ஆழ்மனதின் ஆவிகள்

எனக்குள்ளும் நிராசைகள்,
ஒரே குழியில் கிடத்தப்பட்ட பிணங்களை போல துர்நாற்றமிட்டு கொண்டிருக்கிறது..
அழிந்து விட்ட நினைவு பரிசுகளையும்,
நிராகரித்து விட்டு சென்ற உறவுகளையும்,
மீட்டெடுக்க முடியாது போனது,
நெருஞ்சி முள்ளாய் நெஞ்ஞை சுருக்கென்று குத்தி கொண்டே இருக்கிறது.
புன்னகை முகமூடிகளை அணிந்த பின்பும்,
விரக்தி என்ற கூர் தீட்டப்பட்ட கத்தியொன்று
என் அகோர முகத்தை தோலுறித்து விடுகின்றது.
தனிமையையொற்றி இருள்தனில்,
சாத்தான் ஒன்று என் குழம்பிய மனதில்,
மரண பீதியை விதைத்து விட்டு செல்கிறான்.
மரணத்தை நேசிக்க கற்று கொள்ளும் முன்,
என் நிராசைகளில் ஒன்றேனும் நிவர்த்தி செய்வாயாவென்று சாத்தானிடம் விண்ணப்பித்தேன்..
என் நிராசையின் எண்ணிக்கைகள் கட்டுக்கடங்காமல் சென்று விட்டதால்,
ஆசைகளை துறக்க முடிவெடுத்து விட்டேன்.
சாத்தானின் வருகைக்காக காத்திருக்கிறேன்..
என்னையும் என் நிராசைகளையும் இறைவனிடம் கொண்டு செல்வதாய் சொப்பனத்தில் சொல்லியதை நம்பி..
சேர்த்து வைத்த கனவு துளிகள் எல்லாம் விடியல் சிதைத்து கொண்டிருந்தது,.
துன்புறுத்தும் வேதனை நெடிகள் வேதாளம் போல தோளிலேயே தொங்கி கொண்டிருக்கிறது..
விலங்கிடப்பட்ட சாத்தான்கள் இரவு பொழுதுகளில் விஸ்வரூபம் எடுத்திருந்தது,.
தனிமையும் இருளும் துயரத்தின் வடிகால்களை தூர்வாரி கொண்டிருக்கிறது..
நீண்ட பயணத்தின் கட்டு சோறுகள் துர்நாற்றமாகி கெட்டு போய் விஷமேறி கிடக்கிறது..
நித்திரையற்ற பின்னிரவின் ஏக்க தாபங்கள் பைத்திய மனோநிலையை கண்முன் நிழலாட செய்கிறது..
நிசப்தம் சூழ்ந்த மௌனத்தின் பின்பகுதியில் தற்கொலை எண்ணங்கள் வெற்றி களிப்பில் எக்காளமிடுகின்றன..
இதய துடிப்பின் ஓசைகள் ஒவ்வொன்றாய் குறைவது ஊர்ஜிதமாகி கொண்டிருக்கிறது..
மரணத்தின் நிழல் உயிரின் மீது படர்ந்து உள்ளிழுத்து கொண்டிருந்தது..
தனித்து விடப்பட்ட ஆன்மா பொழுது புலரும் வரை சுற்றி களைத்து போய் மீண்டும் உடலில் புகுந்து உயிர்பித்து கொண்டிருந்தது.
தூக்க கலக்கத்தில் துயிலெழும்பிய என் பைத்திய தன்மை,
அகோர பசியில் இன்னும் மௌனமாய் உரையாடி கொண்டிருக்கிறது தனக்குதானே.

எழுதியவர் : சையது சேக் (26-Sep-17, 8:31 pm)
பார்வை : 100

மேலே