புரட்டாசி

ஆவணிக்குப் பின்புவரும் ஆன்மீகத் திங்களிது
ஆவலுடன் பித்ருக்கள் அவனிவரும் காலமிது
நாவாரப் புகழ்பாடி நாடிவரும் பக்தரது
பாவங்கள் விலகியோட பரந்தாமன் அருள்மாதம் !

புரட்டாசி நற்திங்கள் புண்ணியங்கள் பலசேர்க்கும்
பரம்பொருளே பிறப்பெடுத்த பவித்ரமான மாதமிது
பிரம்மோற்சவம் நடக்கும் பெருமாளின் தலமெங்கும்
விரதங்கள் இருப்பதனால் வேண்டுகின்ற வரம்கிட்டும் !

கோவிந்தா எனும்நாமம் கோயிலெங்கும் எதிரொலிக்கச்
சேவிக்க வருவோர்க்குத் தெய்வீக அருள்கூடும்
தீவினைகள் விலகியோடும் தேவனவன் சன்னதியில்
தூவிமலர் போற்றிடுவார் தூய புரட் டாசியிலே !

அன்னைசக்தி மகிஷனெனும் அரக்கனுடன் போரிட்டு
வென்றதனைப் பக்தியுடன் விரதமிருந்து வழிபட்டே
ஒன்பதுநாள் கொண்டாடும் ஒப்பற்ற நவராத்ரி
பொன்னொளிர விளங்கிடுமே புரட்டாசி மாதத்தில் !

மலைமகளும் அலைமகளும் மகிழ்வுடனே கலைமகளும்
குலையாத எழிலுடனே குடியிருக்கும் மாதமிது
சிலையுருவாய்க் கொலுவீற்றுச் சிறப்பாக வரந்தந்து
நிலையில்லா வாழ்வினிலும் நிறைவளிக்கும் திங்களிது !

கார்மேகம் திரண்டுவரும் கார்கால மாதமிது
ஏருழவன் உள்ளமெலாம் இனிதாகும் காலமிது
நீர்நிலைகள் குளிர்ச்சியுடன் நிரம்பியோடும் திங்களிது
மார்தட்டி முழங்கிடுவேன் மகத்தான மாதமிதே !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (17-Sep-17, 8:23 pm)
பார்வை : 44

மேலே