தீபங்கள் --- முஹம்மத் ஸர்பான்
தீபாவளி சிறுகதை
'யாத்ரா.., யாத்ரா நீ எங்கே இருக்காய்? என்னே விட்டுட்டு எங்கேயும் போய்ட்டியா’? பாசத்தின் பணிவான குரல்கள் அவளது செவிப்பறையினுள் பூங்காற்றாய் நுழைந்தது.
'யாத்வி நான் உன்னே விட்டு எப்பயாவது விலகிப் போயிருக்கனா’? மரணம் வரை உன் நிழலாக நானும் பயணம் செய்து கொண்டிருப்பேன். அவளது மென்மையான வார்த்தைகள் யாத்வியின் இதயத்தில் சாசனமாய் பதிந்தது.
'யாத்ரா நிழல் என்றால் என்ன?' புதிரான வாழ்க்கையில் புரியாத வினாக்களை புதிதாக போடுகிறாள் யாத்வி.
சிறு நிமிடங்கள் மெளனத்தில் சிறைப்பட்ட அவளது இதழ்களை எங்கிருந்தோ வந்த ஞானம் விடுதலை செய்தது. "உள்ளங்கை அளவான இதயத்தில் கடலளவு நினைவுகள்; ஆறடி நீளமான மனிதனின் வாழ்க்கை கர்ப்பமெனும் இருட்டறையில் தொடங்கி கல்லறையெனும் இருட்டறையில் முடிகின்றது என்பதை நிரூபிக்கும் இறைவனின் அத்தாட்சி; எத்தனை ஒளிமயமான விளக்குகளின் நடுவிலும் இந்த நிழல்கள் பிரகாசிப்பதில்லை; அதைப் போல, நானும் உன்னை விட்டு வாழ்க்கையின் எச்சந்தர்ப்பத்திலும் எந்நிலையிலும் பிரிய மாட்டேன்" விடைகளின் முற்றுப்புள்ளியில் யாத்வியின் கண்களில் கண்ணீர் அருவிகளாயின. தாங்கிக் கொள்ள முடியாத யாத்ராவின் நெஞ்சம் இரு கைகளால் அவளை மார்போடு கட்டியணைத்தன. சில நிமிடங்கள் தூய்மையான அன்பின் வசந்தம் இருவரின் உணர்வுகளையும் கட்டிப் போட்டது.
'யாத்ரா, எல்லோரும் வானம் அழகா இருக்குமென்று சொல்வாங்க?
வானவில் அழகா இருக்குமென்று சொல்வாங்க? ஆனா அவைகளில் எதனையும் என்னுடைய மக்கு மண்டையால் புரிந்து கொள்ள முடியவில்லை நீயே! எனக்கு புரிகிறே மாதிரி சொல்லேன்'?
"யாத்வி வானம் என்பது ஓவியம் வரைய பயன்படுத்தப்படும் காகிதம் போன்றது; உன்னுடைய இதயத்தில் உற்பத்தியாகும் சுவாசக்காற்றை உன்னிதழ்கள் தத்தெடுத்து பிரசவிக்கின்ற நுரை முட்டைகள் போல ஆங்காங்கே மேகங்கள்; அந்த மேகங்கள் நம்மளைப் போல ஓடியாடி விளையாடி இரவையும் பகலையும் உலகிற்கு தருகிறது; இந்த உயிரோட்டமான ஓவியத்திற்கு மழையெனும் ஈர மனசு படைத்த ஆசிரியர் போட்ட ஏழு நிற பேனாக்களின் மதிப்பெண்ணே வானவில்" குட்டிக் குட்டி நட்சத்திரங்களைப் போல யாத்ராவின் உருவகங்கள் யாத்வியின் மனக்கண்ணில் பிரகாசமானது. மீண்டும் அடுத்த கேள்வியை அவள் இதழ்கள் பட்டென்று கேட்டது.
'யாத்ரா நீ வானத்தை பற்றி இவ்வளவு அழகா என்கிட்டே சொல்லும் போது இரவு பகல் என்று சொன்னாயே அப்படி என்றால் என்ன'?
"யாத்வி நீ பிறந்ததிலிருந்து இந்த நொடி வரை பார்த்துக் கொண்டிருப்பது பகல். அங்கே சாதி மதச் சண்டைகளை நீ பார்ப்பதற்கு வாய்ப்பில்லை; மனிதனை மனிதன் கொன்று பணம் சம்பாரிக்கும் காட்சியில்லை; கற்பழிப்பு எனும் ஆயுதத்தால் பெண்களை தின்று ஏப்பமிடும் பாவிகள் அங்கில்லை; ஆனால், நானும் என்னைப் போன்றவர்களும் எப்போதும் இரவைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம்; உன்னுலகம் அழகானது" இவளது வார்த்தைகள் அவளின் இதழ்களில் புன்சிரிப்பை பிரசவித்தது.
'யாத்வி நீ சிரிக்கும் போது ரொம்ம அழகா இருக்கே' புல்லாங்குழல் இசை போல் அவளது செவிப்பறைகள் குளிர்ந்தது.
"பொய் சொல்லாதே யாத்ரா நான் அழகா இருந்தா என் அம்மாவும் அப்பாவும் ஏன் இந்த ஆச்சிரமத்தில் அனாதையாய் விட்டுட்டு போனாங்க; நான் அசிங்கமா இருப்பதால் தான் பிடிக்காமே என்னே இங்கே வீசிட்டு போனாங்க போல" புனிதமான தாய்மையும் இன்று இவளால் குற்றவாளிக் கூண்டில் ஏறுகிறது. பொம்மைகள் போல் மனிதனால் உருவாக்கப்பட்ட சடப்பொருளாக இருந்திருந்தால் கூட யாரோ ஒருவன் பரந்த உலகில் தற்காலிக விலாசமாவது கொடுத்திருப்பான். என்ற ஏக்கம் இருவரின் நிராயுதபாணியான உள்ளத்தில் போரை நடாத்திக் கொண்டயிருந்தது. பல நாழிகைகள் காற்றோடு கரைந்தன; இவர்களோடு விளையாட இஷ்டப்பட்ட நிலவும் இன்று கஷ்டப்பட்டு உதயமானது; இரு சோடிக் கண்ணீரே வேதமானது; நான்கு இமைகளே வசனமானது.
"யாத்வி நம்ம இருவரும் இப்படி அழுதுட்டு இருப்பதாலே நம்ம விதி மாறப்போவதில்லை; பூக்கள் எல்லாம் உலகில் மிகவும் அழகானவை; எம்மைப் போல் மென்மையானவை; காற்றோடும், புயலோடும், வண்டோடும் நித்தம் போராடுகிறது; அப்போது இந்தவுலகம் அவற்றை ஆச்சர்யமாய்ப் பார்க்கும்; அந்த அதிசய மலர்களும் உதிர்ந்து போன இலைகளின் மேல் மூச்சிழந்து விழும் போது ரசித்த கூட்டம் தான் காலால் மிறித்துப் போகிறது; நம் வாழ்க்கை நம் கையில் நாமே அதை வெறுத்து ஒதுக்கினால் வாழும் வரை சடலமாகத்தான் வாழ வேண்டும்; நாம் இருவரும் பட்டாம் பூச்சிகள் ஒவ்வொரு நாளும் புதுமையை தேடிப்போகிறோம்" மெளனத்தில் ஆழ்ந்திருந்த யாத்வியின் ஞானமும் யாத்ராவின் வார்த்தைகளை ஒப்புக் கொண்டது.
"யாத்ரா, உண்மையில் நான் பாக்கியம் பெற்றவள் தான் உன்னைப் போன்ற ஒரு தோழியை இறைவன் என் வாழ்வில் பரிசாக கொடுத்திருக்கிறான். ஒரு பக்கத்தை அடைத்த கடவுள் மறுபக்கத்தால் உன்னைத்தந்து என் வாழ்க்கையை ஆசிர்வதித்துள்ளான்"
'யாத்வி ரொம்ம பெரிய மனுஷியாகிட்டீங்க போல இப்படியெல்லாம் பேசுறீங்க'
இலேசான புன்னகையுடன் 'யாத்ரா அம்மா, அப்பா என்ற தவங்கள் எம் வாழ்க்கையில் கிடைத்ததில்லை. ஆனாலும் அவர்களை பற்றி உன்னிடம் கேட்க தோன்றுகிறது. தப்பாக நினைக்கா விட்டால் அம்மா என்றால் எப்படி இருப்பாங்க அதைப் போல அப்பா என்றா எப்படி இருப்பாங்க'?
கண்ணீர் கலந்த புன்னகையுடன் வார்த்தைகள் யாத்ராவின் தொண்டைக்குள் விக்கின. யாத்வியின் கண்களை பார்த்துக் கொண்டிருந்த யாத்ராவின் கண்கள் விடை சொல்ல வானத்தில் பறக்கும் பறவைகளின் கூட்டங்களை பார்த்தவளாக இதுவரை அவள் கண்ட கனவுகளை நினைவுகளாகச் சொல்ல ஆரம்பித்தாள்.
"அம்மா உயிர்களின் உறைவிடம்; சுவாசக் காற்றைப் போல அவளது அன்பை பார்க்க முடியாது உணர முடியும்; நிலவைக் காட்டி தூங்க வைப்பாள்; மார்பின் திரவம் ஊட்டி பசியாற்றுவாள்; இரவும் பகலும் கண்கள் மூடும் குழந்தையை கண்கள் மூடாமல் பாதுகாப்பாள்; பல கோடி முத்தம் தருவாள்; தவழ்கையில் நிலமாவாள்; ஜடை பின்னி விடுவாள்; கண்ணீர் வந்தால் துடித்துப் போவாள்; கண்களைக் கூட கிள்ளித்தருவாள்; சிரிக்கும் போதும் அழுவாள்; அழுகின்ற போது துடிப்பாள்; அம்மா அவளின்றி மண்ணில் சிறுயணுவும் இல்லை; நாமும் இல்லை
பார்வைகளை மாற்றாதவளாய் அப்புறம் அப்பா என்றால் என்னவென்று கேட்டாய். " அப்பா மார்போடு தூக்கி அணைப்பார்; இரவும் பகலும் முத்தம் தருவார்; அழகான ஆடைகள் வாங்கி வருவார்; பொம்மைகள் வாங்கி தருவார்; குளிப்பாட்டி விடுவார்; மார்பின் மேலே சாய வைத்து கதை சொல்லி தாலாட்டி தூங்க வைப்பார்; குழந்தையின் மரணம் வரை அவளுக்காய் தன்னை மாற்றிக்கொள்ளும் ஒரு ஜீவன் உலகில் அப்பா தான்" உரையாடல் முடிந்த பின் அவளது கண்கள் யாத்வியை திரும்பிப் பார்த்தன. கண்ணீர் சிந்தி சோர்ந்து போயிருந்தாள். அவளது கன்னத்தை தொட்டவளாய் 'என்னமா, இப்படி தெரிஞ்சிருந்தா நீ கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்லி இருக்க மாட்டானே!"
"யாத்ரா நீ சொன்னதைக் கேட்டு நான் அழவில்லை; என்னம்மா என்னருகில் இதுவரை காலமாய் இருந்த போதிலும் அவளை நான் தோழி என்று சொன்னதை நினைத்து நான் அழுகிறேன் என்றாள். யாத்வியின் வார்த்தைகளால் யாத்ரா துடிதுடித்துப் போனாள். ஏதோ இனம் புரியாத உணர்வு மனதை தீண்ட அவளது கன்னத்தில் முத்தங்கள் பதித்தாள். இந்த நேசம் இன்னும் நீள வேண்டுமென்று எண்ணினாள். ஆனாலும் ஒரு யதார்த்தம் மனதை தீண்டியது. யாத்ரா பிறக்கும் போதே இறைவன் இவளது உள்ளத்தில் குளறுபடிகளை உண்டு பண்ணி விட்டான். பத்து வயது வரை தான் இவள் உயிர் வாழ்வாள் என்று வைத்தியர்கள் சொன்ன ஞாபகம். ஆனாலும் யாத்வியின் இதழிலிருந்து இந்த வார்த்தைகளைக் கேட்கத்தான் பன்னிரண்டு வயது வரை தன்னை வாழ வைத்துள்ளான் என்று யாத்ரா மனதில் நினைத்தவளாய் இறைவனுக்கு கண்ணீரால் நன்றி சொல்லிக் கொண்டாள். நினைவுகளின் கடந்த காலம் நிகழ்காலத்தில் வெற்றி நடை போட்டது. சில நாட்கள் போல் பல வருடங்கள் ஓடிவிட்டன. யாத்ராவின் அணைப்பிலிருந்து யாத்வி அனாதையாகித் தனித்திருப்பதை உணர்கிறாள். ஒரு கல்லறை அவளை பார்த்து சிரித்தது. ஆனாலும் யாத்வியின் கண்கள் அந்தக் கல்லறையை பார்த்து அழுதது. அவளை விட்டு அவள் இன்னும் பிரியவில்லை. ஆனால் விதிகளின் சதியில் அவள் என்றோ இறந்து விட்டாள்.
யாத்வி பார்த்த பகலினைப் பார்க்க கண்களின்றி யாத்ராவும்; யாத்ரா பார்த்த இரவினைப் பார்க்க அவள் கண்களோடு யாத்வியும் விதி வரைந்த கோலத்தில் சதி நிறைந்த ஓவியங்களாகினர். யாத்ராவின் கண்களால் யாத்வி இன்று உலகைப் பார்க்கிறாள்; அவளின்றி அவள் உலகம் இருண்டு போகிறது; கண்ணீர் சிந்தி அழுகிறாள்; துடிக்கிறாள்; கடந்த கால நினைவுகளில் அவள் வாழ்க்கை வசந்தமானது. இதுவரையும் கடந்த காலமே அவளை ஆட்சி செய்தது. யாத்ராவின் கல்லறையில் தலை வைத்தவளாய் பல நாழிகைகள் உறங்கினாள். அவளது அணைப்பை பிரிக்கும் வண்ணம் தோள்களில் கை வைத்த படியே 'யாத்வி' என்ற ஓசை செவிக்குள் நுழைந்தது. கண்களை விட்டு கண்ணீரை துடைத்தவளாய் திரும்பிப் பார்த்து எழுந்தவளாய்
'ஆயா என்ன சொல்லுங்க'
"யாத்வி உன்ன நினைக்கும் போது ரொம்ம பொறுமையா இருக்குமா உன் நண்பி இறந்து போய் இன்றோடு பதின்நான்கு வருடங்கள் கழிகிறது."
"இல்ல ஆயா. அவள் இன்னும் இறந்து போகலே எனக்குள்ளேயே வாழ்கிறாள். என்னை வைத்து அவள் உலகை பார்க்கிறாள். என் அம்மாவும் அவள் தானே ஆயா"?
ஆயாவின் கண்களில் கண்ணீர் கசிந்தது. "யாத்வி நீ எழுதின 'யாத்ரா' என்ற நாவல் உலகம் எங்கும் பல கோடி உள்ளங்களை கொள்ளையடித்து விட்டது. பல மொழிகளில் ஒரு தமிழ் புத்தகம் வெளியான சாதனையும் உன் யாத்ராவுக்கே! அதற்காக நீ பல விருதுகளும் வாங்கி விட்டாய். ஆனால் நீ இப்படி சாதிப்பாய் என்று உன் அம்மா யாத்வி பதின்நான்கு வருடங்களுக்கு முன்பே " நான் இறந்த பின் கண்களை என் யாத்விக்கு கொடுங்கள். எப்படியும் அவள் ஏதோ ஒரு துறையில் சாதிப்பாள் அப்போது நீங்களும் உயிரோடு இருந்தால் இக்கடிதத்தை என் யாத்விக்கு கொடுங்கள் என்று சொல்லி என்னிடம் ஒரு கடிதத்தை பொக்கிஷமாய் தந்தாள். அதற்கான சரியான சந்தர்ப்பம் இது தான்." என்று சொல்லிய படி கடிதத்தை யாத்வியிடம் கொடுத்தாள். கடிதத்தை பற்றியவளாய் முட்டுக்காலில் சரிந்தாள். யாத்வியின் தோள்களில் ஆயாவின் கைகள் ஆறுதல் சொல்லிய படி தட்டிக் கொண்ட இருந்தது. கண்ணீரோடு போராடி கடிதத்தை பிரித்தாள்.
யாத்வி!
"எப்படி இருக்காய். நீ நலமாக இருக்க வேண்டுமென்று நான் கடவுளிடம் மனு கொடுக்க போய் இருக்கேன். தயவு செய்து அழாதே! நீ அழுதால் என் கண்களால் தாங்க முடியாது. உன் நண்பி அழுவதை நீ விரும்பாவிட்டால் தயவு செய்து அழாதே! பட்டுப் பூச்சியின் வாழ்க்கை ஏழு நாட்கள் என்பார்கள்; மின்மினியின் வாழ்க்கை ஒரு உதயத்திலிருந்து ஒரு அஸ்தமனம் வரை என்பார்கள். அந்த வரிசையில் என் வாழ்க்கையும் சில என் கணிதமாகி விட்டது. எல்லோர் வாழ்க்கையும் இப்படித்தான். மெழுகாக நானும் தீபமாய் நீயும் உருகி உருகி வாழும் வரை வாழ்ந்தோம். நான் சுவர்க்கம் சென்றால் உன் அம்மாவை தேடிப் போய் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுக்கிறேன். உன் புன்னகை அழகாக இருக்குமென்று நான் சொல்வேன். எனக்காக ஒரு முறை கண்ணாடி முன் நின்று தயவு செய்து சிரித்து விடு! நான் எதையும் இதுவரை ஆசைப்பட்டது இல்லை. இப்போது எனக்கும் ஒரு நிறைவேறாத ஆசை இருக்கிறது. அதனை நிறைவேற்ற உன்னால் தான் முடியும். இக்கடிதத்தை படித்த பின் என்னை ஒருமுறை ........., அம்மா என்று அழைப்பாயா"?
இதயத்தில் இடியே விழுந்தது போல் துடித்தாள் யாத்வி. சட்டென்று அவள் இதழ்கள் வார்த்தையின் கதவுகள் திறந்து...,
யாத்ரா..., யாத்ரா..., அம்மா..., அம்மா..., அம்மா.., என்ற ஓசையில் அவளது இறுதி ஆசையை நிறைவேற்றினால் யாத்வி
யாத்ராவின் ஆசையை யாத்வி நிறைவேற்றியதை நிரூபிக்கும் வண்ணம் மேற்கிலிருந்து வந்த தீபாவளி பட்டாசு கிழக்கில் 'புஷ்' என்ற ஓசையுடன் வெடித்தது.