சிநேகிதனே -அத்தியாயம் - 06

....சிநேகிதனே....

அத்தியாயம் : 06

"என்ன தெரியும் உனக்கு..??.."இந்தக் கேள்வியைக் கேட்கும் போதே என் இருதயம் வேகமாகத் துடிக்கத் தொடங்கியது...

"எனக்குத் தெரியும் மித்ரா...எல்லாமே தெரியும்...ஆனால் என்ன...எல்லாத்தையும் கொஞ்சம் தாமதமாத்தான் தெரிஞ்சுகிட்டேன்..."

"லேட்டானாலும் உன்னைப் பத்தி...உன்னோட உண்மையான முகம் எப்படிப்பட்டது என்ற எல்லாத்தையும் ரொம்பத் தெளிவாப் புரிஞ்சுகிட்டேன்..."

ஆரம்பத்தில் அவன் சொன்ன போது அவனுக்கு அனைத்தும் தெரிந்துவிட்டதே என அதிர்ந்த உள்ளம் அவனின் அடுத்த பேச்சுக்களில் என்னை அவன் தவறாக ஏதோ சொல்லப் போகிறான் என்பதை மட்டும் நன்றாக உணர்ந்து கொண்டது...

அதனால் அவனின் அடுத்த தாக்குதலுக்காய் மனதை திடமாக்கிக் கொண்டு காத்திருக்கத் தொடங்கினேன்...ஆனால் அவன் என்னை வார்த்தைகளாலேயே உயிருள்ள பிணமாய் மாற்றப்போகிறான் என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை...

"பணம்..." இது மட்டும்தானே மித்ரா உன்னோட குறிக்கோளா இருந்திருக்கு...அந்த பணத்து மேல இருந்த அளவுக்கதிகமான காதலினாலதானே மேடம் என்னோட காதலை குப்பை மாதிரி தூக்கிப் போட்டிட்டு போனீங்க...

"உன்னைப் பொறுத்தவரைக்கும்.....உனக்கு எது தேவை எது தேவையில்லை என்றதில்ல நீ ரொம்ப ரொம்ப தெளிவாய் இருந்திருக்க மித்ரா..."

"ஆனால் நான் தான் பைத்தியக்காரன் மாதிரி....எனக்கு இருக்கிற மாதிரிதான் உனக்கும் தோனியிருக்கும்னு என்னை நானே ஏமாத்திக்கிட்டேன்...."

"நீ என் மேல உண்மையான நட்போடையும் பாசத்தோடையும்தான் பழகினன்னு நினைச்சேன் மித்ரா..நீ என்னை விட்டிட்டுப் போன அந்த நிமிசம் வரைக்கும்..."

"என்னோட காதலை நீ ஏத்துக்கிறதும்...நிராகரிக்கிறதும் உன்னோட மனசு சம்பந்தப்பட்ட விசயம்...என்னோட காதலை நான் உன்கிட்ட சொல்லுறதுக்கு எனக்கு எவ்வளவு உரிமையிருக்கோ அதை நிராகரிக்கவும் உனக்கு உரிமையிருக்கு..."

"ஆனால் நீ பணத்துக்காகவும் உன்னோட வசதிக்காகவும்
நம்ம அஞ்சு வருட நட்புக்கு கூட மதிப்பு கொடுக்காம நீ சுயநலமா போனதைத்தான் என்னால இப்போவரைக்கும் ஏத்துக்கவே முடியலைடி...."

"அன்னைக்கு அந்த அழகான தருணத்தில் நீ என்னோட காதலை ஏத்துப்பேன்னு நினைச்சு உனக்காக காத்திட்டிருந்த நொடிகளை இன்னைக்கு நினைச்சாலும் எனக்கே என் மேல கோபம் கோபமாய் வருது..."

"உனக்கு என்னை விட,எல்லாத்தையும் விடவும் பணம்தான் ரொம்ப முக்கியமா இருந்திருக்கு மித்ரா....ஆனால் அதை நான் புரிஞ்சுக்கிறதுக்குத் தான் உன் கிட்டயிருந்து நான் இவ்வளவு பெரிய பாடத்தை படிக்க வேண்டியதாப் போச்சு...."

"உனக்கு நல்லாவே தெரியும் மித்ரா,நீ என்னோட வாழ்க்கையில எவ்வளவு முக்கியமானவன்னு....எல்லாம் தெரிஞ்சும் உன்னால எப்படி இப்படியொரு சுயநலமான முடிவை உன்னால எடுக்க முடிஞ்சுது...."

அவன் அவன் போக்கில் பேசிக்கொண்டேயிருந்தான்...என்னால் அவனை இடைமறித்து எதுவுமே பேச முடியவில்லை...எப்போது அவன் பணத்திற்காகத் தன்னை நிராகரித்துச் சென்றதாகச் சொன்னானோ...அந்த நிமிடமே நான் இறந்துவிட்டேன்...

அவன் என்னை வார்த்தைகளால் உயிரோடு கொன்று புதைத்துக் கொண்டிருப்பதைக் கூட அறியாமல் பேசிக் கொண்டேயிருந்தான்...என்னால் அந்த இடத்தில் நிற்க கூட முடியவில்லை...கால்கள் என் கட்டுப்பாட்டை இழந்து ரொம்ப நேரம் ஆகியிருந்தது...

தலை லேசாகச் சுற்றுவது போல் இருக்கவே அருகிலிருந்த மரத்தைப் பிடித்துக்கொண்டு அதோடே சாய்ந்துவிட்டேன்....அவனுக்கு அப்போதும் கூட என் மேல் இரக்கம் வரவில்லை போலும்...

அவன்தான் எனக்குப் பல பட்டங்களை சூட்டிவிட்டானே...?இப்போதும் என் நிலைமையை நாடகம் என்றே எண்ணியிருக்கக் கூடும்....

என் கரங்களை இறுக்கமாகப் பற்றி தன் பக்கமாய் இழுத்துக் கொண்டவன்,

"இப்போ இங்க இன்னொரு நாடகத்துக்கு அவசியம் இல்லை மித்ரா....அதனால இப்போயாச்சும் நீ உண்மையை பேசுறது உனக்கு ரொம்ப நல்லது....."

"நான் சொன்ன எல்லாத்தையும் உண்மைன்னு ஒத்துக்கோ மித்ரா....நீ போட்டிட்டிருக்கிற நல்லவ என்கிற முகமூடியைக் கிழிச்சு எறியிற வரைக்கும் நான் உன்னை விடப்போறதில்லை ...."

அவன் சொன்ன அனைத்தையும் கேட்டு என் உதடுகளில் புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது....ஆனால் அதில் வெறுமை மட்டுமே மிச்சமாகியிருந்தது....

இனியும் நான் அமைதியாகவே இருந்தால் எங்கே அவனை நான் வெறுத்துவிடுவேனோ என்ற பயம் என்னை முதன் முறையாகத் தொற்றிக் கொண்டது...

இதற்கு மேலும் நான் அமைதியாக இருக்க விரும்பவில்லை...அவனது ஒவ்வொரு கேள்விகளுக்கும் நான் பதில் சொல்லத் தொடங்கினேன்..


தொடரும்....

எழுதியவர் : அன்புடன் சகி (14-Oct-17, 9:42 am)
பார்வை : 382

மேலே