சிநேகிதனே -அத்தியாயம் - 09
......சிநேகிதனே.....
அத்தியாயம் : 09
நான் காரை விட்டு இறங்கவும் அவனும் காரிலிருந்து இறங்கி எனது பைகளை எடுத்துத் தந்தான்..அவற்றை அவனிடமிருந்து பெற்றுக் கொண்டு நகர்ந்து செல்ல முற்றப்பட்ட போது...
"ஒரு நிமிசம்..."என்றவாறே காரின் பின் சீட்டில் இருந்து ஒரு பார்சலை எடுத்து என்னிடம் நீட்டினான்...
ஒருவிதக் குழப்பத்தோடே அவனிடமிருந்து அதைப் பெற்றுக் கொண்ட நான்...
"என்ன இது...??.."
"திறந்து பார்..."
அதற்குள் என்ன இருக்குமென்ற சிறிய ஆவல் எனக்குள்ளும் தலை தூக்க அதை மெதுவாகப் பிரிக்கத் தொடங்கினேன்...
அதைப் பிரித்து முடிக்கும் வரையில் நான் அசந்து போகும் அளவிற்கு அங்கே ஒரு புடவையைக் காணுவேனென்று நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை...ஆம் அதில் அழகாக வடிவமைக்கப்பட்ட சேலையொன்று எனைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது...
எனக்காக அவன் வாங்கியிருக்கிறான் என்பதே மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியைத் தர,அதே மகிழ்ச்சியை கண்களில் தேக்கி அவனை நிமிர்ந்து பார்த்த நான்...
"உண்மையிலேயே ரொம்ப அற்புதமாயிருக்கு சரண்....நானே எடுத்திருந்தா கூட இவ்வளவு அழகா எடுத்திருக்கவே மாட்டேன்...ரொம்ப ரொம்ப தாங்ஸ்..."
இதை அவனிடம் சொல்லும் போதே அவனுக்காக நான் ஒன்றும் வாங்கி வரவில்லையென்று மனம் உறுத்தினாலும்..இன்னொரு பக்கம் நான் அவனைப் பார்க்கும் நினைவில் வரவில்லையென்பதையும் ஞாபகப்படுத்திச் சென்றது...
அப்படியென்றால் அவனுக்கு மட்டும் எப்படி நான் வருவது தெரியும்..இப்போது யோசித்தால் பூங்காவில் அவனைக் கண்டதைக் கூட எதேர்ச்சையானது என்று யோசிக்க முடியவில்லையே...அவன் எனக்காகவே காத்திருந்தது போல் அல்லவா இருக்கிறது...இப்போது இந்த சேலை கூட..
ஆனால் என்னை மேலும் அதைப்பற்றிச் சிந்திக்க விடாமல் அவனது குரல் தடுத்து நிறுத்தியது...
"இதை நான் ஒன்னும் உனக்காக எடுக்கல..நாலு வருசத்துக்கு முதல் அம்மாதான் உனக்காக எடுத்து வைச்சாங்க..இப்போ இதை நீ கட்டிட்டு வந்தா அவங்க ரொம்ப சந்தோசப்படுவாங்க...உனக்காக எடுத்ததை வேற ஒருத்தருக்கும் கொடுக்க எனக்கு மனசு வரலை..."
"பிடிச்சிருந்தா கட்டிட்டு வா...இல்லைன்னா வேண்டாம்..."
அவன் எடுக்கவில்லையென்பது மனதை வாட்டினாலும் அவனது அம்மா எனக்காக எடுத்ததைக் கூட அவன் வேற யாருக்கும் கொடுக்க விரும்பவில்லையென்பதில் மனம் நெகிழ்ந்தது...
"நான் போய் ரெடியாகிட்டு வாறேன்...நீ ரிசப்சன்ல வெயிட் பண்றியா..?இல்லை...."
"இல்லை நான் இங்கேயே இருக்கேன்...நீ போயிட்டு வா..."
"ம்ம்.."
நான் வருவது அவனுக்கு எப்படித் தெரிந்தது என்பதை மறக்காமல் அவனிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்த நான்...வரவேற்பறை வந்ததும் அந்த நினைவுகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு,எனது விபரங்களைக் கூறி எனக்காக ஒதுக்கப்பட்ட அறையின் சாவியினைப் பெற்றுக் கொண்டேன்...
அறைக்குள் நுழைந்த நான் அவனை காக்க வைக்க விரும்பாததால் இயன்றளவு விரைவாகவே தயாராகி வந்தேன்...அவன் தந்த சேலைக்குப் பொருத்தமான ரவிக்கையை என் பையில் அலசியதில்தான் சிறிது நேரம் பிடித்துக் கொண்டது...ஆனாலும் அவனை அதிக நேரம் காக்க வைக்காமல் அவன் முன்னே வந்து நின்றேன்...
நான் வரும் போது யாருடனோ தொலைபேசியில் கதைத்துக் கொண்டிருந்தவன்,என்னைக் கண்டதும் அந்த அழைப்பினைத் துண்டித்துக் கொண்டான்..
அந்த வேளையில் என்னை அவன் சேலையில் பார்த்ததும் அவனுடைய கண்களில் காதல் மின்னல் தோன்றியதையும்...அதை அவன் உடனேயே மறைத்துக் கொண்டதையும் என் விழிகள் படம்பிடித்துக் கொள்ளவும் தவறவில்லை...
"பரவாயில்லையே ரொம்ப சீக்கிரமா ரெடியாகிட்ட...??..நான் கூட நாலு வருசமா காக்க வைச்ச மாதிரி இப்போயும் காக்க வைச்சிடுவியோன்னு நினைச்சன்...
இதற்கு நான் என்ன பதிலைத்தான் சொல்வது...?அவனும் என் பதிலை எதிர்பார்க்கவில்லை போலும் ..நான் ஏறுவதற்கு வாகாக காரை என்னருகே திருப்பி நிறுத்தினான்...
கார் சாலையில் வழுக்கிக் கொண்டு சென்றது...காரில் இளையராஜாவின் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தது...ஆனால் அதைக் கேட்டு ரசிக்கும் மனநிலையில்தான் நான் இருக்கவில்லையே...
அப்போது அவனிடம் கேட்க வேண்டிய கேள்வி ஞாபகத்திற்கு வர..,
"நான் வாறேன்னு உனக்கு எப்படித் தெரியும்...??இன்னைக்கு நடந்ததெல்லாம் எதிர்பாராம நடந்தது என்டு மட்டும் சொல்லாத...அதை நான் நம்பவும் போறதில்லை..."
"நானும் இதெல்லாம் எதிர்பாராமத்தான் நடந்ததின்னு சொல்லவும் போறதில்லை..."
"அப்புறம் எப்படி உனக்குத் தெரியும்..??.."
"கண்டிப்பா இந்தக் கேள்விக்கு நீ விடை தெரிஞ்சுக்கனுமா...?"
அவன் இதுவரை நேரமும் சாலையைப் பார்த்தவாறேதான் பதிலளித்துக் கொண்டிருந்தான்...ஆனால் இறுதிக் கேள்வியை மட்டும் என்னை நன்றாகத் திரும்பிப் பார்த்தே கேட்டான்....அவனது பார்வைக்குள் என்னிடம் இன்னும் சொல்லாத பல கதைகள் ஒளிந்திருப்பதாக எனக்குத் தோன்றியது...
"ம்ம்.."
"அப்போ நீ வீடு வாற வரைக்கும் வெயிட் பண்ணித்தான் ஆகனும் மித்ரா..."
"சரி..."
அப்போதுதான் அவர்களுக்காக நான் ஒன்றும் வாங்கிக் கொள்ளவில்லையென்பதே எனக்கு உறைத்தது....
"ஏதாவது சூப்பர் மார்க்கெட் வந்தா நிப்பாட்டு...நான் கொஞ்ச பொருட்கள் வாங்கனும்..."
"யாருக்கு...??..."
"வேற யாருக்கு...எனக்குத்தான் வாங்கனும்..."அவனது வீட்டிற்குத்தான் என்றால் நிச்சயமாக விடமாட்டான் என்பதாலேயே அவ்வாறு சொன்னேன்...ஆனால் அவன் அதையும் கண்டுபிடித்திருக்க வேண்டுமென்பது அவன் அடுத்ததாய் போட்ட" ஓஓ"விலேயே எனக்கு விளங்கியது...."
"ஓஓஓஓஓ...அதை நீ அப்புறமா கூட வாங்கிக்கலாமே....?"
நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே சந்தியில் இருந்த சூப்பர் மார்க்கெட்டை கண்டு காரை நிறுத்தியவன்...,
"சரி...நீ போய் வாங்கிட்டு வா...நான் பார்க்கிங்கில வெயிட் பண்றேன்..."
அவனும் என்னுடன் வருவானென்று எதிர்பார்த்த மனம் அவனது இந்தப் பதிலில் சுருங்கிப் போனது....ஆனால் இப்போது அந்த எதிர்பார்ப்புகள் கூட தவறானது என்பது உறுத்த சூப்பர் மார்க்கெட்டினுள் நுழைந்து கொண்டேன்...
தொடரும்...