ஏதோ ஒரு கிராமம்
சினிமாவிலும்,
நேரிலும்
பார்த்து சலித்துப்போன
கிராம பிம்பத்தின் நகல்தான்
என் கிராமமும்.
மழைப் பொய்த்து,
அரசியல் பொய்த்து,
பசுமை வெளியேறி,
காவி பழுப்பு நிறம் குடியேறிய நிலங்கள்;
அதைத் தழுவிய துர்மரணங்கள்.
சமச்சீர், சமத்துவ வாசகங்கள்
மீறிய சாதி வெறிகள்
மீறிய சில காதல்கள்.
திண்ணைப் பேச்சுக்கள்,
அதற்கு தீனி போடத் தகாத உறவுகள்.
மெலிந்து கருத்த தேகங்கள்,
அதன் சாயலுக்கு பொருந்தாத பட்டணத்து
பேரன் பேத்திகள்.
சிதைந்த உள்ளூர் பூக்கள்,
களவாடப்பட்ட அதன் மணல் வீடுகள்.
என்ன!
ஊரின் எல்லையில்,
ஏதோ ஒரு அடைமொழிக் கொண்ட,
ஏதோ ஒரு அரசியல்வாதி
கால்பட்ட கிராமம்
என்றொரு பலகை நிற்கிறது
என் கிராமத்தின் தனித்துவமாக.