கொடுமை நிறைந்த ஆட்டம்
விதைகளை மரங்கள் தந்ததா - இல்லை
விதைகள் மரங்களை தந்ததா ?
எதைஎது எங்ஙனம் தந்தது –இதை
இங்கின் றறிந்திடல் கூடுமோ ?
எதுமுதல் என்பது தெரிந்தால் –உலகில்
இறைவனும் இலையென வாகுமே !
பொதுவென ஆகிடும் இறைவன் –அவன்
பிறந்தது எங்ஙனம் தெரியுமோ ?
ஆதி எதுவென தெரியாது –அதன்
ஆரம்ப வாழ்வும் புரியாது
மோதிடும் அலையென மனிதன்-இன்று
முட்டி மோதி தவிக்கிறான்!
நல்லது மலருமா இங்கினி –அதில்
நாட்டம் கொண்டு நீகவனி !
புல்லர் கூட்டம் விலக்கிடு-அந்தப்
பெருமையை என்றும் கணக்கிடு !
தன்னலம் பெரிதாய் ஆனது –அதில்
தரணியும் புதைந்து போனது !
அன்பெனும் பண்பு தொலையுது –அதில்
அகிலமே வெந்து அழியுது !
தற்கொலை செய்திடத் தூண்டும் –பெரும்
தாக்கம் நெஞ்சைத் தீண்டும்
குற்ற உணர்வு இல்லா –ஒரு
கொடுமை நிறைந்த ஆட்டம் !