அவளே அம்மா ---முஹம்மத் ஸர்பான்

கருவறை வீட்டுக்குள்
வாடகையின்றி
அணுவாய் முளைத்தேன்
நரம்பின் கூட்டுக்குள்
மூச்சுப் பூக்களை
பசிக்காய் வெட்டினேன்
இதயத்தின் ஆழியில்
குருதி மீன்களை
பிடித்து நகைத்தேன்
உலகத்தின் காற்று
நாசியின் வழியில்
புனிதமாய் புரிந்தது
திங்கள் தோறும்
நிலவைப் போல
தொப்புள் வளரும்
ஒளியின் ஆளுகை
இரவைப் போல
என்றும் செல்வம்
அவளது இன்பம்
சதையின் மனதை
துடிக்க வைக்கும்
அவளது ஆசைகள்
பாடல் போல
காதில் கேட்கும்
அவளது கனவுகள்
மூங்கில் போல
அழுது புலம்பும்
அவளது தேகத்தில்
வலிகள் நாளும்
நதிகளாய் பாயும்
நாட்கள் நெருங்க
சோர்வில் அவள்
வாடிப் போனாள்
வயிறின் பாகம்
பிளந்து கால்கள்
உலகை உதைக்க,
சத்தம் ஓய்ந்து
மூச்சை மறந்து
அவளும் உறங்க,
மார்பில் ஊறும்
ஜீவன் உமிழ்ந்து
நாளும் ஜனனம்
இன்பம் துன்பம்
சேரும் போது
இன்பம் மட்டும்
எனக்கானவை
துன்பம் யாவும்
அவளுக்கானவை
விழியின் தேடல்
விழிநீர் கவிதை
யாவும் அவளே!
அகிலம் ஆளும்
வேதம் அவளே!
உயிரை ஈன்ற
புதிரும் அவளே!
அவளே அம்மா!

உலகிலுள்ள அனைத்து அம்மாக்களுக்கும் சமர்ப்பணம்

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (15-Oct-17, 3:33 pm)
பார்வை : 509

மேலே