தமிழ் சோறு போடுமா
தமிழ் சோறு போடுமா?
தாய்மொழியே நமது அறிவு தொட்டில்.
தாய்மொழிவழி தான் பேசும் கிள்ளை.
தாய்மொழியாம் நம் தமிழ் மொழிதான்
நம் நாவில் நடமாடி
நெஞ்சில் அறம் பதித்து
நினைவில் 'மெய்' சிலிர்த்து
ஊனில் உடலில் உறவில் உயிரில்
அன்புச் செழுமையாய் நிறைந்து
வாழ்வின் எண்ணற்ற தேடல்களில்
சிந்தைத் தெளிவாய் நிற்கும்
கலங்கரை விளக்கு.
வான் நீந்தும் விண்கலங்கள்
வார்த்திடும் ஆற்றல் பெரினும்
நம் சிந்தனை ஆழத்தில்
நின்று களிப்பது நம் மொழியே.
ஊர்ஊராய் ஓடி உயிர்பிழைக்க
பன்மொழி பாண்டித்தியம் பெற்று
"என்கு டமில் வராது"என்று
'பெருமை' பேசும்
மாற்றாந்தாய் பாலருந்தி
சொந்தத்தாயை அந்நியமாய் பார்க்கும்
மானுடர் யாவரிலும்
ஓடிக் கொண்டிருக்கும் உயிர் ஊற்று தமிழல்லவோ!
தமிழ் வார்த்தைகளின் கூட்டமல்ல
நம் மெய் உணர்வுகளின் இணையம்.
பேசுவதற்கு மட்டுமான ஊர்தியல்ல.
நம் அறிவு அணுக்களின் அகரமது.
தமிழ் நம் மானச்செருக்கின் பதிவு.
நான்காயிரம் ஆண்டு தொன்ம
நாகரீக குழுமத்தின் வீரத்திருமகள்.
நம்மை கூறுபோட்டாலும்
சிந்தும் ஒவ்வொரு துளியும்
தமிழ் உரைத்து மடியும்.
தமிழர் யாவரையும் ஆழியில் ஆழ்த்தினாலும்
" அமிழ்ந்து... அமிழ்ந்து... அமிழ்ந்து..
(பலமுறை சொல்லிப் பார்க்கவும் சற்று வேகமாக)
தமிழ் வணக்கம் பாடும்.
சோழ நாடு சோறுடைத்து என்று விளம்பிய சமூகமே!
தமிழ் சோறு மட்டுமல்ல
நூறு ஆயிரம் ஆண்டுகளுக்கு
பண்ணை, பண்பை, பண்பாட்டை
பண்படுத்தலை உழவு செய்யும்.
-ஜான் பிரான்சிஸ்