ஜனகமாரி

உன்புகழைப் பாடிவந்தோம் ஜெனக மாரி
உன்னதமாய்க் காக்கவேணும் கனக மாரி !
அன்றாடம் உனைத்துதிப்போம் ஜெனக மாரி
அன்புவிழிப் பார்வைகொடு கனக மாரி !
கொன்றாடும் தீயவினை வெந்து மாளக்
கொடுக்கவேணும் புயபலத்தை ஜெனக மாரி !
மன்றாடிப் பாடிவிட்டால் மகிழ்ந்து பார்க்கும்
மங்கலத்து ஜோதியடி கனக மாரி !

நீயருள்தல் திண்ணமெனச் சொல்லிச் சொல்லித்
நித்தமும்நாம் நல்லதொழில் செய்வோம் மாரி !
தாயருளைச் சத்தியமென் றோதி யோதித்
தானதர்மம் செய்வமம்மா ஜெனக மாரி !
போயுதிரும் சருகாக வீழ்ந்தி டாமல்
பொல்லார்க்குப் பொல்லாராய் சீறிக் காட்டி
வாயுதிர்க்கும் சொல்வழியில் வாழ்ந்தி ருப்போம் !
வாக்குரைத்தோம் உனதாணை கனக மாரி !

சத்தியமே உன்னுருவம் கண்டோம் மாரி !
சமத்துவமே உன்வடிவாய்க் கொண்டோம் மாரி !
நித்தியமும் நீகாப்பாய் என்றே கூவி
நிஜந்தன்னை வாழவைப்போம் ஜெனக மாரி !
முத்திதரும் ஈஸ்வரியே ! இடபா கத்தில்
மூண்டிருக்கும் பார்வதியே ! காளீ ! நின்னைச்
சித்தமெலாம் சிரத்தையுடன் வணங்கி வாழ்வோம் !
சீக்கிரம்வா மனக்குகைக்குள் கனக மாரி !

-விவேக்பாரதி
16.08.2017

எழுதியவர் : விவேக்பாரதி (17-Sep-17, 7:54 pm)
பார்வை : 52

மேலே