்திவந்த வினையகன்று முழுமைநிலை வாய்க்கும் !
முறுவலோடு பாய்ந்திடுவோம் கருணையுண்டு தாய்க்கும் !
நிந்தனைகள் செய்பவரை நீக்கவந்த வெள்ளம்
நீவிழுந்தால் உன்தீமை நினைவழியக் கூடும் !
வந்துவிழு வந்துவிழு வெள்ளத்திலே தம்பி !
வாழ்க்கைதரும் தெய்வமுண்டு உள்ளத்திலே தம்பீ !

-விவேக்பாரதி
09.08.2017

எழுதியவர் : விவேக்பாரதி (17-Sep-17, 7:53 pm)
பார்வை : 84

மேலே