பார்வைக்கும் வைத்தேன்
------------------------------------------
வார்த்தைகளைத் தேடினேன்
வரிகளாக்க
வரிகளைக் கோர்த்திட்டேன்
வடிவமாக்க
வடிவத்தை சீர்செய்தேன்
கவிதையாக்க !
கற்பனையை ஓடவிட்டேன்
கருவிற்காக
கருவினை தேர்வுசெய்தேன்
கருத்திற்காக
கருத்தினை ஆய்ந்திட்டேன்
கருத்தாக !
சிந்தித்தேன் சிலநொடி
சிலவற்றை
சிதறுவதேன் சிந்தனையும்
சிலநேரங்களில்
சிறுமூளையில் சிக்கலா
சிதைவிற்கு !
அலங்காரச் சொற்கள்தான்
சொற்றொடராகுமா
அடுக்கடுக்கான வரிகள்தான்
வடிவம்பெறுமா
அழகான வடிவங்கள்தான்
கவிதையாகுமா !
கூறவந்ததில் கூர்மை
இருந்தால்
கூறிடும் கருத்தில்
ஆழமிருந்தால்
கூறுகளாய் பிரித்தாலும்
அர்த்தமிருக்கும் !
முயற்சியும் செய்கிறேன்
முனைப்புடன்
முன்பைவிட சிறப்பாக
எழுதிடவே
முற்போக்கு எண்ணங்களை
கவிதையாக்க !
களத்தினை யோசித்தேன்
பதிவிற்காக
பதிவிட முனைந்தேன்
பார்வைக்காக
பார்வைக்கும் வைத்தேன்
உங்களுக்காக !
----------------------------------------------------
பழனி குமார்
30.08.2017