சிநேகிதனே -அத்தியாயம் - 02

.....சிநேகிதனே.....

அத்தியாயம் : 02


நான்கு வருடங்களிற்குப் பின்பு...

எங்கே எனது காதலைக் கொன்று புதைத்துவிட்டுச் சென்றேனோ அங்கே நான்கு வருடங்களின் பின் மீண்டும் நான் கால் பதித்துள்ளேன்...இந்த நான்கு வருடங்களாக எனக்கும் அவனுக்குமிடையே எந்தவித தொடர்புகளும் இருக்கவில்லை..அன்றுதான் நான் அவனைக் கடைசியாகக் கண்டது..அதன் பின் அவனும் என்னை தொடர்பு கொள்ள முயற்சிக்கவில்லை...நானும் அதற்கு முயன்றதில்லை..

நான்கு வருடங்களில் நான் சிறிதும் நினைத்துப் பார்க்காத அளவிற்கு என் வாழ்க்கைத் தரம் உயர்வு கண்டது...ஆனால் எனது மனதை தனிமை,கண்ணீர்,வெறுமை மட்டுமே சூழ்ந்து கொண்டது...வெளியில் புன்னகைத் தெரிந்த எனக்கு உள்ளத்தில் புன்னகையை சேமிக்கத் தெரியாமலேயே போய்விட்டது...இன்பம் என்ற சொல்லே என் வாழ்க்கை அகராதியில் காணாமல் போயிருந்தது...

இப்போது கூட நான் இங்கே வந்திருப்பது அவனைப் பார்ப்பதற்காக அல்ல...நான் வளர்ந்த அதே அநாதை இல்லத்தில் எனக்கான குழந்தையினை தத்தெடுத்துச் செல்வதற்காகவே வந்திருக்கிறேன்...

கார் நான் தங்க வேண்டிய ஹோட்டலை நோக்கிச் சென்று கொண்டிருக்க, அவனும் நானும் இறுதியாகச் சந்தித்துக் கொண்ட பூங்காவைக் கண்டதுமே என்னை அறியாமலேயே என் கைகள் காரைத் தடுத்தி நிறுத்தியிருந்தன...

பூங்காவில் நுழைந்து அவனும் நானும் அன்று அமர்ந்திருந்த அதே இடத்தில் சென்று அமர்ந்து கொண்டேன்...கண்களை மூடி அவன் வாசத்தை எனக்குள் சுவாசித்துக் கொண்ட நான் மெதுவாக அவன் உணர்வுகளிலிருந்து என்னை விடுவித்துக் கொண்டு விழிகளைத் திறந்தேன்...அங்கே...

யார் முகத்தில் விழித்து விடக்கூடாதென்று இத்தனை ஆண்டுகளும் ஓடி ஒளிந்தேனோ அவன் என்னெதிரே நின்று கொண்டிருந்தான்...ஆம் அவன்தான் என்னைக் கூர்மையாக நோக்கிக் கொண்டிருந்தான்...யாரை என் வாழ்நாளில் சந்தித்துவிடக் கூடாதென்று நினைத்தேனோ அவன் என் கண்களின் முன்னே எனை துளைத்துவிடுவது போல் பார்த்துக் கொண்டிருந்தான்...

எனது மூச்சு எனக்குள்ளேயே அடைத்துக் கொள்ள அங்கிருந்து உடனேயே கிளம்ப எத்தனித்த என்னை அவனின் கம்பீரம் நிறைந்த குரல் தடுத்து நிறுத்தியது...

"நில்லு மித்ரா...இன்னும் எத்தின நாளைக்கு என்கிட்டயிருந்து ஓடிட்டே இருக்கப் போற...?.."

அவனது குரல் எனது மனதை அசைத்துப் பார்க்க கால்கள் அதே இடத்திலேயே நகராமல் ஒட்டிக் கொண்டன...அவன் என்னை நெருங்கி வர வர என்னிதயத்தின் துடிப்பு எனக்கே தெளிவாக கேட்கத் தொடங்கியது...ஆனாலும் என்னால் அங்கிருந்து செல்ல முடியவில்லை...என்னருகே நெருங்கி வந்த அவன்...

"அன்னைக்கு நீ என்னை விட்டிட்டுப் போனப்போ என்னால உன்னை தடுத்து நிறுத்த முடியல மித்ரா...ஆனால் இனி நான் உன்னோட கையை விட்றதா இல்லை...
அன்னைக்கு என்னோட கேள்விகளில இருந்து நீ தப்பிச்சிட்ட...ஆனால் இன்னைக்கு நீ என்கிட்டயிருந்து தப்பிக்கவே முடியாது..."

அவனது குரலில் இருந்தது கோபமா...இல்லை வெறுப்பா...?எதுவென்றே என்னால் இனம் கண்டு கொள்ள முடியவில்லை....ஆனால் அவனது கண்களில் அன்று நான் கண்ட காதல் இன்று காணாமல் போயிருந்தது...





தொடரும்....

எழுதியவர் : அன்புடன் சகி (8-Oct-17, 6:49 am)
பார்வை : 495

மேலே