மாற்றுத்திறனாளி அல்ல உலகை மாற்றும் திறனாளி ஸ்ரீகாந்த் போளா

அவர் பிறந்த போது, அக்கிராமமே, கூறிய யோசனை என்னவென்றால், குழந்தையை கொன்றுவிடு என்பதே. அதனை வளர்ப்பதைக் காட்டிலும், இந்த வலி தாங்கிக்கொள்ளக் கூடியதே என்பது அவர்கள் வாதமாக இருந்தது. கண்கள் இல்லாமல் இக்குழந்தை பயனற்றது என்றும், பார்வையற்று பிறத்தல் பாவம் என்றும் கூறினார்.

இருபத்து மூன்று வருடங்கள் கழித்து, ஸ்ரீகாந்த் போளா இன்று தலை நிமிர்ந்து நிற்கின்றார். "உலகம் எனைப்பார்த்து, ஸ்ரீகாந்த் உன்னால் எதுவும் செய்ய இயலாது எனக்கூறினால், நான் அதனை பார்த்து என்னால் எதுவும் இயலும் எனக்கூறுவேன்” என்ற அவர் வார்த்தைகளுக்கு ஏற்ப தலை நிமிர்ந்து நிற்கின்றார்.

ஸ்ரீகாந்த் தற்போது ஹைதராபாத்தில் உள்ள 'போளன்ட் இண்டஸ்டிரீஸின்', தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். இந்நிறுவனம், படிப்பறிவில்லாத, மாற்றுதிறனாளிகளை வேலைக்கு அமர்த்தி, சுற்றுச்சூழலுக்கு பங்கம் விளைவிக்காத வகையில், நுகர்வோர் பேக்கேஜிங் பொருட்களை தயாரித்து வருகின்றனர். இந்நிறுவனத்தின் மதிப்பு 5௦ கோடி ரூபாய் ஆகும்.

அவர் தன்னை மிகவும் அதிர்ஷ்டசாலியாக கருதுகிறார். தற்போது அவர் கோடிகளை குவிப்பது அதற்கு காரணம் அல்ல. ஆனால் வருடத்திற்கு 20,000 மட்டுமே சம்பாதித்து, மற்றவர்கள் கூறிய அறிவுரையை கேளாது, தன்னை பாசத்தோடும், நேசத்தோடும் வளர்த்த பெற்றோர்களை பெற்றதற்காக அவ்வாறு அவர் கருதுகிறார்.

சாதனை கதை:

ஸ்ரீகாந்த் போன்றோரின் கதை மற்றவர்களை அதிகம் ஈர்ப்பது ஏன்? அவர்களுக்கு நம்பிக்கை அளிப்பது ஏன்? அவர் சம்பாதித்துள்ள பணமா அல்லது அவர் சந்தித்த சவால்களா? என்று பார்க்கையில் இவை இரண்டுமே இல்லை என தெரிந்தது.

அனைவருமே கடினமான சவால்களை சந்திக்கின்றனர். அனைவர்க்கும் கனவுகள் உள்ளன, அனைவரும் தங்கள் தடைகளை தாண்டி முன்னேறுகின்றனர். ஆனால் வெகுசிலரே, சமுதாயம் அவர்களுக்கு விதிக்கும் எல்லைகளைத் தாண்டி முன்னேறுகின்றனர்.

எனவே ஸ்ரீகாந்தின் சோகக்கதையில், என்ன சவால் வந்தாலும், விடாப்பிடியாக, அவற்றை எதிர்கொண்டு அவர் முன்னேறியது தான் தெரிகிறது. பார்வையற்றவராக பிறந்தது மட்டுமின்றி, ஏழையாகவும் பிறந்தார். எனவே நம் சமுதாயம் அவரை எவ்வாறு நடத்தி இருக்கும் என்பதை நீங்களே உணர இயலும்.

பள்ளியில் கடைசி பெஞ்சில் உட்காரவைக்கபட்டார். விளையாட அனுமதிக்கப்படவில்லை. பத்தாம் வகுப்பிற்கு பிறகு, அறிவியல் கற்க விருப்பப்பட்டவருக்கு அவரது ஊனம் காரணமாக வாய்ப்பு மறுக்கப்பட்டது. ஆனால் 18 வயது வரை கல்வி அமைப்பினை எதிர்த்து போராடிய ஸ்ரீகாந்த், பின்னர் அமெரிக்காவில் உள்ள மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடுட் ஆப் டெக்னாலஜியில் சேர்க்கப்பட்ட முதல் பார்வையற்ற மாணவர் என்ற பெருமையும் அவருக்கு கிட்டியது.

தற்போது ஸ்ரீகாந்த்திடம் நான்கு உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன. ஹுப்ளியில் ஒன்று, நிசாமாபாத்தில் ஒன்று, ஹைதராபத்தில் இரண்டு. மேலும் முழுக்க சூரிய சக்தி மூலமாக இயங்கும் ஒரு தொழில்சாலை விரைவில் சென்னையில் இருந்து 55 கிலோமீட்டரில் உள்ள ஸ்ரீசிட்டியில் வரவிருகின்றது.

ஏஞ்சல் முதலீட்டாளர் ரவி மந்தா, இரண்டு வருடங்களுக்கு முன்பு, ஸ்ரீகாந்த்தை சந்தித்தபோது, அவரது, வணிக அறிவாற்றல் மற்றும் தொலைநோக்கு பார்வை ஆகியவை மிகவும் கவரவே, அவருக்கு வழிகாட்டுதல் மட்டுமல்லாது, அவரது நிறுவனத்தில் முதலீடு செய்யவும் முடிவெடுத்தார்.

தற்போது அவர்கள் இரண்டு மில்லியன் அமெரிக்க டாலர்கள் (13 கோடி) திரட்ட உள்ளனர். இதுவரை 9 கோடி திரட்டியுள்ளனர். நிறுவனத்தின் பங்குகளை விற்பனைக்கு கொணர்வதே ரவியின் நோக்கம். மாற்று திறனாளிகளை எழுபது சதவிதம் வேலைக்கு அமர்த்தி, ஒரு நிறுவனத்தை தொடர்ந்து நடத்துவது சாதாரண காரியம் அல்ல. ஆனால் ஸ்ரீகாந்தின் தொலைநோக்குப் பார்வை அதை சாத்தியமாகியுள்ளது என்கிறார் ரவி. அண்மையில் இரண்டாம் கட்டமாக ரத்தன் டாடாவிடம் இருந்து நிதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இவரது நிறுவனம் தற்போது 50 கோடி ரூபாய் மதிப்புள்ளதாக ஆகியுள்ளது.
தனிமை என்பது கொடிது :

“மாற்றுதிரனாளிகளை தனிமைப்படுத்துதல் என்பது அவர்கள் பிறப்பில் இருந்து துவங்குகிறது” என்று தனது முதல் “இன்க்டாக்” கில், ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். சிறுவயதில் அவரது தந்தை அவரை வயல்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் இவரால் எதுவும் செய்ய இயலாது என்பதை பார்த்து பின்னர் பள்ளிக்கு அனுபியுள்ளார். ஆனால் அங்கும், தனிமையே பரிசாக ஸ்ரீகாந்திற்கு கிடைத்துள்ளது. பின்னர் அவர் எதுவும் கற்க இயலவில்லை என்பதை அறிந்து அவரது தந்தை, அவரை ஹைதராபாத்தில் உள்ள மாற்றுதிறனாளிகளுக்கான பள்ளியில் சேர்த்துள்ளார்.

அங்கு சதுரங்கம் மற்றும் மட்டைப்பந்து ஆகியவற்றை விளையாடக் கற்றுக்கொண்டது மட்டுமல்லாது, அவற்றில் சிறப்பாகவும் செயல்பட்டுள்ளார். மேலும் முன்னால் ஜனாதிபதி திரு. அப்துல்கலாம் அவர்களின் “லீட்இந்தியா” திட்டத்தில் அவரோடு இணைந்து பணியாற்றும் வாய்ப்பையும் பெற்றுள்ளார்.

இத்துணை இருந்தும் பார்வையில்லாக் காரணத்தால், பதினோராம் வகுப்பில் அறிவியல் துறையை தேர்ந்தெடுக்க ஸ்ரீகாந்திற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. பின்னர் 6 மாத காலம் நிதிமன்றம் மூலம் போராடிய பின்பு, அவருக்கு அந்த வாய்ப்பு அளிக்கப்பட்டது. மேலும் அதற்கான சலுகைகள் அளிக்க இயலாது எனவும் கூறப்பட்டது.

ஆனால், அனைத்து பாடப்புத்தகங்களையும் ஒலிபுத்தகங்களாக மாற்றி, இரவு பகலாக படித்து பனிரெண்டாம் வகுப்பில் 98% மதிப்பெண் பெற்று ஸ்ரீகாந்த் தேர்ச்சி பெற்றுள்ளார்.
துணிவே துணை:

அடுத்ததாக, பள்ளிமுடித்து கல்லோரிகளுக்கு (ஐஐடி, பிட்ஸ்பிலானி மற்ற கல்லூரிகள்) நுழைவுத்தேர்வு எழுத விண்ணப்பம் அனுப்ப, பார்வை இல்லை என்ற காரணத்தால் அனுமதி மறுக்கப்பட்டது.

ஆனால் மீண்டும் போராட மனமின்றி, இணையத்தில், தன்போன்றோர் எங்கு கற்க இயலும் என்பதை தேடியுள்ளார் அவர். அதன் மூலம், அமெரிக்காவில் இருந்த மிக பெருமைமிக்க நான்கு கல்லூரிகளில் அவருக்கு இடம் கிடைத்துள்ளது. அதில். எம்ஐடியை தேர்வு செய்து, அதில் நுழைந்த முதல் சர்வதேச பார்வையற்ற மாணவன் என்ற பெருமையும் பெற்றார்.

அங்கு சூழ்நிலையோடு ஒத்துபோவது சிரமாக இருப்பினும் அதனையும் கடந்து, படித்து முடித்து, அடுத்து என்ன என்ற கேள்வி மூலம், ஆரம்பித்த இடத்திலேயே வந்து நின்றுள்ளார் ஸ்ரீகாந்த்.

இக்கேள்விகளுக்கு விடைக்காணும் பொருட்டு, அமெரிக்காவில் கிடைத்த வேலையை உதறிவிட்டு இந்தியா வந்துள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்காக, ஒரு மறுவாழ்வு மையம் துவங்கியுள்ளார். அதன் மூலம் 3000 குழந்தைகள் கல்வி கற்கவும் உதவியுள்ளார். அதன் பிறகே அவர்களுக்கான வேலைவாய்ப்பு பற்றிய சிந்தனை வந்துள்ளது. எனவே அடுத்ததாக அவர்களுக்கென இந்நிறுவனத்தை துவங்கி, தற்போது 150 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளார்.
துணிவுக்கும் மீறிய ஒரு துணை:

ஒரு காரணத்திற்காக போராடும் அனைவர்க்கும் நிச்சயமாக ஒரு உதவி கிட்டும். அவ்வாறு ஸ்ரீகாந்திற்கு உதவியவர் அவரது துணை நிறுவனர் ஸ்வர்ணலதா. அவரே தற்போது போளன்ட் நிறுவனத்தின் வேலையாட்களுக்கு பயிற்சிகள் வழங்கி வருகின்றார்.

அன்று பார்வையற்றவராக பார்க்கப்பட்டவர், இன்று பலரின் சந்தோஷத்திற்கு வழிகாட்டிக் கொண்டிருகின்றார். அவர் கூறும் பாடங்கள் மூன்று.
1. இரக்கம் காட்டுங்கள். மற்றவர்களை மேன்மைப்படுத்துங்கள்.
2. வாழ்வில் மக்களை உங்களோடு சேர்த்துக்கொண்டு, தனிமையை விரட்டுங்கள்.

3. கடைசியாக நல்லது செய்யுங்கள். அது உங்களைத் தேடி மீண்டும் வரும்.

எழுதியவர் : (27-Sep-17, 4:05 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
பார்வை : 664

மேலே