பாலைவன பனித்துளி

கருவறை இருட்டு தான் அம்மா..
ஆனால் உலகமோ மனிதர்கள் நடமாடும்
கல்லறை...
தொப்புள் கொடி பாசத்தின் பாதையா அம்மா...?
இன்று பாதை தான் இவ் அனாதையின்
மெத்தையம்மா..
வாகன இரைச்சல் நான் இரசித்த ராகங்கள்..
வீசப்பட்ட பத்திரைகள் அகரவரிசை
அறியா நான் படித்த புத்தகங்கள்..
கடக்கின்ற மேகத்தின் கண்ணீர்
நான் அருந்திய தண்ணீர்...
தொட்டிலில் தாலாட்டு அறியா என்
செவிகள் தொட்டியில் அறிந்தது
பல யதார்த்தங்கள்...
செயற்கை பூஞ்சோலையில்
தேன்குடிக்க சுற்றித்திரியும்
வண்ணாத்திபூச்சி
துணைக்கோர் உறவைத்தேடும்
என்னைப்பார்த்தும் சிரிக்கின்றது...
தடுக்கி விழுந்த குழந்தையை
தாங்கி பிடித்த தந்தை..
அழாமலேயே அரவணைத்துக்கொண்டு
செல்கின்ற அன்னை...
அடுத்த தெருவில்
என் கதிராளியில் அகப்பட்ட புகைப்படங்கள்...
வீதியே விலாசமான பின்பு வீட்டு முகவரி
எதற்கு...?
இரு உயிர்கள் எழுதிய கவிதையின்
எழுத்துப்பிழை நான்..
ஏராளம் எழுத்துப்பிழைகள்
தெருவோரங்களில்...
அதை சேர்த்து எழுதும்
கட்டுரையை யாரும் வாசிக்க விரும்ப
மாட்டார்கள்...
காரணம் தலைப்பிலேயே எழுத்துப்பிழை
என்பதால்...!