எங்கள் பாரதி

பாரதி கலைக்கழகக் கவியரங்கத் தலைப்புக்கு எழுதியது

காதுவழியக் கீதமெனும் காட்டுமலைத் தேனெடுத்து
மோதவந்து ஊட்டி விட்டவன் - பெரும்
மோனநிலை காட்டி விட்டவன் !! - குளிர்
சீதமிகு காதலிலும் சீறும்ஞானப் பாடலிலும்
போதனைகள் தந்து சென்றவன் - பொழுது
போக்குக்காக வானம் வென்றவன் !!
ஆதரவாய்ப் பேசியிருள் சாகரம் அழிந்துவிடப்
பாதைபோட்டுத் தான் நடந்தவன் - அந்தப்
பரமசக்தி நிழல் சுமந்தவன் ! - ஒளி
ஆதிநெருப் பாகிவந்து ஜோதிநெருப் பாய்வளர்ந்து
வீதிநெருப் பான பாரதி ! - அவன்
விந்தைதமி ழுக்குச் சாரதி !

புத்தம்புது சிந்தனைகள் புயலளவுக் கர்ஜனைகள்
நித்தநித்தம் செய்து பார்த்தவன் - வாழ்வின்
நித்தியத்தால் கொஞ்சம் வேர்த்தவன் - ஈட்டி
குத்தவந்த வேளையிலும் தின்னவரும் வேங்கையிலும்
சக்திதேவ ரூபம் கண்டவன் - புகழ்
சாகாத வாழ்க்கை கொண்டவன் !
எத்திநின்ற பகைவரை எதிர்த்துநின்ற வீரருக்குப்
புத்திகூர்மை ஆகச் செய்தவன் - அற்பப்
புல்லருக்கும் ஆண்மை பெய்தவன் ! - பெண்ணின்
உத்திகண்டு விடுதலைக்கு சக்திகண்டு பாடிவைத்த
கத்திதானே எங்கள் பாரதி - புதுக்
கவிதையலை பொங்கும் வாரிதி !

தோத்திரத்துப் பாடலிலும் தோன்றுமுள்ள விடுதலைக்கு
பாத்திவைத்துப் பாடி வைத்தவன் - தேச
பாசந்தன்னை நெஞ்சிற் தைத்தவன் ! - மூட
சாத்திரத்தை மாய்ப்பதற்கு ஜாதிபோதை தீர்ப்பதற்கு
நேத்திரத்து ஜோதி தந்தவன் - வேலின்
நேர்வடிவாய் பூமி வந்தவன் !
ஆத்திரத்தில் அறிவிழக்கும் அற்பமான போக்குமாற்ற
சூத்திரம் மொழிந்த தைரியன் - அந்தச்
சூழலிலும் ஓடும் வீரியன் - நாடு
காத்துநிற்கும் மக்கள்,வீரர் கைக்குழந்தை யாவருள்ளும்
பூத்திருக்கும் ஜோதி பாரதி - சொல்
புரட்சிசெய்த தெங்கள் பாரதி !

-விவேக்பாரதி
22.09.2017

எழுதியவர் : விவேக்பாரதி (22-Sep-17, 11:24 pm)
பார்வை : 103

மேலே