விழுந்த கனவுகள் -வினு

அந்த ஊர் எழில் மிகு கன்யாகுமரி மாவட்டத்திலுள்ள சின்ன ஒரு கிராமம். சுத்தி தென்னந்தோப்பும் வாழை மரமும் தான் எல்லாப் பக்கமும். வீட்டுக்கு ஒரு மரம் எல்லாம் இல்ல மரங்களுக்கு நடுவே வீடு னு ஒரு அழகான கிராமம் அது. அது தான் என் ஊரு.

அங்கு விவசாயம் செஞ்சு வந்த எங்க அப்பா திடீர் நெஞ்சடைப்புல ஒரு நாள் எங்க அம்மாவை தனியா விட்டுட்டு போய்ட்டாரு. இல்ல இல்ல இந்த மரங்களையும் மூன்று குழந்தைகளையும் துணையா கொடுத்துக்கிட்டு கடவுள் ஏனோ அவரை கூட்டிட்டு போய்ட்டாரு. முதலில் உடைந்து சாய்ந்தாலும் மூன்று பேரையும் நாம தான் பாத்தாகணும் ங்கிற நினைப்புல தன்னை தேற்றி ஒருவாறு மீண்டு வந்தாள் வத்சலா.

வெளி உலகம் அவ்வளவு அறியாத அவள் கணவன் கொண்டு வருவதை சமைத்து அவருக்கும் பிள்ளைகளுக்கும் சேவகம் செய்வதையும் தன ஊர் கோவில் அம்மனுக்கு தினம் மாலை சாத்துவதையும் தவிர வேறு எதுவும் அறியாத பெண்ணாய் இதுவரை இருந்தவள் இப்போது என்ன செய்வது என்று அறியாமல் தவிப்பதைக் கண்டு அந்த ஊர் பெரியவர் ஊர் பள்ளியில் ஆயா வேலை வாங்கி தந்தார்.

காலையில் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு வத்சலாவும் பள்ளி கிளம்பி சென்று விடுவாள். வேலை புதுசு என்றாலும் விரும்பியே செய்தாள். வகுப்பறைகளை சுத்தம் செய்வது,சிறு குழந்தைகளுக்கு சோறு ஊட்டுவது, பள்ளி வேனில் இறக்கி ஏற்றி விடுவது . கை கழுவி விடுவது , குழந்தைகள் மலம் கழித்தால் கழுவி விடுவது என அத்தனையும் பாசத்தோடயே செய்தாள். அவள் ஏனோ தானோ என்று கடமைக்காக செய்யாமல் அன்பாய் செய்ததால் வத்சலா ஆன்ட்டி என்று குழந்தைகள் அன்பாய் அழைக்கும் போது அவள் தன்னை மறந்து போவாள். அவள் துன்பங்களையும் சேர்த்து தான்.

அவளது ஒரே மகன் தான் வினு என்கிற வினுதாசன் .அந்த வினுதாசன் தான் இப்போது உங்களோடு பேசி கொண்டிருக்கிறேன். ஒரே மகன் என்றால் ஒரு குழந்தை அல்ல. பாசமான அக்காக்கள் ரெண்டு பேர் உண்டு. மூத்தவள் வனிதா இப்போது துபாயில் வேலை செய்பவரை மணமுடித்தததால் அவரோடு இருக்கிறாள் அழகான ஒரு சுட்டி குழந்தையோடு. இரண்டாவது வித்யா. இப்போது தான் முதுகலை தாவரவியல் இரண்டாம் ஆண்டில் அடிஎடுத்து வைத்திருக்கிறாள். .

ஒரே ஆண் மகன் குடும்பத்தில். அதுவும் இரண்டு பெண் குழந்தைகளுக்கு பிறகு பயங்கர எதிர்பார்ப்புக்கு பின் பிறந்த ஆண் குழந்தை என்பதால் தாயும் தந்தையும் பாசத்தை கொட்டியே வளர்த்தார்கள். அது மட்டுமா இரண்டு அக்காக்கள் என்று மூன்று அம்மா மடியில் தவழ்ந்த இளவரசன் போல வளர்ந்ததாக உணர்ந்த நாட்கள் அதிகம்.

உள்ளூர் அரசு பள்ளியில் பள்ளி படிப்பு முடிச்சாச்சு. அவன் அம்மாவால் அங்கு தானே அவனை படிக்க வைக்க முடியும். எப்படியோ பொறியல் பட்ட படிப்பு படிக்க வேண்டும் என நினைப்பு எப்போதும் உண்டு. படிப்பில் சுட்டி பையன் என்பதால் மதிப்பெண்களும் நன்றாகவே இருக்க சொந்த மாவட்டத்தில் ஸ்காலர்ஷிப் உதவி பெற்று நல்ல கல்லூரியில் சேர முடிந்தது கட்டுமான துறை பிரிவில்.

நல்ல கல்லூரியில் படித்து முடித்து விட்டேன் .நன்றாகவும் படித்து முடித்து விட்டேன் . ஆனால் நல்ல வேலை தானே கிடைக்கவில்லை. இன்று நாட்டில் பல பேரின் நிலைமை இது தானே. வேலையில்லா பட்டதாரி எண்ணிக்கையில் என் பெயரையும் சேர்த்து காலம்.

நண்பர்களோடு வேலை தேடி வந்தாரை வாழ வைக்கும் சென்னைக்கு செல்ல முடிவெடுத்தோம் ஒருவழியாக. 22 வருடமாக வாழ்ந்த சொந்த ஊரை விட்டு போவது எவ்வளவு பெரிய வலி என்பதை உணர்ந்த நேரம் மிக கொடியது. அதை விட அதிகமாக வத்சலாவிற்கு வலித்தது பொத்தி பொத்தி பொத்தி வளர்த்த பிள்ளை பட்டணம் போகுது அதுவும் அவ்வளவு தூரம் என்றதும் தவித்து தானே போகும் தாய் மனசு. முதல் மகளின் கல்யாண கடன் , இனி செய்ய வேண்டிய இரண்டாவது மகளின் கல்யாண கனவு என எல்லாம் அவள் கண்ணை கட்டி நிற்க மனதை இறுக்க பூட்டி தன் வலியை மறைத்து மகனுக்கு விடை கொடுத்து அனுப்பினாள்.

அந்தி சாயும் வேளையில் அன்னைக்கு விடைகொடுத்து என் நண்பனோடு கிளம்பினேன் வினுதாசன் என்கிற நான் .இருவரும் ரயிலில் ஏறிக்கொண்டு சொந்த ஊரிலிருந்து வெகு தூரம் செல்லும் சோகத்தின் சின்ன புலம்பலோடு நிறுத்திக்கொண்டு பிற்பாடு சென்னையை பற்றி இப்படி இருக்கலாம் அப்படி இருக்குமோ என பேசிய கதைகள் தண்டவாளத்தை போல தொடர்ந்து கொண்டே இருந்தன. ஒருவாறு விழிகளில் பரவிய இருளில் கண்கள் மூடியது.

விவரம் சொன்னவர் இன்னொரு ரயிலேறி சோழிங்கநல்லூர் செல்லலாம் என்றும் பின் அங்கிருந்து ஒரு சின்ன பேருந்து பயணத்தில் இடத்தை அடையலாம் என்று சொல்லி முடித்தபோது ஏனோ கேட்ட எனக்கு மூச்சு வாங்கினாலும் சென்னை ரொம்ப பெருசு என்று மனோஜ் அண்ணன் கொஞ்ச நாளுக்கு முன் சென்னைக்கு வர முடிவெடுத்து அவனிடம் பேசியபோது அவன் சொன்னது நினைவுக்கு வந்தது.

பக்கத்து தெருவிலுள்ள போலீஸ்காரரின் மகன். அவன் போலீஸ் மகன் என்பதால் கொஞ்சம் தள்ளி வைத்தே அந்த காலத்தில் பழகினோம், மேலும் அவன் வேறு பள்ளி என்பதால் அதிகம் நட்பு இருந்ததில்லை. சென்னை போய் நாங்கள் அதிகம் தவித்து விட கூடாது என அம்மா அந்த வீட்டுக்கார அம்மாளை போய் பார்த்து எண்ணை வாங்கி தந்திருந்தாள்.ஆனால் எல்லாவற்றிக்கும் சிறுகுழந்தைபோல அவனை தொந்தரவு செய்ய தோணவில்லை.
அப்படியே இவன் போய் தொங்கினாலும் அவன் தோள் சேர்ந்து உதவலாமா என்பது சந்தேகம் தான்.இன்று உதவுவது என்னவோ சொந்தக்காரர்கள் தெரிந்தவர்களை விட நாம் சந்திக்கும் சாதாரண சாமானிய மனிதர்கள் தான் என்பதை அப்பாவின் மரண தருணங்கள் அவனுக்கு தன்னிச்சையாக சொல்லி தந்திருந்தன.

மெல்ல இருவரும் நடக்க தொடங்கினர் அடுத்த ரயிலுக்கு டிக்கெட் எடுக்கணும் என்று நினைத்தபடி. காலை பத்து மணிக்கு நேர்முக தேர்வு. எப்படியாவது ஒன்பது மணிக்குள்ளாக இடத்துக்கு சென்றடைய வேண்டும் என்ற பரபரப்பில் நடையின் வேகம் கூடத் தொடங்கியது. பிளாட்பாரம் தாண்டி கவுண்டரில் நுழைந்து காசை திணித்து அவர் திரும்பி என் கையில் திணித்த பயணசீட்டை எதுவும் பாராமல் வாங்கி கொண்டு நடைபாதை எண்ணை மட்டும் கேட்டுக்கொண்டு தேடலோடு நடக்க தொடங்கினோம் .

வெகு விரிவாக விரிந்திருந்த ரயில் நிலையத்தில் எப்படியோ அடையாளம் கண்டு கொண்டோம் இறுதியில். பிளாட்பாரம் எண் 8 என்பதை அவர் சொல்ல கேட்டு என்னையும் அறியாமல் சிரித்தேன் .இதை நல்லதொரு தொடக்கம் என நினைத்து கொண்டேன் . 8 எனது விருப்ப எண் .என் பிறந்த நாள் 8 .8 88 என்பதை அறிந்து சிலாகித்த பருவத்திலிருந்து அந்த எண்ணின் மேல் அப்படி ஒரு காதல். இடம் கண்டதும் எட்டி பிடித்து எரிகொண்டாண்டோம் நாங்கள் இருவரும்.

ரயில் பயணங்கள் நீளமோ குறுகியதோ அது எப்போதும் சுகமே. அந்த சுகத்தை அனுபவித்தபடி பயணத்தை தொடர்ந்த கண்கள் துரு துறுவென மேய்ந்து கொண்டிருந்தன அந்த நீண்ட ரயில் சுமந்த பயணிகளை. மணியை பார்த்தால் ஆறே முக்கால் என்றது .

காற்றில் பரந்த சுடிதார் துப்பட்டாவும் கூந்தல் இழைகளும் இன்னும் அழகாக்கி கொண்டிருந்தன அந்த தேவதைகளை. கல்லூரி மாணவிகளாக இருக்க கூடும் எல்லாரும் பைகளை வைத்திருந்தனர். சிலர் வேலைக்கு செல்பவர் போல தெரிந்தனர். நாய் சங்கிலியை போல கழுத்தில் தொங்கிய கார்ட் சொன்னது. அந்த சங்கிலியை அலுவலகம் சென்று அணிந்து கொள்ள வேண்டியது தானே என மனம் கேட்டதை அவர்களிடம் கேட்க முடியாமல் நீ சும்மாயிரு என்று சொன்னேன் அதனிடம்.

மணி ஏழு தான் ஆகி இருந்தது ஆனால் ரயில் முழுக்க பரபரப்பாக பயணிகள் ஏறிக்கொண்டே இருந்தனர் ஒவ்வொரு நிறுத்தத்திலும். நேரம் கடக்க கடக்க கூட்டம் கூடி கொண்டே இருந்தது. தென்றலின் குளிர் சுகமும் கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து போயிருந்தது.

இளங்காலை வெயில் முகத்தை முத்தமிட தொடங்கியது. கிட்டத்தட்ட ஏழே முக்காலுக்கு எனக்கு அருகாமையில் இருந்தவர் என்னை தட்டினார். தம்பி கேட்டிங்களே வந்தாச்சு சோழிங்கநல்லூர் என்றதும் பந்தாய் குதித்து எழுந்தோம் இருவரும். என் புன்னகை அவரிடம் விடைபெற்றுக்கொண்டு வந்து மீண்டும் என் உதடுகளில் அமர்ந்து கொண்டது.

விசாரணை தொடங்கியது.பேருந்து நிலைய வழி கேட்க வழிமறித்த ஆட்டோக்காரர் நூற்றி இருபது ரூபாய் கொடுத்தால் இடத்தில கொண்டு விடுவதாக விடாமல் தொணதொணத்தை காதில் வாங்காமல் வழி சொல்லுங்கண்ணா என்று கேட்டதும் நாற்பது ரூபா கொடு பஸ் ஸ்டாண்ட்ல கொண்டு விடறேன் அப்புறம் பஸ் பிடிச்சு போனா 2 ஸ்டாப் தான் என்றான். பூம்பூம் மாடு போல தலையை ஆடி ஏறிக்கொண்டோம். ஆட்டோவின் சொகுசு பயணம் பிடித்திருந்தாலும் அம்மாவின் வியர்வையில் வந்த பணத்தை ஆட்டோக்கு விரயம் செய்ய மனம் இடம் கொடுக்கவில்லை.

அப்புறம் அந்த பேருந்து நிலைய கழிவறையில் முகம் கழுவி முகத்தில் பவுடர் அப்பி இன்றைக்கு அணிய என எடுத்திவைத்த நீல சட்டையை இருவரும் அணிந்து கொண்டோம். நீல சட்டை நம்மை ரொம்ப நேர்மையாளராய் காட்டும் என்று எங்கோ படித்த நியாபகத்தில் இருவரும் திட்டமிட்டே தேர்ந்து எடுத்து வைத்திருந்தோம். பின் இறக்கி விட்டவன் நாற்பது ரூபாயை பெற்று கொண்டு மறக்காமல் சொல்லி சென்ற பேருந்து எண்ணில் ஏறிய இரண்டு நிமிடத்தில் இடம் வந்தது.

நான்கு பக்கமும் வண்டி என பர பரவென்று இருந்த சாலையில் எதிர்பட்டவரிடம் வழி கேட்டு ஏறத்தொடங்கின கால்கள். மாடிப்படிகளில்.அடுக்கி வைத்த தீப்பெட்டி மாதிரி இருந்தன கடைகள். இடையில் முடுக்கு போன்ற ஒரு பாதை அதில் நுழைந்து பார்த்தால் இருபக்கமும் குட்டி குட்டி கடைகள் . பின் முடிவில் தான் கண்டது அந்த படிகளை. அதில் தான் ஏறிக்கொண்டிருந்தோம் இருவரும்.மூன்றாவது மாடி போய் ஷிவ்ராஜ் கான்ஸ்ட்ருக்ஷன் கம்பெனி என்ற பெயர்பலகையை பார்த்ததும் பெருமூச்சு வந்தது முதலில். பின் கைக்கடிகாரத்தை பார்த்துக்கொண்டு இருவரும் தங்களை ஆசுவாசப்படுத்தி கொண்டோம் . மணி பத்தை நெருங்க நிமிட முட்கள் இன்னும் பத்து சுத்து சுத்த வேண்டியிருந்தது.

நட்பின் கரங்கள் ஆல் தி பெஸ்ட் சொல்லி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டு உள்ளே நுழைந்தோம் . திரைப்படங்களில் பார்ப்பது போல அது கண்ணாடி அறையாகவும் இருக்கவில்லை. அவர் கோட் சூட் அணிந்திருக்கவுமில்லை. அழகான பெண்ணொருத்தி அதிக மேக்கப் முகத்துடன் வரவேற்புக்கு நிற்கவுமில்லை. சின்னதான அறையை நான்கு நார்காலிகள், சின்ன டீபாயில் கிடந்த ஒற்றை நாளிதழ். ஓரமாய் இருந்த ஒரு தண்ணி கேன், அவர் அமர்ந்திருந்த மேசை நாற்காலி, கர கர சத்தத்தோடான மின்விசிறி இவையெல்லாம் தப்பான இடம் வந்து விட்டோமா என்று ஏற்படுத்திய சந்தேகத்தை இல்லை என்றது அவர் பதில். தம்பி என்னபா பேப்பர்ல விளம்பரம் பாத்து வந்தீங்களா என ஆரம்பித்தது அவர் கேள்விகள்.

நேரம் கடக்க கடக்க இருக்கைகளை பைலோடு வந்த இளைஞர்கள் நிரப்பி கொண்டிருந்தனர். கூட்டம் அதிகமாக அவர் வருவோர் எல்லாருக்கும் 10 .30 , 10 .45 என கால் மணி நேர இடைவெளியில் நேரம் சொல்லி கொண்டிருந்தார். நாலு நாற்காலிகளை நிறைத்த ஆட்களை தவிர இடம் இல்லாததால் தானோ என்னவோ அப்படி நேரம் குறித்து கொடுத்து கொண்டிருந்தார் போல என நினைத்து கொண்டேன். மணி பத்தை அடித்ததும் முதலில் வந்த எங்களை அழைத்தார்.

ஊரு பேரு என இயல்பாய் கேட்க மனப்பாடம் பண்ணி வைத்த ஆங்கில அறிமுக படலத்தை அழகாகவே சொல்லி முடித்தேன்.அவர் கேட்ட கேள்விகள் எல்லாத்திலும் என் திறமையை காட்ட அதிக பிரசிங்கித்தனமாக பதில் சொன்னது என் அறிவு. எப்படியாவது வேலையை கையில் வாங்க வேண்டும் என்ற தவிப்பில் தானோ என்னவோ.முதல் ஆறு மாதம் பயிற்சி காலம் மூவாயிரம் சம்பளம் அதன் பிறகு திறமையை பொறுத்து இருமடங்கு மூன்று மடங்கு என்றாகி பல்லாயிரம் ஆகும் என்று பொடி வைத்தும் பேசினார்.

வேலை கிடைத்தது என்று மகிழவா அல்லது முப்பதாயிரம் சம்பளத்தில் வேலை பார்க்கும் கனவில் இன்ஜினீரிங் படித்த தனக்கு மூவாயிரம் ரூபாய் சம்பளத்தில் கிடைத்த வேலைக்கு அழுதிடவா என தெரியாமல் விடைபெற்றேன். அதிகம் பாட சமந்தமான கேள்விகள் கேட்கப்படவில்லை என்பது நெருடலாக இருந்தது. இந்த சம்பளத்துக்கு இவ்வளவு தான் கேள்வி கேட்பார்கள் போல என்றது உள்மனசு.

நண்பனுக்காக காத்திருந்தேன்.தேர்வு பெற்றுவிட்டோம் என்ற சிரிப்பு இல்லாமல் அவனும் தேர்வு பெற்றதாக சொன்னான்.நகர ஆரம்பித்தோம் நாங்கள். படியில் ஏறும் போது இருந்த உற்சாகத்தை அந்த அறை உறிஞ்சிவிட்டதா என்னவோ இப்போது இருவரும் மவுனமாக இறங்கி கொண்டிருந்தோம்.

வெயில் சுட்டது பின்மண்டையை.இனி மனோஜ் அண்ணன் இருக்கும் இடத்தை தேடி செல்ல வேண்டும். "ஒரு ஆளு என்றால் என் அறையில் இடம் தந்திருக்கலாம் நீங்க வேற ரெண்டு பேர்னு சொல்றே. நல்ல வீடு பாத்து தரேன் னு" சொல்லி நாசூக்காக நழுவிக்கொண்டான்.இந்த மூவாயிரம் சம்பளத்தில் இந்த மாநகரத்தில் எப்படி வாழப்போகிரோம் என்ற யோசனை சுள்ளென சுட்ட சூரியனைவிட அதிகமாகசுட்டது.அப்போது தான் கண்ணில் அந்த காட்சி பட்டது.

நான்கு பக்க பரப்பரப்பு சாலையின் நடுவில் ஒருவர் நடனம் ஆடிக்கொண்டிருந்தார். நடுரோட்டில் நடனம் என்னடா இவரு என்ற நினைப்பு வந்தது. கைகளை அங்கும் இங்கும் ஆட்டி அதற்கேற்ப உடலை வளைத்து நடனத்தோடு போக்குவரத்துக்கு வழிகாட்டிக்கொண்டிருந்தார் கருப்பு தொப்பி அணிந்த வெள்ளை சட்டைக்கார ட்ராபிக் போலீஸ் ஒருவர். இரண்டு நிமிடமோ நான்கு நிமிடமோ கண் இமைக்க மறந்திருக்கலாம். சுடுவெயில் என்னவோ அப்படியே நிக்க விடாமல் உந்த அவரிடமே கேட்டு விடலாம் என அவரை நோக்கி நடக்கே தொடங்கினோம்.

மனோஜ் அண்ணனின் முகவரியை கொடுத்து அவரிடம் விசாரிக்க வழி சொன்னவர் அதோடு நிற்காமல் வாடிருந்த எங்கள் முகத்தை கண்டோ என்னவோ ஊருக்கு புதுசா என கேட்க மனதில் தவித்த அத்தனையும் அவரிடம் கொட்டி விட்டோம் சிறுகுழந்தையை போல. லாவகமாக கைகளை அசைத்தபடி அவர் என் கதையை கேட்டபோது அவரை ரசித்து அவர் பெயர் பார்த்தேன் சட்டையில் அது குமார் என்றது.கும்பிடபோன தெய்வம் குறுக்க வாந்தாற்போல அவர் இப்போது கண்களில் பட அடக்கி வைத்ததை கேட்டுவிட்டேன். சார், இங்க தங்க வீடு கிடைக்குமா, ஆபீஸ் இங்க தான் அதான் கேட்டேன் கொஞ்சம் முழிங்கி கொண்டே சொன்னேன்.

"இப்ப வேலை நேரம் தம்பி . எனக்கு ஆறு மணிக்கு முடியும்.அப்ப வந்தீங்கனா கூட்டிட்டு போறேன்." என்று கொஞ்சமும் கடிந்து கொள்ளாமல் சொன்னவர் மேலும் சொன்னார். கடும் வெய்யிலில் என்ன செய்ய போகிறீர்கள் என்று ஒரு பார்க்கு வழி சொல்லி மதிய சாப்பாடுக்கு ஒரு கடையும் அடையாளம் காட்டினார்.

எங்கள் மேல் உள்ள அக்கறையில் அவர் பூங்காவுக்கு அடையாளம் சொன்னாலும் எனோ எங்கு செல்ல தோன்றவில்லை. வேறு எங்கேனும் வேலை தேடலாம் என்று தோன்றியதை நண்பனிடம் சொல்ல அவனும் அதுவே சரி என்றான். குமார் அண்ணா தந்த தண்ணீரின் தெம்பிலும் அவரின் அன்பான வார்த்தைகள் தந்த நம்பிக்கையிலும் கால்கள் வேகம் போட தொடங்கின.

சில கதவுகள் திறந்தன. சில எங்களுக்கு திறக்கப்படவே இல்லை.சிலரின் கைகள் எங்கள் பைலை பெற்று ஒரு வெற்று பார்வை பார்த்தன.கோவில் வாசலில் நடைபாதைகளில் கொடுக்கப்படும் நோட்டீஸ் தாள்களை பார்க்காமல் வீசுவது போல. சில பார்க்காமலே போக சொன்ன. சிலர் எங்களிடம் முகத்தில் அடித்தாற்போல வேலைலாம் இல்லப்பா போங்க போங்க என்று விரட்டினர், கல்லடி பட்டு ஓடும் தெருநாய்கள் நினைவு வந்தது.
அந்த ஒரு நாள் அனுபவம் வேலை தேடும் படலத்தின் கொடுமையை எங்களுக்கு காட்டி தந்தது ஆழமாகவே.அதனால் எதுவும் யோசிக்காமல் மூவாயிரம் ரூபாய் வேலையை ஏற்று கொள்ள மனது தயாராக ஆரம்பித்தது.

மணி ஆறாகும் நேரம் குமார் அண்ணனின் தொலைபேசி எண் வாங்காதது தவறு என்று எங்களுக்குள் பேசிக்கொண்டு ஒருவேளை அவர் போகிருப்பாரோ என்ற அச்சத்தில் வேகமாக நடந்தோம். அப்பாடா சிக்கனலில் இரண்டு போலீஸ் தொப்பிகள் தெரிய மனசு குளிர்ந்துபோனது. போனதும் உங்களுக்காக தான் நின்னுடிருக்கேன் தம்பி என்று அவர் சொல்லவே மனசு இன்னும் அதிகம் குளிர்ந்து போனது .

அவர் காட்டிய இருவீடுகளில் இரண்டாவதை சரி என்று சொல்லி நுழைந்தோம்.முதல் வீடு பெரிது அளவிலும் வாடகையில் கூட பெரிது தான் ஐந்தாயிரம். இதை வீடு என்று சொல்ல முடியாது ஒரு அறை. ஆனால் சென்னையில் அறைகள் கூட வீடு என்று பெயர் கொள்கின்றன என அனுபவங்கள் எனக்கு சொல்லி தந்தன. எங்கள் வீடு தோட்டத்தில் தேங்காய்கள் வேலை சாமான்கள் போட இருக்கும் அறையை இது நினைவு படுத்தியது.

வாடகை மூவாயிரம். இருவரும் பகிர்ந்தாலும் சம்பளத்தில் பாதி இதற்கு போயாக வேண்டும் மிஞ்சிய மூவாயிரத்தில் முப்பது நாட்கள் சாப்பிட வேண்டும். மனதில் என்னென்னவோ எண்ணங்கள் எழும்ப அம்மா தந்த பணத்தில் இருந்து அட்வான்ஸ் பெருந்தொகையை கொடுத்தேன்.அறையின்ஜன்னலை இல்லை இல்லை வீட்டு ஜன்னலை திறந்த போது இருவர் மனசும் லேசாகி இருந்தது.

வரும் வழியில் வாங்கி வந்த தோசை பார்சலை பிரித்தபடி தரையில் அமர்ந்தோம்.
உணவு உள்செல்ல செல்ல தொலைந்து போன தெம்பு திரும்ப வந்தது. இரவு வெளிச்சத்தில் நட்பின் உரையாடல்களும் ஏமாற்றத்தின் உளறல்களும் சென்னை வாழ்க்கையை எப்படி சமாளிக்க போகிறோம் என்ற உதறல்களும் தொடர்ந்தன.

பெட்டியிலேர்ந்து போர்வையை எடுத்தி விரித்து அதில படுத்துகொண்டோம் நாளை பாய் வாங்க வேண்டும் என்று நினைத்தபடி. படுத்ததும் நண்பன் தூங்கிவிட்டான் மிக அசதிபோல என நினைத்துக்கொண்டேன் நான். பூட்டாத ஜன்னலில் எட்டி பார்த்த நிலா என் வலிக்கு மருந்து போட என்னிடம் பேசிக்கொண்டு நான் கண் அயரும்வரை துணை இருந்தது.

அதிகாலை இளங்காலை வெளிச்சம் என்னை எழுப்பி விட்டது. அம்மாவின் காலை காபியையும் நினைவு படுத்தி சென்றது. அம்மாவிடம் பேசினான் டீ குடிக்காமல் குடித்ததாகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் இன்று வேலைக்கு செல்வதாகவும் வீடு மிக வசதியாக இருப்பதாகவும் இன்னும் இல்லாத எத்தனையோ விஷயங்கள் இருந்ததாகவும் பொய் சொன்னது என் தொலைபேசி பேச்சு அவள் மகிழ்ச்சிக்காக.

எங்க ஊரு ஆறு, மோட்டார் பம்ப் தண்ணி என முங்கி குளித்த எனக்கு ஏழு அறைக்கு பீப் சத்தத்தோடு வந்த தண்ணீர் லாரியில் எல்லாரும் குடங்களோடு முந்திக்கொண்டு தண்ணீர் பிடித்து செல்வதை பார்க்க வித்தியாசமாக இருந்தாலும் தம்பி நீங்களும் பிடிச்சுக்கோங்க என வீட்டு சொந்தக்காரரின் மனைவி என் கையில் மஞ்சள் குடத்தை திணிக்க நாங்களும் ஓடத்தொடங்கினோம். ஒருகுடம் நீரில் குளித்தோம். குளித்தோம் என்று சொல்வதை விட முகம் கழுவுதல் போல உடம்பு கழுவினோம் என்று தான் சொல்வேன்.அப்புறம் சட்டை அணிந்து ஆவலோடு தான் கிளம்ப ஆரம்பித்தோம்.

முதல் நாள் வேலை தளம்.கூட்டமாய் நின்று சின்னதாக மீட்டிங் போட்டு ஏற்கனவே இருப்பவர்கள் நான்கு புதிவர்கள் இரண்டு என்று ஆறு பேராக பிரித்து விட்டனர் அதிலும் நானும் அவனும் ஒரே குழுவில் தான் இருந்தோம். என்ன வேலை என்று போக போக தெரிந்து பழகி கொள்வீர்கள் என்று சொல்லி விட்டு நகர்ந்தார் தலைமை வழிகாட்டி.

அவர்கள் எங்களை கூட்டி சென்ற வேலை இடம் கண்ணை பறித்தது. எத்தனை மாடி இருக்குமோ தெரியவில்லை என்னால் எண்ணவும் முடியவில்லை. குறைந்தது பத்து அல்லது பதினைந்து மாடிகள் இருக்கும் என அந்த இருபத்தைந்து மாடி கட்டடத்தை தப்பாகவே கணக்கிட்டது குழந்தை போல என் கண்கள். இந்த மாதிரி அழகிய கட்டடம் கட்டும் கட்டட கலையை படித்ததற்கு பெருமை கொண்டது மனசு. நல்ல இடத்தில தான் வேலைக்கு சேர்ந்திருக்கோம் என்று நினைத்து கொண்டது அது.

தம்பிகளா என்ற சத்தம் என்னை சுய நினைவுக்கு கொண்டு வந்தது. இந்த கம்பெனி கண்ணாடி எல்லாம் நீங்க துடைச்சு பழகணும் அது பள பளக்கணும் . கண்ணாடியில விரிசல் இருக்கா பாக்கணும், வெயிலில் விரிஞ்சிருந்தா பேஸ்ட் போட்டு அடைக்கணும் அவ்ளோ தான். எதோ பேச ஆரம்பித்த என்னை தடுத்தாற்போல தேவை இல்லாம தொழில் நேரத்துல பேச கூடாது . வேலைய தொடங்கலாமா என்றான் அவன் .

கண்ணாடி தொடைக்கின்ற வேலையா என என் மனசு சிதறிய கண்ணாடி துண்டுகளானது.அவன் கொடுத்த பிரஷ் கொண்டு கை கண்ணாடியை துடைக்க கண் நீர் வெளிவருவதை உள்ளடக்க பெரும் பாடு பட்டது, நண்பனின் முகத்தை பார்த்தேன் அது கருமேகத்தைப்போல இருண்டு கிடந்தது.

உணவு இடைவேளையில் கூட வேலை பார்த்தவன் இயல்பாய் கூறினான். முதலில் இப்படி தான் டா இருக்கும் அப்புறம் பழகிடும். ஒன்றும் இல்லாமல் இருப்பதற்கு எதுவாவது இருப்பது சிறப்பு அப்படி தான் இந்த வேலையும் தனக்கு என்று சொல்லிவிட்டு கையிலிருந்த ஏச்சு சாதத்தை நக்க ஆரம்பித்தான் அந்த என்ஜினீரும்.

ஒரு வாரம் பல்லை கடித்து சகித்து கொண்ட நான் சனிக்கிழமை கிளம்பும்போது கேட்டுவிட்டேன் "என்ன சார் படிச்ச படிப்புக்கு சம்பந்தம் இல்லாம வேலை செய்றது சங்கடமாய் இருக்கு" என்று."போக போக மாத்தி போடுவோம் தம்பி. வேலையை நல்லா நீங்க செய்றதுல தான் உங்க வளர்ச்சி இருக்கு" என்று நாய்க்கு எலும்புத்துண்டு போடும் வார்த்தைகளை சொன்னார்.

இந்த எலும்புத்துண்டுகள் சில சனிக்கிழமைகளில் என் எதிர்கால கனவுகளின் பசி தீர்த்தது. பின் அது சலித்து போனது. அதுவே தொடர்ந்ததினால் ஒரு மாதத்தில் நான் கேள்வி கேட்பதை நிறுத்திக்கொண்டேன். அந்த எலும்புத்துண்டுகள் இப்போது என் பசி தீர்க்கவில்லை என் நம்பிக்கைகளை கீறி என்னை காயப்படுத்தி பார்த்தது.

பின்னொரு நாளில் வேலை இறுதியில் நான் கேட்க "தம்பி ஒரு வருட கான்டராக்ட் கையெழுத்து போட்ருக்கீங்க பேசாம வேலைய பாருங்க" என்று அவர் முகத்தை கடு கடுவென வைத்து கொண்டு சொன்னபோது தான் அவரின் உண்மை முகம் தெரிந்தது. முதல் நாள் கை எழுத்திட்ட பல பக்க கடிதத்தில் இந்த விஷயம் இருந்தது அறியாமல் நாங்கள் எத்தனையோ கையெழுத்துக்கள் போட்டது இதே மனிதர் தான் முறைப்படி எல்லாம் நடக்கணும்ல சம்பளம் மற்ற விவரங்கள் தான் போட்டுட்டு வாங்க பா என சாதாரணமாக சொன்னதை நம்பித்தான்.

நாளாக நாளாக இந்த பணி எனக்கு பழக ஆரம்பித்தது. பழகி தானே ஆக வேண்டும் கூண்டு கிளிகள் சுதந்திரத்தை எதிர்பார்க்க முடியுமா.நீண்டு தொங்கும் கயிறுகளில் வாலில்லா குரங்குகளாக தொங்கி கொண்டு ஒரு கையில் கயிரையும் உயிரையும் இறுக்க பிடித்து கொண்டு மறு கையில் ஆங்கில எழுத்தின் டி எழுத்து வடிவிலான நீள பிரஷை பிடித்து கொண்டு கயிறோடு தொங்கும் பக்கெட்டிலிருக்கும் ஒருவகை நீர்கலவையில் முக்கி துடைக்க வேண்டும். துடைக்க துடைக்க கண்ணாடி என் முகத்தை அழகாய் காட்டி தன் நன்றி கடனை மவுனமாக சொல்லும்.அடுத்தது அடுத்தது என கைகள் நீண்டு கொண்டே செல்லும். துடைத்தல் தொடரும்.

அன்றும் அப்படிதான் உச்சிவெயில் சூரியனோடு நானும் சேர்ந்து எரிந்துகொண்டு 18 வது மாடி அருகில் துடைத்து கொண்டும் தொங்கி கொண்டும் இருந்தேன். இன்றய தொங்கலில் என்றும் இல்லாத சின்ன வித்தியாசமாய் சறுக்கல்களை உணர்ந்த போது லேசாக எடுத்துக்கொண்ட எனக்கு பெரிதாக நடக்க போகும் அசம்பாவிதத்தை உணர தெரியவில்லை.

தாய் கட்டிய தொட்டில் போல இதுநாள் வரை என் கனம் தாங்கிய கயிறு இன்று வயது முதிர்ந்து விட்டதோ என்னவோ. மெல்ல மெல்ல அது தள்ளாடி பின் இரண்டாக கிழிய ஆரம்பித்தது.நிலைமையை நான் உணர்ந்த மறு நொடியில் தரையை முத்தமிட்டிருந்தது என் எலும்புகளும் ரத்தம் சிந்திய சதைகளும்.சிவப்பு குளத்தில் ஒற்றை தாமரையாய் ரத்த வெள்ளத்தில் கிடந்தது என் தலை.

என் அம்மாவுக்கென்று நான் அமைப்புப்படம் வரைந்து நான் உழைத்து நானே கட்டும் வீடு, என் அம்மா கையில் நான் திணிக்க போகும் சம்பள கவர், அம்மாவிற்கு நான் என்றாவது வாங்கி கொடுக்க நினைத்த வாடாமல்லி பட்டுப்புடவை, என் அக்கா மகளுக்கு வாங்க போகும் தொங்கு கம்மல், என் தங்கையை தேவதை ஆக்கப்போகும் சென்னை சில்க்கின் கண்ணாடிக்குள்ளிருந்த சிலை அணிந்திருந்த பிங்க் சுடிதார், அவளுக்கு பிடிக்கும் பாசிமாலைகளும் தெருவோர கடை கிளிப்களும், எங்க ஊரு அம்மனுக்கு நான் சாத்த வேண்டிய மாலை, நான் கட்டி முடிக்கும் அழகிய வீடுகள், நீள் கோபுர கட்டடங்கள் , என என்றாவது நான் செய்ய வேண்டும் என ஆசைப்பட்ட அத்தனை கனவுகளும் அந்த ஒரு நொடியில் மனதை கடந்து சென்று இறுதியில் அந்த தரையில் விழுந்து நொறுங்கியது.

என் அத்தனை
வண்ண கனவுகளையும்
சுருக்கி பையில்
பொதிந்தது போல
பொதிந்து கொண்டது
என்னை சுற்றி மூடியிருந்த
வெள்ளைத்துணி

போலீஸ் முறைப்படி பிரேத பரிசோதனை முடிந்து ஆம்புலன்ஸில் சென்னையிலிருந்து என் ஊர் நோக்கி பயணப்பட தொடங்கியது விழுந்த என் கனவுகளை சுமந்த வெள்ளை சுருக்கு பை...


இப்படிக்கு
விழுந்த கனவுகள் வினுதாசன்.....

சென்னைக்கு பட்டாம்பூச்சியாய் பறந்து சென்று பின்னொரு நாள் பகற்பொழுதில் பொட்டலமாக திரும்பி வந்த பெயர் பகிர முடியாத இளைஞனின் கதையை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்

பி.கு
சிறிது நாள்களுக்கு முன் கிழக்கு பதிப்பகம் நடத்திய சிறுகதை போட்டிக்கு நான் எழுதிய கதை.
பரிசு கிடைக்கவில்லை:-) இருந்தும் வாசகர்கள் கருத்துக்கள் அறிய கதையை இங்கு பதிவிடுகிறேன் .

எழுதியவர் : யாழினி வளன் (21-Sep-17, 8:29 pm)
பார்வை : 390

மேலே