சாலையோரப் பயணம்

மனநோய் தீராது மனவினையால் மனம் சஞ்சலத்துள்ளே உறைந்து மனம் போன போக்கில் மனிதன் தேடும் வாழ்க்கையில் எது சந்தோஷமென்ற சந்தேகமே தாண்டவமாட பாரீர்...

அழகு மயில் ஆட்டம் கண்டு வானம் கொட்டிய மேளமாய் இடியோசை கானமாய் ஞானம் பாட, நெரிசல் மிகு நகர வாழ்வில் வாகனங்களின் ஓயாத ஓசையில் மெய்மறந்து தியானம் செய்ய பழகுவீர்...

" வாரேன். வாரேன். ", என்று வாகனங்களும் ஒலி எழுப்ப, கேட்டு விலகாத கூட்டநெரிசலிலே, " வாரேன். வழிவிடுங்கள் ", என்று அதிர ஒலிப்புகளும் எழுந்தவண்ணமாக சாலையோரப் பயணம் செய்திட வாரீர்...

இயற்கையென்ற அன்னையைக் கொன்று தின்னும் செயற்கையாலான குழந்தைகளாய் நாளும் நம் செயல்கள் மிகுந்து மிளிரும் இந்த உலகில் மகிழ்ச்சியென்றால் என்னவென்று கேட்டால் ஆடம்பரமாய் அச்சடிச்ச நோட்டை விட்டெறிந்து கடைவீதியிலே வாங்கிடலாமென்ற பதிலே எதிரொளிக்கும், பாரீர்...

ஊரென்ன? பெயரென்ன?
எல்லாம் தொலைந்து யாரும் தெரியாத ஊரில் சுற்றித்திரியும் சாலையோரக் குழந்தையை நோக்கி, " நீ ஒரு அநாதை. ", எக்காளமிடுவோருக்கும் பரிதாபப்படுவோருக்கும் தெரியாது அந்த கடவுளுக்கும் ஊரும் இல்லை.
பெயரும் இல்லை. பெற்றோரும் இல்லையென்பதாக அந்தக் கடவுளொரு அநாதையென்று அறிவீர்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (21-Sep-17, 9:50 pm)
Tanglish : saalayorap payanam
பார்வை : 991

மேலே