வரதட்சணை

"இங்க யாருமா நந்தினி. உங்கள ஹெட்மாஸ்டர் கூப்டாரு" என்று கூறி விட்டு சென்றார் பியூன். மாட்னியா.. போ போ இன்னிக்கு டின் கட்டி அடிக்க போறாங்க. தோழிகள் எல்லோரும் பரிதாபத்துடன் பார்க்க , தலை குனிந்த படியே டிபார்ட்மென்ட் கு சென்றேன். இந்த ரவிச்சந்திரன் மாஸ்டர் போய் எல்லாத்தையும் சொல்லிட்டாரு போல.
"சார், கூப்பிட்டிங்க போல .... " என்றவாறு எட்டி பார்த்தேன். "இங்க வாம்மா. இன்னிக்கு கிளாஸ் ல என்னம்மா நடந்துச்சு.. " "ரவிச்சந்திரன் சார் கிளாஸ் எடுக்கும் போது எல்லாரும் அவரை கேலி பண்ணி சிரிக்கிறாங்கலாமே!! நீ கொஞ்சம் கண்டிச்சி வைம்மா. பாடத்துல கவனம் வைக்க சொல்லு. " என்று என் பதிலை கூட எதிர்பார்க்காமல் தன வேலையை பார்க்க சென்றார்.

"சர்தான், இந்த கேலி கிண்டலுக்கு எல்லாம் காரண கர்த்தாவே நீ தான் னு தெரியாத அப்பாவிகளா இருக்காங்களே.. " "ஏண்டி, பண்ணதெல்லாம் நீ... திட்டு மட்டும் எங்களுக்கா? " என்றாள் சுகுணா.

"அதுக்கெல்லாம் முக ராசி வேணும் டீ" என்று நகைத்தபடியே கல்லூரியிலிருந்து வீடு சென்றேன். அது என்னவோ எனக்கு மட்டும் தான் நெறைய விஷயம் கண்ணுல படும் போல. அது என் ராசி. அந்த ரவிச்சந்திரன் மாஸ்டர் வார்த்தைகளை ஆர்வக்கோளாறு ல மாத்தி தப்பா சொல்றது என் காதுல நல்லா விழும். அதை கேலி கிண்டல் பண்ண ஆரம்பிக்க போய் வகுப்புல இருக்கிற மொத்த பேரும் அத கவனிச்சு சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்க. இதை அந்த மாஸ்டர் வத்தி வைக்க, மாட்னது சக மாணவர்கள் மட்டுமே.

இப்படி தான் வீட்டு தென்னை மரத்துல ஒரு நாள், ஒரு பாம்பு, மரத்து மேல ஏறி, இறங்க தெரியாம மரத்து உச்சி ல மாட்டிட்டு இருந்த காட்சிய பார்க்க பெரிய கூட்டம் கூடிடுச்சு. கூட்டமே அந்த பாம்ப பாக்க, என் கண்ணு மட்டும் அந்த கூட்டத்தை வேடிக்க பாத்தது. அப்போ தான் ஒரு ஆள் சைக்கிள் ல வந்துட்டு இருந்தார். கேரியர் ல அரிசி காய்கறி பை. பாம்பை பாக்கற அவசரத்துல, ஒழுங்கா ஸ்டான்ட் போடாம சைக்கிள் கீழ விழுந்து, காய்கறி எல்லாம் சாக்கடை ல விழுந்துடுச்சி.

அத பார்த்துட்டு கேக்க பேக்கேன்னு அடக்க முடியாத சிரிப்பு. இங்கிதம் தெரியாத சிரிப்பு. சீரியஸ் ஆன நேரத்துல கூட வந்துடுது. சிரிப்பு எவ்ளோ இயல்பானதோ அதே மாதிரி தான் கவலையும். கவலைன்றது புண்ணு மாதிரி. அத பிடிச்சி நோண்ட நோண்ட புண்ணு அதிகமாக தான் செய்யும். அப்டியே விட்டுட்டா தானா ஆறி போகும். அதே மாதிரி தான், போட்டி ல ஓடும் போது விழுந்து அடிபட்டுடுமோ ன்னு பயந்துட்டு இருந்தா ஓடுறதுல கவனம் போய் தோத்துடுவோம்.

ஊர்வசி, ஊர்வசி, டேக் இட் ஈஸி ஊர்வசி... ஆஹா என்ன தத்துவமான ஒரு பாடல். எல்லாத்தையும் டேக் இட் ஈஸி யா எடுத்துக்கிட்டா, சுலபமா இருக்கும் வாழ்க்கை.

எவ்வளவு சீக்கிரம் வந்தாலும், ஏண்டி லேட்டு ன்னு கேக்காம இருக்க முடியாது எங்கம்மா வால. நான் மட்டும் பையனா எங்கம்மா காலத்துல பொறந்துருந்தா, அம்மாவ தான் கல்யாணம் பண்ணிருப்பேன். எப்பா. என்ன ஒரு பொறுமை. என்ன ஒரு திறமை. பதினாறு வயசுல கல்யாணம் பண்ணி, பெரிய குடும்பத்தை மேய்ச்சி, வளர்த்து ஆளாக்கி..... சொப்பா ..... என்னால முடியாது டா சாமீ.

இது தான்ங்க என் பிரச்னை. வயது வரும் வரை, ஆண் பெண் என்ற வித்யாசம் வெகுவாக தெரியாமல் வளர்ந்து விட்டேன். திடீர் என்று வயது வந்த பின், என் பள்ளி நண்பன், நீ என் பக்கத்தில் உக்கார கூடாதாம், எங்கம்மா சொன்னாங்க, என்று தள்ளி சென்று உக்கார்ந்துக் கொண்டான். என் அண்ணனுடைய நண்பர்கள் எல்லோரும், பாப்பா பாப்பா என்று பாசமாக இருந்தவர்கள், என்னை பார்த்தால் பேச வந்ததை கூட பேசாமல் திரும்பி சென்று விடுவார்கள்.

என் அண்ணனோ, வெளியில் எங்கு சென்றாலும் அழைத்து செல்பவன், இப்போது ஒன்றாக வெளியூர் பயணம் என்றால் கூட, இவளை கூட்டி போக முடியாது , என்று மறுக்கிறான். வீட்டு வேலை செய்ய வேண்டும். வாயடக்கி பேச வேண்டும். உடையில் கவனம். நடையில் கவனம். லொட்டு லொசுக்கு என்று... பெண் பிறவி வெறுத்து விட்டது. நான் ஏன் ஒரு ஆணாக பிறக்க வில்லை , எவ்வளவு சுதந்திரமாக இருந்திருக்கலாம். ச்ச....

ஜாலியாக சைட் அடித்திருக்கலாம். தியேட்டரில் விசிலடித்து டிக்கெட்டுகளை கிழித்து பறக்க விட்டிருக்கலாம். இப்படி எத்தனையோ கலாம்கள் ... சரி, ஆவுற கதையை பாப்போம். எப்படியோ கல்லூரியில் மூன்றாம் ஆண்டு வரை கடத்தி விட்டேன். இனி தள்ளி போட முடியாது. கல்யாணம் பண்ணியே தீர வேண்டும் என்று வாரம் ஒரு முறை பஜ்ஜி சொஜ்ஜி என்று தின்ன வந்து விடுகிறார்கள்.

நான் சூப்பர் பிகர் இல்லையென்றாலும் சுமாரான பிகர் என்றும் சொல்ல முடியாது. இருப்பினும், ஜாதக பொருத்தம், கொஞ்சம் என்னை பற்றி வெளியில் கிடைக்கும் தகவல்கள், வரதட்சணை என்று எப்படியாவது தள்ளிக் கொண்டே போய் கொண்டிருப்பதில் எனக்கு மகிழ்ச்சி தான்.

உண்மை என்னவென்றால், நான் மிகுந்த சோம்பேறி, நிறைய அடம். என்னால் மற்றவர்களுக்கு கட்டுப்பட்டோ, வீட்டு வேலை செய்துக் கொண்டோ இருப்பது முடியாத காரியம். இந்த தகுதி இல்லாதவள், எப்படி கல்யாண சந்தையில் விலை போக முடியும். பாவம் என் அப்பா. என் அண்ணனோ, இந்த சனியனை வெளியில் விரட்டினால் தானே தன் கல்யாணம் நடக்கும் என்று காவு காத்துக் கொண்டிருக்கிறான்.

எனக்கு வரப்போகும் ராஜகுமாரன் தான், குதிரை மேல் ஏறி வராமல், குதிரையையும் சேர்த்து தூக்கி கொண்டு வருகிறானாக்கும். இன்று மாலை கூட பெண் பார்க்க வருகிறார்கள். அலங்காரம் செய்ய வேண்டும்.
எத்தனை முறை வந்தாலும், வீட்டில் அதே பரபரப்பு இருந்தது. புடவை கட்டி, மைய அறைக்கு வந்து நின்றேன். பையன் மிக அழகாக இருந்தான். சினிமா வில் காட்டுவது போல், குண்டு அம்மா, ஒல்லி கணவன். வழக்கம் போல்,

"நாங்க இவ்ளோ தான் வேணும் னு கேக்க மாட்டோம். நீங்களா பொண்ணுக்கு என்ன போடுவீங்களோ போடுங்க. எங்க அண்ணன் பையனுக்கு வந்தவ, நூறு பவ்னும், ஒரு கார், மற்றும் பையனுக்கு சங்கிலி, மோதிரம் போட்டாங்க. என் ஒன்னு விட்ட தங்கச்சி பையனுக்கு, இருவது லட்சம் கைல குடுத்தாங்க. நாற்பது பவ்ன் நகை, ஒரு புல்லட்டு குடுத்தாங்க. எங்களுக்கு ஒரு ஸ்டேட்டஸ் இருக்கு பாருங்க" என்றே பேசி கொண்டு போனாள்.

தனியாக பேசிக் கொள்ள சந்தர்ப்பம் வந்தபோது நேராக கேட்டேன் மாப்பிள்ளையிடம், "உங்க அம்மா வரதட்சணை சீர் செனத்தி வேண்டாம் னு சொல்லிட்டு, மறைமுகமா கேக்கறாங்களே" என்ற என்னிடம், "எங்க அம்மா பேச்சுல நான் தலை இடுறதில்ல. அவங்க சொன்னா கரெக்டா இருக்கும். அத விடு, உனக்கு என்ன புடிச்சிருக்கா? எனக்கு கார் ஓட்ட தெரியும், யோசிச்சி பாரு, நம்ப ரெண்டு பெரும் உங்க அப்பா வாங்கி கொடுக்கிற கார் ல ஒண்ணா ஆபீஸ் போனா?"

அவனை பார்த்து புன்னகைத்தா படியே ஹாலுக்கு சென்று அந்த கார்டை நீட்டினேன். "என்னம்மா இது, ஏதோ கார் கடை கார்டும் நகைக்கடை விலாசமும் தர " என்றாள் அந்த அம்மா. "நீங்க அட்ரஸ் மாறி வந்துட்டிங்கன்னு நெனக்கிறேன் மா. நீங்க எதிர்பார்க்கிற மாதிரி, காரோ நகையோ விக்ர இடம் இல்ல இது. மனசும் மனசும் பொருத்தம் பாக்கிற இடம். நான் வேணா கடைக்கு வழி சொல்லட்டா?"

அவள் முகத்தில் ஈயாடவில்லை. அவள் பேச வாய் எடுத்த போது, இங்கே நடந்த எதுவும் தெரியாத அம்மா, காப்பி எடுத்து கொண்டு வந்தாள். சிரிப்பை அடக்க முடியாமல் சிரிக்க ஆரம்பித்தேன் ஆராவாரம் இல்லாமல் அவர்கள் எழுந்து செல்வதை பார்த்துக் கொண்டே ....

எழுதியவர் : நிலா (25-Sep-17, 8:47 pm)
Tanglish : varathatchanai
பார்வை : 523

மேலே