கண்ட நாள் முதலாய்-பகுதி-26

....கண்ட நாள் முதலாய்....
பகுதி : 26
துளசி நின்ற இடத்திலேயே நின்று கொண்டு தனக்குத்தானே சிரித்துக் கொண்டிருப்பதை கண்ட அரவிந்தனின் அம்மா..
"என்னாச்சு மா...தனிய சிரிச்சிட்டு இருக்க..எங்களுக்கும் அது என்னென்னு சொன்னா நாங்களும் சிரிப்போமே...??.."
அவர் அப்படிக் கேட்டதும் எதிர்காலத்தில் இருந்து நிகழ்காலத்திற்கு வந்த துளசி,
"போங்க அத்தை..."என்றவாறே சமையலறைக்குள் புகுந்து கொண்டாள்...
வெட்கப்பட்டுக் கொண்டே ஓடிய துளசியைப் பார்த்து பார்வதியும் சங்கரனும் கண்களாலேயே சைகை காட்டி ஒருவருக்கொருவர் சிரித்துக் கொண்டார்கள்...
அவர்களும் இந்த வயதையெல்லாம் கடந்து வந்தவர்கள்தானே...அவர்களுக்கா இதெல்லாம் புரியாது...?
சமையலறைக்குள் நுழைந்த துளசிக்கோ அவனோடு எப்படித் தன்னை இணைத்துப் பார்க்க முடிந்தது...நிகழ்காலத்தை மறந்து எப்படி அவனோடு எதிர்காலத்திற்கு தாவிக்கொண்டேன்...ஒரு வேளை ஒரு நாளிலேயே என் மனதை வென்றுவிட்டானா அவன்...??
"இல்லை...இல்லை....அப்படியெல்லாம் ஒன்றும் இருக்காது"என தனக்குத்தானே சமாதானங்கள் சொல்லி சமாளித்துக் கொண்டவள்,அந்த நினைவுகளை புறந்தள்ளி தேநீர் போடுவதற்காகத் தயாரானாள்..அப்போது...
"இங்க என்ன பண்ணிட்டிருக்க நீ....??..."
"இல்லை அத்தை...டீ போடலாம்னு...."என்று பாதி வார்த்தைகளை தனக்குள்ளேயே முழுங்கிக் கொண்டாள் துளசி...
"ஹா...ஹா....என்ன பயந்திட்டியா...??
இங்க நீ இருக்கப்போற ஒரு கிழமைக்கும் நான் தான் எல்லா வேலையும் பார்ப்பேனாக்கும்..நீ இந்தப் பக்கமே வரக் கூடாது சொல்லிட்டேன்..."
அவர் சொன்ன முன்பாதி புரியாமல் துளசி குழம்பிக் கொண்டிருக்க,பார்வதி தேநீரைத் தயாரித்து முடித்திருந்தார்...
"இந்தா உன் அத்தையோட டீ...குடிச்சிட்டு எப்படி இருக்கின்னு சொல்லு...??.."
அவர் தந்ததும் அதை மறுக்காமல் வாங்கிக் குடித்தவள்..அதன் சுவையில் தன்னை மறந்து தான் போனாள்...
"உண்மையிலேயே ரொம்ப சூப்பரா இருக்கு அத்தை...எங்க அம்மாவோட டீயைக் குடிச்சா எப்படி இருக்குமோ...அப்படியே இருக்கு..."
"ஆனால் அத்தை...இனி நானே எல்லாத்தையும் பார்த்துக்குறேன்...நீங்க நல்லா ரெஸ்ட் எடுத்தாப் போதும்..."
"இன்னும் ஒரு வருசத்துக்கு நீதானே எல்லாம் பண்ணப் போற...அதுக்கப்புறம் நீ இங்க வந்தப்புறமும் கூட எல்லா வேலையையும் சேர்ந்தே பண்ணிக்கலாம்....ஆனால் இந்த ஒரு கிழமைக்கும் இங்க எல்லா வேலையும் நான்தான்....புரிஞ்சுதா...??..."
"எல்லாம் புரியுது அத்தை....ஆனால் இந்த ஒரு வருசக் கணக்குத்தான் என்னென்னே புரிய மாட்டேன்குது....?..."
"இந்தக் கணக்குக்கும் நமக்கும் எட்டாத தூரம்....உன் புருசன்தான் அதில எல்லாம் கெட்டிக்காரன்....அவனையே கேட்டுத் தெரிஞ்சுக்கோ....."என்று கூறிவிட்டு அவரும் அங்கிருந்து சிரிப்போடே கிளம்பிவிட்டார்....
ஆனால் அந்தக் கெட்டிக்காரனும் தந்தையின் முன்னே புரியாத குழப்பத்தோடுதான் அமர்ந்திருந்தான்...
"என்னப்பா சொல்லுறீங்க...இப்போ நானும் துளசியும் எதுக்காக ஒரு வருசத்துக்கு தனியா வீடெடுத்து தங்கனும்...நாம எல்லாரும் ஒன்னாவே இருக்கலாமே...??..."
"டேய்..உன்னை ஒரு வருசத்துக்குத்தானே டா தனியா இருக்கச் சொல்லுறேன்...அதுக்கப்புறம் நீங்க இரண்டு பேருமே இங்க தானே வந்தாகனும்..."
"அந்த ஒரு வருசத்துக்கு கூட இப்போ என்ன அவசியம்பா...?
"அவசியம் இருக்குடா...நீயும் துளசியும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிறதுக்கு கொஞ்ச காலம் தேவைடா...உன்னை அவ முழுசா புரிஞ்சுகிட்டாத்தான் அவளால நம்ம குடும்பத்தையும் முழுமையா ஏத்துக்க முடியும்..."
"ஏன்பா அதெல்லாம் இங்க இருந்தாலும் நடக்குமே...?.."
"டேய்,இப்போ நான் சொல்றதைக் கேட்கப் போறியா இல்லையா....?அப்பா என்ன செஞ்சாலும் உன் நல்லதுக்காகத்தான் இருக்கும்கிற நம்பிக்கை உனக்கு இருக்கா இல்லையா....??
"அது நிறையவே இருக்கு பா...ஆனால் உங்க எல்லாரையும் விட்டிட்டு எப்படி...?.."
"ஏன்டா துளசி வரலையா அவ குடும்பத்தை விட்டிட்டு....என்னமோ கண்ணுக்கெட்டாத தூரத்துக்கு உன்னை அனுப்பி வைக்கிற மாதிரி பேசிட்டு இருக்க....??.."
"இங்க இருந்து ஒரு மிதி மிதிச்சா உன் வீடு வந்திடப் போகுது...அப்புறம் என்ன உனக்குப் பிரச்சினை..?....போய் ரெடியாகிட்டு வா....வீட்டை ஒரு தடவை பார்த்திட்டு வந்திடலாம்..."
இதுரைக்கும் அரவிந்தன் அவனது குடும்பத்தைப் பிரிந்து ஓர் நாள் கூட இருந்ததில்லை....வெளிநாட்டில் கிடைத்த வேலைகளைக் கூட குடும்பத்திற்காய் நிராகரித்தவன்....
இப்போது ஒரு வருடம் எப்படி அவர்களை பிரிந்து இருப்பான்..??ஆனாலும் மறுபக்கம் அவனது அப்பா சொன்ன காரணமும் அவனுக்கு ஏற்புடையதாகவே இருந்தது...
அவர் என்ன காரணத்திற்காக அப்படிச் சொல்லியிருந்தாலும் இப்போது துளசிக்கும் தனக்கும் தனிமையிருந்தால் நல்லதென்றே அவனுக்குப்பட்டது...அதுவும் ஒரு வருடத்திற்கென்றால் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள இதை விடச் சிறந்த சந்தர்ப்பம் அமையாதென்பதை அவன் மனம் உணர்த்தினாலும்,28 வருடங்களாய் ஒன்றாகவே இருந்துவிட்டு இப்போது ஒரு வருடத்திற்கு பிரிந்து செல்வதென்பதைக் கூட அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை...
ஆனாலும் அவளும் இத்தனை வருடங்களாக இருந்துவிட்டு இப்போது அவனோடு வரவில்லையா...?அவள் இனி எப்போதுமே அவனோடுதான் இருக்கப் போகிறாள்...ஆனால் அவனுக்கு அப்படியில்லையே ஒரு வருடத்தின் பின் மீண்டும் அவன் குடும்பத்தோடு இணைந்துவிடப் போகிறான்...
தாங்கள் இருவரும் வாழ்நாள் முழுதும் சந்தோசமாக இணைந்து இருப்பதற்காகத்தானே இதெல்லாம் என்ற உண்மை அவனுக்கு உறுத்த தந்தையிடம் தன் சம்மதத்தை தெரிவித்தான்....
"ம்ம்....சரி பா.....நீங்க சொன்ன மாதிரியே நாங்க ஒரு வருசத்துக்கு தனியாவே இருக்கிறோம்....நான் துளசிகிட்டயும் இதைப்பத்தி சொல்லிட்டு ரெடியாகிட்டு வாறேன்..."
"ரொம்ப சந்தோசம் பா...நீ போய் ரெடியாகு..."
மேலே படியேறிச் செல்பவனையே பார்த்துக் கொண்டு வந்த பார்வதி சங்கரனின் எதிரில் சென்றமர்ந்தார்....
"அவனைப் பார்க்கவே பாவமா இருக்கு...இப்போ எதுக்கு இதெல்லாம்...??.."
"எனக்கு மட்டும் ஆசையா...அவங்களை தனிய அனுப்பனும்னு...கல்யாணம் முடிஞ்சதுமே யோகேஷ் என் கூட கதைச்சான்டி..."
"என்னதான் துளசி கல்யாணத்திற்கு சம்மதம்னு சொன்னாலும் தனக்காகத்தான் துளசி இந்தக் கல்யாணத்திற்கு ஒத்துக்கிட்டாளோ என்ற சந்தேகம் அவனுக்கு இல்லாமலும் இல்லை...துளசியோட முகம் வேற கல்யாணப் பேச்சை ஆரம்பிச்சதில இருந்து சரியே இல்லைன்னு ரொம்பக் கவலைப்பட்டான்...."
"எனக்கு கூட அவன் அப்படிச் சொன்னதும் துளசி முகத்தில கல்யாண சந்தோசம் இல்லையோன்னு தோனிச்சு...அதான் இப்படியொரு ஏற்பாட்டைப் பண்ணினேன்..."
"சரிங்க...நீங்க சொல்ற மாதிரியே இருந்தாலும்...நம்ம கண் முன்னாடியே இருந்தாங்கன்னா நாம பார்த்துக்குவோம்...இப்போ தனியா போயிட்டாங்கன்னா சேர்ந்திருக்கிறாங்களா...இல்லை பிரிஞ்சிருக்கிறாங்களான்னு நமக்கு எப்படித் தெரியும்....?.."
"நம்ம முன்னாடியே இருந்தாங்கன்னா நமக்காக சந்தோசமா இருக்கிற மாதிரி காட்டிக்குவாங்க.....இதே தனியன்னா அவங்க அவங்களாவே இருப்பாங்க....அடிச்சாலும் பிடிச்சாலும் அவங்க அவங்க பிரச்சினையை அவங்கதான் பார்த்துக்கனும்..."
"நாம என்ன ஒரேயடியாவா விட்டிடப் போறம்....முதல்ல அவங்களுக்குள்ள நல்ல புரிதலும் காதலும் வரட்டும்...அதுக்கப்புறம் அவங்களை இங்க கூப்பிட்டுக்கலாம்...அவங்க சந்தோசம்தானே நம்ம சந்தோசம்...."
"ஆமாங்க நீங்க சொல்றதும் சரிதான்....அவங்க சந்தோசத்தை விட வேற என்ன எங்களுக்கு வேணும்....??..."
"இதான் விசயம் என்கிறதை அவங்ககிட்ட காட்டிக்காத....யோகேஷ்கிட்டயும் இன்னும் நான் இதைப்பத்தி கதைக்கல...வீட்டையும் பார்த்ததுக்கப்புறமா அவன்கிட்ட சொல்லலாம்னு இருக்கேன்...."
"ம்ம்....சரிங்க.."
அரவிந்தன் அறைக்குள் நுழைந்ததும் அவன் பின்னாலேயே வந்த துளசி அவனது முகத்தில் படர்ந்திருந்த குழப்ப ரேகைகளைக் கண்டு தயங்கி நின்றாள்...
தொடரும்...