சொல்லாமல் சொல்வது சுகமானது
முழுக்க நனைவதை விட
கைநீட்டி மழைச் சாரலை
மெல்ல ஏந்துவது
சிலிர்ப்பானது
அவசர உறிஞ்சலைவிட
நுனிநாக்கில் சுவைபார்க்கும்
தேநீரின் சிறுதுளிகள்
இதமானது
செவியதிரும்
மின்னணு இசையைவிட
மென்மையாய் மூச்சுவிடும்
புல்லாங்குழலிசை
இனிதானது
பளிச்சிடும் விளக்குகளைவிட
மேஜையில் ஏற்றிவைத்த
ஒற்றை மெழுகுவர்த்தி
ரசனையானது
நுண்ணிய உணர்வுகளை
சொல்வதை விட
சொல்லாமல் மெதுமெதுவாய்
சூட்சுமமாய் உணர்த்துவது
சுகமானது !
@இளவெண்மணியன்