நல்லுரைக்கோவை மூன்றாம் பாகம்------1 கூத்தரும் குலோத்துங்கனும்

முற்காலத்திலிருந்த சோழ அரசர்கள் தமிழ்ப் புலவர்களை ஆதரித்துப் போற்றி வருவதை ஒரு முக்கியமான கடமையாகக் கொண்டிருந்தனர். அவர்களுள் விக்கிரம சோழன் என்பவன் கவிச் சக்கரவர்த்தியாகிய ஒட்டக்கூத்தரைத் தன் அவைக்களப் புலவராக நியமித்து உபசரித்து வந்தான். கூத்தர் அம்மன்னனுடைய அன்புக்கு இருப்பிடமாகி யாவராலும் மதிக்கப்பெற்று வாழ்ந்து வந்தார். விக்கிரம சோழன் அத்தகைய கவிஞர் ஒருவர் தனக்கு வாய்த்திருப்பதை ஒரு பெறும் பேறாக எண்ணி மகிழ்ந்தான். தான் அவராற் பயன் பெறுவதோடு தன் குமாரனாகிய குலோத்துங்கனும் இளமைக்கால முதலே அப்பெரியாருடைய நல்லுரைகளைக் கேட்டுச் சிறந்த அறிவுடையவனாகலாமென்பது அவனுடைய கருத்து. அதன்படியே ஒட்டக்கூத்தரிடத்தில் இளமையிலேயே மாணாக்கனாக ஒப்பிக்கப் பட்டவன் இரண்டாங் குலோத்துங்க சோழன்.

அக் குலோத்துங்கன் முடிபுனைந்து சக்கரவர்த்தியான பிறகும் கூத்தருக்கு மாணாக்கனாகவே இருந்து வந்தான். பலகாலம் பழகி அவருடைய சிறந்த கவித்துவத்தை நன்கு உணர்ந்தவனாதலின் அவரது மனம் கோணாமல் நடந்து வந்தான். தமிழ் மொழிப் பரப்பைத் தம் அறிவினால் ஆண்டுவந்த அக்கவிச் சக்கர வர்த்தியின் பெரும்புலமையையும் தமிழ்நிலப் பரப்பைத் தன் ஆணையால் ஆண்டுவந்த புவிச் சக்கரவர்த்தியின் பேரன்பையும் தமிழ்நாட்டார் உணர்ந்து வியந்தனர்.

ஒட்டக்கூத்தர் குலோத்துங்கனுக்கு ஆசிரியராகவும் அவன் அவைக்களத்துப் பெரும் புலவராகவும் விளங்கினார். ஆசிரியராக இருத்தலின் கூத்தருக்குத் தலைமையும், அரசனாக இருத்தலின் குலோத்துங்கனுக்குத் தலைமையும் இருந்தன. இரண்டு முறையாலும் அவர்களுக்குள் அன்பும் பற்றும் வளர்ந்து வந்தனவேயன்றி ஒரு சிறிதும் குறையவில்லை.

கூத்தர் குலோத்துங்கனுக்கு ஞானத் தாயாக விளங்கினார்; அதனால் அவனை அவர் பிள்ளையாக வைத்து ஒரு பிள்ளைத்தமிழ் பாடினார்; உலாவொன்றையும் இயற்றினார்; இவற்றையன்றி நாள்தோறும் ஒவ்வொரு செய்யுள் கூறி அவனை வாழ்த்தி வந்தார்.

இங்ஙனம் தன்னை அரசனென்ற முறையிற் பல படியாகக் கவிச்சக்கரவர்த்தி பாராட்டி வருதலை அறிந்த குலோத்துங்கன், 'தமிழ் நயங்களை வெளியிடும் இந்நூல்களாற் புகழப் பெறுவது நம் பாக்கியம்' என்று எண்ணினான். தன்னை அவ்வாறு புகழும் ஆசிரியரை வணங்கி ஒரு பாட்டேனும் இயற்றி அவர்பால் தனக்குள்ள நன்றியறிவைப் பலரும் அறியும்படி செய்யவேண்டுமென்பது அவனது உள்ளக் கருத்து. அதற்குரிய செவ்வியை எதிர்பார்த்திருந்தான்.

வழக்கம்போல் ஒருநாள் அரசவை கூடியிருந்தது. நியாய சபையினராகிய அறங்கூறவையத்தினரும் மந்திரிகளும் பிற அதிகாரிகளும் தங்கள் தங்களுக்குரிய இருக்கைகளில் இருந்தனர். புலவர் பலர் ஒரு வரிசையில் களி துளும்பும் முகங்களோடு உட்கார்ந்திருந்தனர். அவர்களுக்குத் தலைவராகக் கூத்தர் அமர்ந்திருந்தார்.

நாள்தோறும் சொல்லும் வழக்கப்படி ஒரு புதிய கவியை அன்று ஒட்டக்கூத்தர் சொல்லத் தொடங்கி,


"ஆடுங் கடைமணி நாவசை யாம லகிலமெல்லாம்
நீடுங் குடையிற் ற‌ரித்த பிரான்"


என்று சொல்லிச் சிறிது நிறுத்தினார். உடனே தொடர்ந்தாற்போல சிங்காதனத்திலிருந்து,


"...............என்றுநித்த*நவம்
பாடுங் கவிப்பெருமான்"


என ஓர் ஒலி கேட்டது, எல்லோரும் நிமிர்ந்து அங்கே பார்த்தார்கள். என்ன வியப்பு! சோழ மன்னன். தன் ஆசிரியர் பாடலின் பிற்பகுதியைப் பாடுகிறான் :


"...............என்றுநித்த*நவம்
பாடுங் கவிப்பெரு மானொட்டக்கூத்தன் பதாம்புயத்தைச்
சூடுங் குலோத்துங்க சோழனென் றேயெனைச் சொல்லுவாரே"


என்று முடித்து நிறுத்தினான். சபையோர் யாவருக்கும் மயிர்க்கூச்செறிந்தது.
-----------------
*நவம் பாடுதல் - புதிய செய்யுளைப் பாடுதல்.

புலவர்கள் தம் காதையும் கண்ணையும் நம்பவேயில்லை. ஒட்டக்கூத்தர் தம்மையே
மறந்துவிட்டார். சோழவரசனோ நெடுநாளாக எண்ணியிருந்த ஓர் அரும்பெருங் கடமையை நிறைவேற்றிய மகிழ்ச்சி முகத்தே தோன்றக் குறுநகையுடன் வீற்றிருந்தான்.

"உண்மையா இது? அரசரா பாட்டுச் சொன்னார்? கூத்தருடைய பதாம்புயத்தைச் சூடும் குலோத்துங்கனென்றல்லவோ சொல்லுகிறார்!" என்று ஒவ்வொருவரும் தமக்குள் வினாவிக்கொண்டனர்.

ஒட்டக்கூத்தர் தம்முடைய உணர்வு வரப்பெற்று, 'எதிர்பாராதபடி மன்னர்பிரான் இங்ஙனம் வாய் மலர்ந்தருளக் காரணம் என்ன?" என்று பணிவோடு கேட்டார்.

"காரணமா? உலகம் அறிந்ததுதானே? நான் தங்களுடைய மாணாக்கன். தங்களிடம் நான் கற்றுக் கொண்டதன் பயனையும் எனது நன்றியறிவையும் ஒருவாறு தெரிவிக்க எண்ணினேன்" என்றான் வேந்தன்.

"நான் ஒரு புலவன்தானே? என்னை இப்படிச் சொல்லலாமா? நீங்கள் முடிமன்னரல்லவா?" என்றார் புலவர்பிரான்.

"ஆனாலும் நான் தங்கள் மாணாக்கன்தானே? என்னைப் பலவாறு பாராட்டி உலகமுள்ள்ளவும் என் புகழ் நிலைத்திருக்கும்படி செய்யும் தேவரீருக்கு நான்
என்ன கைம்மாறு செய்யமுடியும்? இந்த ஒரு செய்யுளைத் தாங்கள் பெரிதாகப் பாராட்டுகிறீர்களே! இதிலும் தங்கள் அடியைப் பின்பற்றித்தானே நான்
பாடினேன்? எனக்குத் தமிழ் விஷயத்தில் தனித் தலைமை ஏது?" என்று அரசன் கூறித் தன் பணிவையும் நன்றியறிவையும் புலப்படுத்தினான். ஒட்டக்கூத்தரிடத்தில் அவனுக்கிருந்த அன்பை அதுகாறும் ஓரளவு யாவரும் அறிந்திருப்பினும் அன்று மிகவும் நன்றாக அறிந்து கொண்டனர்.

பின்பு ஒருநாள் குலோத்துங்கன் தன் அரண்மனையில் உணவருந்திக் கொண்டிருந்தான். அப்பொழுது அவன் வாயில் ஒரு சிறு கல் அகப்படவே அவனுக்குக் கடுங்கோபம் உண்டாயிற்று. அரசனுக்கு ராஜஸகுணம் இயல்பல்லவா?

"இவ்வாறு கவனமில்லாமல் சமைத்த சமையற்காரனை வேலையிலிருந்து தள்ளிவிட வேண்டும்" என்று மன்னன் உத்தரவிட்டான். அவனது கட்டளைப்படியே அச்சமையற்காரன் வேலையினின்றும் விலக்கப்பட்டான். பலகாலமாக அரசனுக்கு ஊழியம் புரிந்த அவன் தன் குற்றத்தை நினைந்து வருந்தி அதிகாரிகளிடம் கெஞ்சியும் அவர்கள் இரங்கவில்லை. அரசன் ஆணைக்கு மேலும் ஓர் ஆணை யுண்டோ?

சமையற்காரன், 'இனி என் செய்வது!' என்று கவலையோடு யோசித்தான்; 'அரசனது ஆணைக்கு மேலே ஒருவர் வார்த்தையும் செல்லாதே!' என்று எண்ணி வருந்தினான். திடீரென்று ஒட்டக் கூத்தருடைய நினைவு அவனுக்கு வந்தது. உடனே ஓடிச்சென்று கண்ணீர் ஆறாகப் பெருக ஒட்டக் கூத்தரது மாளிகையினுள்ளே புகுந்து அவர் காலடியில் அவன் கதறிக்கொண்டு வீழ்ந்தான்; "உங்களைத்தவிர எனக்கு வேறு கதியில்லை. இவ்வளவு காலம் சக்கரவர்த்திக்கு ஊழியம் செய்துவந்தேன். என் தலைவிதி குறுக்கே நின்றதால் இன்று என் வேலை போயிற்று. நீங்களே அடியேனைக் காப்பாற்றவேண்டும். சக்கரவர்த்தியின் கோபத்தை உங்களை யன்றி வேறு யாராலும் தணிக்க முடியாது" என்று முறையிட்டான். அவனுடைய முறையீடு கூத்தருடைய உள்ளத்தை உருக்கியது. நடந்தவற்றை அவன் வாயிலாக அவர் அறிந்தார்; "அரசருடைய உணவென்றால் கவனமாக இருக்க வேண்டாமா? இவ்வளவு குடிகளுக்கும் அவர் உயிரல்லவா?" என்று கேட்டார் கூத்தர்.

"பெருமானே, நான் செய்தது பிழை. அதற்கு என் தலைவிதியை நொந்துகொள்வதை யன்றி வேறு வழியில்லை. பெரியவர்கள் இந்த ஏழையடிமையை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும்" என்று மீண்டும் கதறினான் அவன்.

கூத்தர், "சரி; நீ வீட்டுக்குப் போ. என்னால் ஏதாவது முடியுமானால் செய்கிறேன்" என்று சொல்லி அவனை அனுப்பினார்.

சில தினங்கள் சென்றன. ஒருநாள் மாலையில் அரசனும் புலவரும் மகிழ்ச்சியோடு தனியே பல விஷயங்களைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர். இடையே உணவைப்பற்றிய பேச்சு வந்தது. அதுதான் சமயமென்றறிந்த ஒட்டக்கூத்தர், "மகாராஜாவுடைய மடைப்பள்ளியில் ஏதேனும் மாறுதல் உண்டோ?" என்று விசாரித்தார். "வழக்கமாக இருந்த ஒரு சமையற்காரன் வேலையை விட்டு நீக்கப்பட்டான்" என்றான் அரசன்.

கூத்தர்: என்ன காரணமோ?

அரசன்: மடையன்; சோற்றிற் கல்லும் மண்ணும் இருப்பதாக் கவனியாமலிருந்தான்.

கூத்தர்: அவன் தொழிலாலும் மடையன்தானே! மகாராஜா இந்த சிறு குற்றத்தைப் பெரிதாக எண்ணலாமோ? நாங்களாவது கல்லும் மண்ணும் இருந்தால் கஷ்டப்படுவோம். மாகாராஜாவுக்கு அவற்றைச் சாப்பிட்ட பழக்கம் உண்டே!

அவர் சொல்லுவதன் கருத்து அரசனுக்கு விளங்கவில்லை; "என்ன! எனக்கு எப்படி அது பழக்கம்?" என்று வியப்போடு அவன் கேட்டான்.

"பாரிய மலைகளையும் மண்ணையும் விழுங்கிய பழக்கம் மாகாராஜாவுக்கு உண்டே! அது மறந்து போயிற்றா?" என்று கவிச்சக்கரவர்த்தி சொல்லி விட்டு உடனே,


*"மீனகம் பற்றிய வேலையை மண்ணையவு வெற்படங்கப்
போனகம் பற்றிய மாலலை யோபொருந் தாவரசர்
கானகம் பற்றக் கனவரை பற்றக் கலங்கள்பற்ற
வானகம் பற்ற வடிவேல் விடுத்த மனுதுங்கனே"


என்று ஒரு செய்யுளைப் பாடினார். குலோத்துங்கனுக்கு அவர் கருத்து விளங்கி விட்டது.
-----
* பகையரசர்கள் உனக்கு அஞ்சிக் காட்டை யடையவும் பெரிய மலைகளை யடையவும் கடல் கடந்து புறநாடுகளுக்குச் செல்லும்பொருட்டுக் கப்பலை யடையவும் உயிர் நீங்கி மேலுலகமடையவும் கூர்மையான வேலைவிட்ட குலோத்துங்கனே! மீன்கள் உள்ளே வாழும் பொருட்டுப் பற்றிய சமுத்திரத்தையும் பூமியையும் அந்த மலைகள் யாவற்றையும் உணவாகப் பற்றிய திருமால் நீயல்லவா?

அரசர்களைத் திருமாலின் அம்சமாக எண்ணுவது பெரியோர் வழக்கம் அதனைப் பின் பற்றித் திருமால் செய்த செயல்களை யெல்லாம் அம்மன்னர்கள் செய்தனவாகப் பாடுவர் புலவர். இந்தச் செய்யுளிலும் ஒட்டக் கூத்தர் அங்ஙனம் பாடியிருக்கிறார். "நீ முன்பு சமுத்திரத்தையும் மண்ணுலகத்தையும் மலைகளையும் உணவாக உண்ட திருமாலல்லவா?" என்ற கருத்து இப்பாடலில் அமைந்துள்ளது; 'இவ்வாறு மண் பரப்பையும் மலைகளையும் உணவாக உண்ட நீ இப்பொழுது மண்ணும் சிறு கல்லும் உணவில் இருந்தனவென்று சினங்கொள்ளலாமா?' என்ற குறிப்பும் வெளிப்படுகின்றது.

சோழமன்னன் அந்தப் பாட்டின் நய‌த்தில் ஈடு பட்டான். ஒட்டக்கூத்தருடைய சாதுர்யத்தை உணர்ந்து வியந்நான். அவருடைய திருவுள்ளத்தில் மடையன்பாற் கருணை யுண்டாயிருத்தல் புலப்பட்டது. 'ஒட்டக்கூத்தன் பதாம்புயத்தைச் சூடுங்
குலோத்துங்க சோழ'னாகிய தான் அப்புலவர் பிரானுடைய குறிப்பறிந்து நடத்தல் கடமையென்று துணிந்தான்.

" தங்கள் உள்ளக் குறிப்பை உணர்ந்தேன். இன்றிரவே அவன் நம் அரண்மனையில் மீட்டும் பணி செய்யத் தொடங்குவான். தாங்களும் இன்றிரவு அரண்மனையில் விருந்துண்டு மகிழவேண்டும்" என்று அன்போடு அரசன் புகன்றான்.

வேலையினின்றும் விலக்கப்பட்ட சமையற்காரன் அன்றிரவு சமைத்த சமையல் மன்னனுக்காகவா, அன்றிப் புலவருக்காகவா என்பதை யாரேனும் வரையறுத்துச் சொல்ல முடியுமா?
---------------------

--------------------------------------------------------------------------------

எழுதியவர் : (25-Oct-17, 7:11 pm)
பார்வை : 63

மேலே