ஏழைக் கவியின் ஏக்கம்

தேனின் சுவையும் இனிக்கவில்லை
என்வானில் ஒளியும் நிலைக்கவில்லை - எனக்காக
அன்பு மட்டும்வாழ போதவில்லை
அனைத்திலும் விலையுண்டு பேதமில்லை - எனக்காக
கற்ற கல்வியில் பயனில்லை
அதனாலான கடனோ தீரவில்லை - எனக்காக
வறுமை நாளும் நீங்கவில்லை
வாழ்கை இன்பம் கூட்டவில்லை - எனக்காக
உணவுகள் சுவைத்து உண்டதில்லை
உடைகள் மகிழ்ந்து உடுத்தவில்லை - எனக்காக
இளமையின் தாகம் தீர்க்கவில்லை
இழிந்த நிலையும் போகவில்லை - எனக்காக
கொண்ட காதலும் ஜெயிக்கவில்லை
செய்யும் வேலையும் பிடிக்கவில்லை - எனக்காக
கனவுகள் எதுவும் நிறைவேறவில்லை
கண்களின் ஓடையோ வற்றவில்லை - எனக்காக
பூக்களில் வாசம் பூக்கவில்லை
புண்பட்ட நேசமோ மறக்கவில்லை - எனக்காக
ஓட்டத்தின் வேகம் குறையவில்லை
ஓடியதால் பயனும் ஏதுமில்லை - எனக்காக
வாழும் ஆசையோ நீங்கவில்லை
அதன்வழி தான்ஏனோ தெரியவில்லை - எனக்காக
நாள்கள் சரியாக போனதில்லை
நேரமும் நன்றாக இருந்ததில்லை - எனக்காக
இயற்கையின் பரிவோ கிடைக்கவுமில்லை
ஈட்டிய செல்வமோ நிலைக்கவுமில்லை - எனக்காக
பார்த்தவை எவையும் புரியவில்லை
பழகியவை எவையும் சரியுமில்லை - எனக்காக
தூங்கிய நாள்களோ அதிகமில்லை
ஏங்கிய நாள்களோ கணக்குகளில்லை - எனக்காக
தெய்வங்கள் பதிலும் கூறவில்லை
தெருக்களில் அலைந்தும் தீரவில்லை - எனக்காக
தன்னை அறியும் வழியுமில்லை
தன்னால் ஏதுவும் நிகழவில்லை - எனக்காக
விதியோ கருணை காட்டவுமில்லை
மதியோ பூட்டை திறக்கவுமில்லை - எனக்காக
இருப்பதில் ஏதும் பயனுமில்லை
போவதில் யாதொரு பயமுமில்லை - எனக்காக
உயிரோ விட்டெனை பிரியவில்லை
உடலோ நெருப்பினில் எரியவுமில்லை - எனக்காக
ஆதலால்,
ஆதலால்,
ஆதலால்,
கவிதை ஓன்று படைத்துவிட்டேன் - எனக்காக