ஏன் இப்படி
கேடவர் ஊரார் பகடி செய்யின்
கேவலம் கொண்டு துவளும்
பல சாமானிய புத்திரர் மத்தியில்
அவருக்கொப்பாய் நானும்
தோற்பேன் என்று நினைத்தீரா?
அம்மை பூசும் பிரம்மை கல்வி
எம்மை என்றொரு நாள்
வீசும் வறுமை நெடிக்கு
முற்றுகை இடும் என்றல்லா
வேறேதும் காரணிக்காய்
வெறுமனே கற்கிறேன் என்று நினைத்தீரா?
எட்ட நின்று விளக்கினால்
எதிர்ப்பேச்சு என்பீரா?
ஏடெடுக்கும் வேலை தாண்டி
ஏதேனும் செய்ய முனைந்தால்
என் சொல் தட்டும்
எனைச்சாரா மகன் என்பீரா?
என் எழுத்துக்கள் கூட
அதன் கழுத்தை நிமிர்த்தி
நின் பால் கேள்விகள் தொடுக்க
இதுவரை தொடுத்த வேள்விகளை
துறப்பதை பார்த்தும்
துஷ்ட மகன்
எனை தூற்றுகிறான் என்பீரா?
எனக்கென உன் கற்பனை விசும்பில்
கல்வியை திணித்து விதைத்ததில்
மார்தட்டும் கீர்த்திக்கு
மறுப்புத் தெரிவிக்கும்
மூடப்புதல்வனாய் நான் இன்றியும்
காதலுமற்ற போதையுமற்ற
பிற தீயதுமற்ற ஆடுகள வாஞ்சைக்கு மட்டும் எனக்கான விதியெழுதும்
உமது பேனையில்
தீந்தை தீர்ந்தது என்பீரா?
உமது நாமம் நிலைக்கவும்
உயர்த்தவும் ஒரு வகையில்
நாங்களும் ஏணிப்படி
இருந்தும்
எம் விருப்பு மனுக்களை மறுக்கும்
உங்கள் இதயங்கள் மட்டும்
ஏன் இப்படி?
-இரையும் அளி இன்ஸிமாமுல் ஹக்-