ஏக்கம்

ஏக்கம்

யாருக்குப் புரிகிறது
ஒரு குழந்தையின்
ஏக்கம்?

தாயின்
வருடல்களுக்காக
ஏங்கிக்கிடக்கின்றன
இளந்தளிர்
விரல்கள்.

தந்தையின்
கரங்களில் தவழும்
ஊஞ்சல்
தருணங்களுக்காக
விழித்திருக்கின்றன
விழிகள்.

கன்னக்குழிப்
பாட்டியின்
கதகதப்பிற்காகவும்
தளர்
தாத்தாவின்
தேகத்தில்
மிதப்பதற்காகவும்
கைகளை
விரித்தே
வைத்திருக்கின்றன
சிற்றில்கள்.

தானே
கைகொட்டி
மகிழ்ந்திடும்
சின்னஞ்சிறு
இடைவெளிக்காக
காத்திருக்கின்றன
சின்னஞ்சிறுசுகள்.

எப்போது தன்மேல்
பறந்துபோகும்
வண்ணத்துப் பூச்சிகள்
என
நொடிதோறும்
விழிவிரித்து
வைத்திருக்கின்றன
வண்ணத்துச்சிறகுகள்.

தாயின்
கரக்குவியலில்
கொட்டும்
அருவித்துளிகளில்
குளித்துக் குதூகலித்திட
கடிகார வாசலை
திறந்தே
வைத்திருக்கின்றன
குளிர்கன்னங்கள்.

புதுப்புது
நட்புகளின்
முகிழ்ப்பில்
மகிழ்ந்துலாவிட
பூத்திருக்கின்றன
பூவிழிகள்.

நிலாப்பந்துவுடன்
விளையாடிட
எப்போது வரும்
இரவுகள்
என காத்திருக்கின்றன
சின்ன சின்ன
கால்கள்.

சிறு துணியும்
மூடாத
பொழுதுகளுக்காக
தவங்கிடக்கின்றன
இளந்துறவிகள்.

வளைய வளைய
வரும்
செல்ல நாயின்
வருகைக்காகவும்
வால் காற்றாடியில்
காற்று வாங்கவும்
காத்திருக்கின்றன
செல்லக் குட்டிகள்.

தன் மேல்
ஏறுதழுவும்
எறும்புகள்
வரும் வேளைக்காக
காத்திருக்கின்றன
இளம்
வீரத்திலகங்கள்.

தொட்டுவிடும்
தூரத்தில்
பறக்கும்
விட்டில் பூச்சிகளோடு
கைகுலுக்கிட
காத்திருக்கின்றன
விழுதுகள்.

யாருக்குப் புரிகிறது
ஒரு குழந்தையின்
ஏக்கம்?

- சாமி எழிலன்
9080228609

04 10 2017

எழுதியவர் : சாமி எழிலன் (4-Oct-17, 1:05 pm)
Tanglish : aekkam
பார்வை : 682

மேலே