கழறிற்றறிவார் நாயனார் புராணம்-------------

பாடல் எண் : 1
மாவீற் றிருந்த பெருஞ்சிறப்பின்
மன்னுந் தொன்மை மலைநாட்டுப்
பாவீற் றிருந்த பல்புகழில்
பயிலு மியல்பிற் பழம்பதிதான்
சேவீற் றிருந்தார் திருவஞ்சைக்
களமும் நிலவிச் சேரர்குலக்
கோவீற் றிருந்து முறைபுரியுங்
குலக்கோ மூதூர் கொடுங்கோளூர்.

பொழிப்புரை :
திருமகள் வீற்றிருக்கும் பெருஞ்சிறப்பும், நிலையான பழமையுமுடைய மலைநாட்டில், பழந்தமிழ்ப் பாட்டுக்களில் விளங் கிய பல வகையான புகழையுடைய சேர மரபினரும், குடிகளும், தொன்று தொட்டுப் பயின்று வருகின்ற தன்மையுடைய பழைய பதியா வது, விடையூர்தியில் எழுந்தருளும் சிவபெருமானின் திருவஞ்சைக் களத்தில், நிலவப் பெற்றுச், சேர மரபின் மன்னர்கள் அரசு கட்டில் ஏறி, வழி வழி ஆட்சி செய்து வரும் பெரிய தலைநகரமானது கொடுங் கோளூர் ஆகும்
.
குறிப்புரை :
சீலமும் கொடையும் மிக்கிருத்தலின், `மாவீற்றிருந்த ...... மலைநாடு' என்றார். `அகனமர்ந்து செய்யாள் உறையும்' (குறள், 84) என்னும் திருவாக்கினையும் நினைவு கூர்க. `உரையும் பாட்டும் உடையோர் சிலரே' (புறம். 27) என்புழிப்போல, உரையும் பாட்டும் உடைய நாடுகளும் சிலவே. அவற்றுள் சேரநாடு ஒன்றாகும். பதிற்றுப் பத்தும், புறநானூறும், சிலம்பும் காண்க. கொடுங்கோளூர் - சேர மன் னர்களின் தலைநகரம். இதனொடு அஞ்சைக்களத்தையும் சேர்த்துக் கொடுங்கோளூர் அஞ்சைக்களம் என்று அழைப்பர். இது மகோதை என்றும் அழைக்கப்பெறும். தேவார வைப்புப் பதியாகும். சிவன் கோயிலும், கண்ணகி கோயிலும், பகவதி கோயிலும் உள்ளன.

பண்

எழுதியவர் : (25-Oct-17, 6:57 pm)
பார்வை : 45

சிறந்த கவிதைகள்

மேலே