சிநேகிதனே -அத்தியாயம் - 07

.....சிநேகிதனே....

அத்தியாயம் : 07

"உண்மைதான் சரண்....நீ சொன்ன மாதிரியே நான் சுயநலவாதிதான்...என்னோட கண்ணீரை எனக்குள்ளேயே மறைச்சுகிட்டு உன்னோட வாழ்க்கை சந்தோசமா இருக்கனும்னு நினைச்சன் பாரு நான் சுயநலவாதிதான்...."

"என்னோட காதலை எனக்குள்ளேயே புதைச்சுகிட்டு என்னை நீ வெறுத்தாலும் பரவால்லன்னு உன்னோட வாழ்க்கையை மட்டுமே நினைச்சு உன்னை விட்டிட்டுப் போன நான் நீ சொல்ற மாதிரியே மிகப் பெரிய சுயநலவாதிதான் சரண்..."

"உன்னோட நினைவுகளை மறக்கவும் முடியாம உன்கிட்ட என்னோட காதலைச் சொல்லவும் முடியாம இந்த நாலு வருசமான எனக்குள்ளேயே நான் செத்துக்கிட்டிருந்தேனே...என்னை விடவா பெரிய சுயநலவாதி இந்த உலகத்தில இருக்க முடியும்...??..."

"அப்புறம் இன்னொன்னும் சொன்னியே...முகமூடி அணிஞ்சு ஏமாத்திக்கிட்டிருக்கேன்னு...அதுவும் கரெக்டுதான் சரண்..."

"எங்க என்னோட காதலை உன்கிட்டச் சொல்லி அதனால உன்னோட வாழ்க்கையில இருக்கிற சந்தோசத்தை நானே குழிதோண்டிப் புதைச்சிருவேனோன்னு பயந்து என்னை நானே ஏமாத்திட்டிருக்கேனே...நான் முகமூடி அணிஞ்ச நாடகக்காரியேதான்...."

"இவ்வளவு ஏன் இத்தனை நேரமும் நீ சொன்ன எல்லாத்தையும் தாங்கிக்கிட்டு இன்னும் உன் மேல வச்ச காதல் கொஞ்சம் கூடக் குறையாம உன் முன்னாடி நின்னுகிட்டிருக்கேனே...என்னை விடவா ஒரு நடிகை இருக்க முடியும்..?இல்லையா சரண்...?.."

"இப்போ உனக்கு ரொம்ப சந்தோசமாய் இருக்குமே...நீ சொன்ன மாதிரியே எல்லாத்தையும் நான் ஒத்துக்கிட்டேன்...இப்போ உனக்கு ஹப்பி தானே சரண்...??.."

அவன் எதுவுமே பேசவில்லை...என்னிடமிருந்து அவன் கைகளைப் பிரித்து சற்று இடைவெளிவிட்டு விலகி நின்றான்...ஆனால் அவனது பார்வையில் ஏதோ வித்தியாசத்தை என்னால் உணர முடிந்தது...

"உன்னைக் காதலிச்சேன் சரண்..உன்னை மட்டுமே காதலிச்சேன்...என்னோட நிலைமைக்கு இந்தக் காதல் கல்யாணமெல்லாம் சரிபட்டு வராதின்னு தெரிஞ்சும் உன்னை நான் காதலிச்சேன்...அதுதான் நான் பண்ணின மிகப் பெரிய தப்பு..."

"யாருமே இல்லாம அநாதரவா வளர்ந்த எனக்கு நான் வளர்ந்த அநாதை இல்லம் எல்லாமே கொடுத்திச்சு...ஆனால் நான் எதிர்பார்த்த அன்பையும் காதலையும் உன்னால மட்டும்தான் கொடுக்க முடிஞ்சுது சரண்..."

"உன்னோட நான் இருந்த அந்த அஞ்சு வருசம்தான் என் வாழ்க்கையோட அழகான தருணங்கள்...அதுக்கு முன்னமும் சரி இப்போயும் சரி கண்ணீர் மட்டும்தான் என்னோட வாழ்க்கையில...."

"அன்னைக்கு உன்னோட காதலை நான் நிராகரிச்சிட்டுப் போனப்போ கூட எனக்கு இவ்வளவு வலிக்கல சரண்...ஏன்னா உன்னோட வாழ்க்கை இதனால நல்லாயிருக்கும்னு நினைச்சேன்...அந்த நினைப்பே எனக்கு ஆறுதலாய் இருந்திச்சு...."

"ஆனால் இப்போ வலிக்குது சரண்...ரொம்ப வலிக்குது...என்னை நல்லாத் தெரிஞ்சுகிட்ட நீ கூட என்னைப் புரிஞ்சுக்கலைன்னா வேற யார்டா என்னைப் புரிஞ்சுக்குவாங்க..."

"என்ன எவ்வளவு கேவலமா பேச முடியுமோ அவ்வளவு கேவலமா பேசிட்ட ல சரண்....ஏன்டா இப்படியெல்லாம் பேசின...?என்னால இப்போ கூட நம்ப முடியல இந்த வார்த்தைகளெல்லாம் உன்னோட வாயில இருந்து வந்திருக்கின்னு...."

"இதுக்கு நீ என்னை ஒரேயடியா சாகடிச்சிருக்கலாமே சரண்...ஏன்டா இப்படிப் பண்ண...??என்று அவன் சட்டையைப் பிடித்து உலுக்கியவாறே அவன் மார்பில் சாய்ந்து அழத் துவங்கினேன்...

அவன் என்னை விலக்கவும் முயற்சிக்கவில்லை...ஆறுதல்படுத்தவும் முயலவில்லை...அதே இடத்தில் அசையாமல் அப்படியே நின்றான்...அவனது உடலும் முகமும் இறுகிப் போயிருந்தது...

என்னால் எனது அழுகையை கட்டுப்படுத்திக் கொள்ள முடியவேயில்லை...இத்தனை வருடங்களாக எனக்குள் புதைந்து கிடந்த வலிகள் அனைத்தும் அழுகையாய் வெடித்துச் சிதறிக் கொண்டு வந்தது...

அழுகையை நிறுத்தி அவனிடமிருந்து விலகி நிற்குமாறு என் மூளை என்னை எச்சரித்தாலும்...மனம் அவனிடமே சரணடைந்து கொள்ள தவியாய் தவித்துக் கொண்டிருந்தது...

என்னை அவனிடமிருந்து விலக்கி நிறுத்த முடியாமல் நான் தவித்துக் கொண்டிருந்த அந்த நேரத்தில் அவனுக்கு வந்த தொலைபேசி அழைப்பு என்னை அதிர்ச்சியோடு அவனிடமிருந்து விலகிடச் செய்தது...

அந்த தொலைபேசி அழைப்பு வந்த போது கூட அவன் என்னை விலக்கவில்லை...அப்படியே நின்றவாறே அழைப்பினை எடுத்து பேச ஆரம்பித்தான்...

"ஹலோ...சொல்லுங்கம்மா..."

"எங்கடா இருக்க....சீக்கிரமா வா....ஆரு குட்டி நீ ஊட்டி விட்டாத்தான் சாப்பிடுவாள்ன்னு உனக்குத் தெரியும்ல...தெரிஞ்சும் கரெக்ட் டைம்க்கு வராம அப்படியென்னடா வேலை...."

"சொரி மா....இதோ இன்னும் பத்து நிமிசத்தில வந்திடுறன்...நீங்க போனை ஸ்பீக்கர்ல போட்டு ஆரு குட்டிக்கிட்ட கொடுங்க..."

அந்த ஆருக்குட்டி யாரென்று எனக்குத் தெரியவில்லை...மறுபுறத்தில் என்ன பேசினார்கள் என்பதையும் நான் அறியவில்லை...ஆனால் அவன் கதைத்து முடிக்கும் வரை அவன் முகத்தில் இருந்த பிரகாசம் மட்டும் மறையவில்லை....

"அப்பாபாபாபாபாபாபாபாபாபா....."

"ஆருக் குட்டி...அப்பா இன்னைக்கு வர கொஞ்சம் லேட்டாகும்டா..என் பொண்ணு ரொம்ப குட் கேர்ள் ல...பாட்டி தாறதை அடம்பிடிக்காம சாப்பிடுவாளாம்..."

அவன் போனை எடுத்துக் காதில் வைத்த போதே அவனிடமிருந்து ஓரளவு விலகி என் அழுகையைக் கட்டுப்படுத்த முயன்று கொண்டிருந்த நான்..அப்பா என்ற வார்த்தையைக் கேட்டதும் அவனிடமிருந்து ஒரேயடியாக விலகி நின்று கொண்டேன்...என் கண்ணீர் மொத்தமும் எனக்குள்ளேயே உறைந்து கொண்டது...

"சரிபா...நான் குட் கேர்ளா சாப்பிட்டா...நீங்க இன்னைக்கு இரவு எனக்கு கதை சொல்லுவீங்களா...??.."

"என்னோட ஆருக்குட்டிக்கு சொல்லாமலா...குட் கேர்ளா சாப்பிட்டிட்டுத் தூங்கினா...அப்பா இன்னைக்கு நைட் ஆருக்குட்டிக்கு நிறைய கதை சொல்லுவேனாம்...ஓகேயா..??..."

"ஓகேபா..."

"சரிடா பாட்டிக்கிட்ட போனை கொடுங்க..."

"அம்மா...நீங்க ஆருக் குட்டிக்கு சாப்படை குடுத்து கொஞ்ச நேரத்தில தூங்க வையுங்க...நான் கொஞ்ச நேரத்தில வந்திடுறேன்..."

"சரிபா..."

கதைத்து முடித்தவனின் முகம் மீண்டும் பழையது போலவே இறுகிக் கொண்டது...வார்த்தைகள் வெளிவர முடியாமல் சிக்கிக் கொள்ள...பாதி வார்த்தைகளை எனக்குள்ளேயே முழுங்கிக் கொண்டு ஒரு வழியாக அவனிடம் அதைக் கேட்டுவிட்டேன்...

"ஆரு....ஆருக்குட்டி யாரு....??.."

நான் கேட்டதும் நன்றாகத் திரும்பி என்னை நோக்கியவன்,

"கண்டிப்பா தெரிஞ்சுக்கனுமா...??.."

"ம்ம்.."

"ஆரு....ஆதிரா....என்னோட பொண்ணு...."


தொடரும்....

எழுதியவர் : அன்புடன் சகி (15-Oct-17, 9:10 am)
பார்வை : 537

மேலே