வன்புணர்வு

சேர்த்து வைத்த கனவு துளிகள் எல்லாம் விடியல் சிதைத்து கொண்டிருந்தது,.
துன்புறுத்தும் வேதனை நெடிகள் வேதாளம் போல தோளிலேயே தொங்கி கொண்டிருக்கிறது..
விலங்கிடப்பட்ட சாத்தான்கள் இரவு பொழுதுகளில் விஸ்வரூபம் எடுத்திருந்தது,.
தனிமையும் இருளும் துயரத்தின் வடிகால்களை தூர்வாரி கொண்டிருக்கிறது..
நீண்ட பயணத்தின் கட்டு சோறுகள் துர்நாற்றமாகி கெட்டு போய் விஷமேறி கிடக்கிறது..
நித்திரையற்ற பின்னிரவின் ஏக்க தாபங்கள் பைத்திய மனோநிலையை கண்முன் நிழலாட செய்கிறது..
நிசப்தம் சூழ்ந்த மௌனத்தின் பின்பகுதியில் தற்கொலை எண்ணங்கள் வெற்றி களிப்பில் எக்காளமிடுகின்றன..
இதய துடிப்பின் ஓசைகள் ஒவ்வொன்றாய் குறைவது ஊர்ஜிதமாகி கொண்டிருக்கிறது..
மரணத்தின் நிழல் உயிரின் மீது படர்ந்து உள்ளிழுத்து கொண்டிருந்தது..
தனித்து விடப்பட்ட ஆன்மா பொழுது புலரும் வரை சுற்றி களைத்து போய் மீண்டும் உடலில் புகுந்து உயிர்பித்து கொண்டிருந்தது.
தூக்க கலக்கத்தில் துயிலெழும்பிய என் பைத்திய தன்மை,
அகோர பசியில் இன்னும் மௌனமாய் உரையாடி கொண்டிருக்கிறது தனக்குதானே.
ஆடை கிழித்து
அவசர கதியில் அரவணைத்து,
உடற்பசியை உள்ளூர தனித்து கொண்டது.
காம பேய்யொன்று.
சிறகுகளை பிய்த்தெறிந்த போது பீறிட்ட இரத்தத்தையும் கோர பசியினால் வயிறு முட்ட குடித்து முடித்திருந்தது,
கொலை வெறி கொண்ட சாத்தான்னொன்று.
எலும்பற்ற சதை துண்டுகளின் கூறிய முனைகளால்,
பெண்மையின் இலக்கணங்கள் கிறுக்கபட்டு நயமின்றி சீரழித்து விட்டது.
மனித தன்மையற்ற மிருகமொன்று.
துடிதுடித்த போது மறைந்திந்து நோட்டமிட்டு விட்டு,
துடிப்பு அடங்கிய பின்னர்.
புகைப்படம் எடுத்து பிழைப்பு நடத்துகிறது,
ஊடக பிணந்தின்னிக்கழுகொன்று.
மீண்டும் ஒரு நிகழ்வுக்காக வலை விரித்து விட்டு இளப்பாறி கொண்டிருக்கிறது.
உறையிடப்பட்ட விந்து தெறிக்கும் பழைய துப்பாக்கியொன்று.
சட்டம் கடுமையாக்க படாமல் சீரழித்தவனுக்கு காவலாய் நிற்கிறது.
இந்திய துருப்பிடித்த சட்டமொன்று.
ஒவ்வொரு முறையும் வன்புணர்வை கண்டு கொதித்தெழுந்து,
இயலாமையால் தன்னையே தூக்கிலிட்டு கொள்கிறது.
மனிதம் என்றொரு மாயையொன்று.

எழுதியவர் : சையது சேக் (26-Sep-17, 8:16 pm)
பார்வை : 292

மேலே