தணலாகி வாழ்வதுவும்

நீதிக்கும் மதிப்பில்லை நிம்மதியும் இங்கில்லை
சாதிகளோ இன்றிங்கே சங்கடத்தைத் தருகுதய்யா !
சாதிக்கும் திறனெல்லாம் தரங்கெட்டுப் போனதனால்
வேதனைதான் நாள்தோறும் வீதிவலம் வருகுதய்யா !

சுரண்டுகின்ற கூட்டமது பெருத்திங்கு போயாச்சு
வரட்சியது வந்துநமை வாட்டிவும் விட்டாச்சு
புரட்சியெனும் புயலொன்று பொங்கியினி வந்தால்தான்
மிரட்சிகொண்ட மாந்தரினம் மனமகிழ்வு கொள்ளுமய்யா !

பதவிக்காய் மோதுகின்ற பாவிகளும் பெருத்தாச்சு
உதவுகின்ற மனங்கொண்ட உறவுகளும் சிறுத்தாச்சு
அதர்மங்கள் எங்கெங்கும் ஆட்டங்கள் போடுவதால்
சுதந்திரமும் சோர்ந்திங்கு சோகமதில் கிடக்குதய்யா !

மதவாதம் மானுடத்தை மதியிழக்க வைத்தாச்சு
அதனாலே வன்முறைகள் அடங்காமல் வளர்ந்தாச்சு
சதிகொண்ட அரசியலால் சரித்திரமும் மாறுவதால்
விதியென்று மக்களினம் மயக்கத்தில் கிடக்குதய்யா

பணமொன்றே யாவரையும் பாடாகப் படுத்துவதால்
குணங்கெட்டு மாந்தரினம் கும்மாளம் போடுதய்யா !
மணமின்றி மாண்பதுவும் மரியாதை இழப்பதனால்
தணலாகி வாழ்வதுவும் சலிக்காமல் எரியுதய்யா !

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (21-Sep-17, 9:30 pm)
பார்வை : 69

மேலே