காற்றில் கலந்த குருவி

வறியலூர் கிராமத்திலே
வசித்து வந்தது - சிறுகுருவி!
வானத்திலே வட்டமிடும்
வாசலிலே கோலமிடும்
வசந்த காலங்களில்
துள்ளி விளையாடும் - - அந்த சிறுகுருவி!
தேன் தேடி பறக்கும்
தேவதை தான் அது !
கொண்ட கனவெல்லாம் மருத்துவம்
அதன்மூலம் வாழ்வை உயர்த்துவோம்!
எனநாளும் கூறி
வானில் சிறகடிக்கும் !
கனவு காண்போம் என்ற
மகானின் நல் வழியில்
அக்னி சிறகினை ஏந்தி
வானை நோக்கி பறந்தது!
வாழ் நாள் முழுவதும்
லட்சிய கூட்டிற்குள் அடைந்து
உணவின்றி பல நாள்
உணர்வுஒன்றி பல நாள்
வானில் சிறகடித்து சீறியது!
தன் இலக்கை இனிதே அடைந்தது!
ஆனால்
..
ஓலமிடும் கழுகுகள் தனைசூழ
ஒருவழியும் இன்றி தவித்தது!
கழுகு களுடன் இணையாக
களத்தில் நின்றது அக்குருவி!
ஓட்டம் முடிந்து ஓய்வெடுக்கலாம்
என்று எண்ணிய வேளையில்
நீஓடிய தெல்லாம் வீண்
என்று விலக்கப்பட்டது - அதன்
கனவு களும் கலைக்கப்பட்டது!
சட்டமும் சரியில்லாது - அதன்
திட்டமும் விளங்காது - தன்மருத்துவ
பட்டமும் கைவராது எனகலங்கியது!
சுமை தூக்கி தனைக்காத்த
தந்தைக்கு தான் சுமை
என்று எண்ணியதோ - அக்குருவி !
நீதியும் உண்மையும்
அழகாய்
தூண்களிலே
கற்களிலே
வண்ண ஓவியங்களிலே
நாணயங்களிலே
ரூபாய் நோட்டுகளிலே
பொறிக்க மட்டும் பட்டுள்ளது
செயல்படுத்தப் படவில்லை!
வாழ தகுதியில்லை என்பதற்காக அல்ல
தகுதியிருந்தும் வாழ முடியவில்லை என்பதற்காக
தன் இன்னுயிரை நீர்த்தது - அந்த அப்பாவிகுருவி!
உழைத்தால் உயரலாம்
என்ற பழமொழியை
தீயிட்டு கொளுத்துங்கள்.
தன் வாழ்நாள் முழுதும்
உழைத்து யாரும் தொட
முடியா உயரத்தில் சென்று
காற்றினில் கலந்தது அக்குருவி
--