டாக்டர்அம்பேத்கர்
ஒரு தாழ்த்தப்பட்டவர் மாவட்ட ஆட்சியாளராக இருக்கிறார். அவரின் கட்டுப்பாட்டில் அந்த மாவட்டமே இருக்கிறது. காவல் துறை அதிகாரிகளில் இருந்து, தாசில்தார்கள் வரை அவர் உத்தரவுக்காக காத்திருக்கிறர்கள்.
ஆனால், அவர் தன் சொந்த கிராமத்திற்கு சென்றால், சேரியில்தான் புழங்கவேண்டும். ஊரில் எழுதப் படிக்கத் தெரியாத ஒரு முட்டாள் அல்லது கிரிமனல் ஜாதி இந்துகூட அவரை தன்னை விட தாழ்ந்தவராக, தான் அவரை விட உயர்ந்தவராக நினைப்பான். இதுதான் ஜாதிய மனோபாவம்.
இந்த மனோபாவம், முட்டாள் ஜாதி இந்துவிடம் மட்டுமல்ல, நன்கு படித்த ஜாதி இந்துவிடமும் இருக்கிறது. இந்த எண்ணமும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்முறையும் இந்தியா முழுக்க பரவி இருக்கிறது. இந்திய தேசியத்தின் ஒரே அடையாளமாக இந்த தலித் விரோதம், இந்துக்கள் இருக்கும் இடமெல்லாம் நீக்கமற, பரம்பொருளைப்போல் பரவி இருக்கிறது.
இந்தச் சமூக அவலம், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியாளருக்கு மட்டுமல்ல, டாக்டர் அம்பேத்கருக்கே இது நேர்ந்திருக்கிறது.
1929 ஆம் ஆண்டில் பாம்பாய் அரசாங்கம், (பிரிட்டிஷ்) தாழ்த்தப்பட்ட மக்களுக்கான குறைகளை கேட்டறிந்து விசாரணை செய்ய, அமைத்தக் கமிட்டியில் டாக்டர் அம்பேத்கரும் ஒருவர். அந்த கமிட்டியின் சார்பாக பயணம் செய்தபோது சாலிஸ்கான் ரயில் நிலையத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மஹர்வாடா என்ற ஊரைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள், டாக்டர் அம்பேத்கரை தங்கள் ஊருக்கு வந்து தங்களோடு ஒர் இரவு தங்கவேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறார்கள்.
சாலிஸ்கான் ரயில் நிலையத்தில் இருந்து கிராமத்திற்கு குதிரை வண்டியில்தான் போக வேண்டும். வண்டிக்காரன் ஒரு ஜாதி இந்து. டாக்டர் அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர் என்பதால், பெரும் பணம் கொடுக்க முன்வந்தபோதும் கூட, ஜாதி இந்து வண்டி ஓட்ட மறுக்கிறான். வண்டியை மட்டும் வாடகைக்கு எடுத்து, வண்டி ஓட்டிப் பழக்கமில்லாத ஒரு தாழ்த்தப்பட்டவர் வண்டியை ஓட்டியதால் விபத்துக்குள்ளாகி டாக்டர் அம்பேத்கரின் கால் எலும்பு முறிந்து விடுகிறது.
இந்த அவலம் நிறைந்த அனுபவத்தை எழுதிய டாக்டர் அம்பேத்கர், அந்தக் கட்டுரையை இப்படி முடிக்கிறார்;
“அனைத்து தீண்டப்படாதவர்களைவிட, அவர் பார்-அட்-லாவாக இருந்தாலும் சரி, தானே உயர்ந்தவன் என்று ஒரு வண்டிக்காரனான இந்து நினைத்திருந்தான்.”
டாக்டர் அம்பேத்கரைப் பற்றியான இந்த எண்ணம், 1929 ஆம் ஆண்டில் பம்பாயை ஒட்டி இருந்த கிராமத்தின் எழுத படிக்க தெரியாத வயதான வண்டி ஓட்டியான ஜாதி இந்துவின் மனோபாவம் மட்டும் அல்ல. 2008 ஆண்டில் சில ஜாதி இந்து மாணவர்களின் மனோபாவமும் இப்படியேத்தான் இருக்கிறது. அதனால்தான் டாக்டர் அம்பேத்கர் பெயரை பயன்படுத்த மறுக்கிறார்கள். அதனால்தான் அவரின் சிலை சேதப்படுத்தப்படுகிறது. அதனால்தான் ஒரு நடிகனின் சிலைக்குத் தருகிற மரியாதையை கூட உலக அறிஞர்களில் குறிப்பிடத்தக்க அறிஞராக அறியப்பட்டிருக்கிற டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு தர மறுக்கிறார்கள். அதனால்தான் அவரின் சிலை மட்டும் கூண்டுக்குள் சிறை வைக்கப்பட்டு அவமானப்படுத்தப்படுகிறது.
***
“தீண்டாமையைக் கடைப் பிடிப்பதில் எத்தகைய தவறும் இருப்பதாக பழைய பழுத்த வைதிக இந்து கருதுவதில்லை, அவனுக்கு இது இயல்பான, இயற்கையான, பொதுமுறையான ஒரு விஷயம். இதனால் அவன் இதற்குக் கழுவாய் தேடுவதற்கோ அல்லது சமாதானம் கூறுவதற்கோ முயல்வதில்லை.
ஆனால் புதிய நவீனகால இந்துவின் விஷயம் அப்படியல்ல; அவன் தவறை உணர்கிறான். எனினும் பகிரங்கமாக இது குறித்து விவாதிப்பதற்கு வெட்கப்படுகிறான்; தீண்டாமை போன்ற கயமைத்தனமான, கொடிய, அருவருக்கத்தக்க, இகழார்ந்த சமூக திட்டங்களை இந்து நாகரிகம் தன்னுள் கொண்டிருக்கும் அவலட்சணம் எங்கே அயல்நாட்டவர்க்கு தெரிந்துவிடுமோ என்று அவன் அச்சம் கொள்கிறான்.”
1948 ல் டாக்டர் அம்பேத்கர் நவீன இந்துவைப் பற்றி, ‘மானம் அவமானத்திற்கு பயந்தவனாக’ குறிப்பிட்டிருக்கிறார். சரியாக 60 ஆண்டுகள் கழித்து 2008ல் இருக்கிற நவீன இந்து, அவரின் சிலையை இடிப்பதின் மூலமாகவும், அவர் பெயரை பயன்படுத்த மறுப்பதின் மூலமாகவும் அம்பேத்கரின் கூற்றை பொய்யாக்கி இருக்கிறான்.
இதற்குக் காரணம், தாழ்த்தப்பட்ட மக்கள் மீது உள்ள காழ்ப்புணர்ச்சியே அவர்களின் ஒப்பற்றத் தலைவரான டாக்டர் அம்பேத்கரின் மீதும் பிரதிபலிக்கிறது.
உண்மையில் டாக்டர் அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர் மட்டும்தானா? அவர் தாழ்த்தப்பட்ட மக்களின் இடஓதுக்கிடுக்கு மட்டும்தான் பாடுபட்டாரா?
குற்றப் பரம்பரையினர் என்ற ஒரு சமூகம் தலித் அல்லாத சமூகங்களில் மிகவும் பின்தங்கிய சமூகமா இருக்கிறது. பலநேரங்களில் தலித் மக்கள் மீதான வன்கொடுமைகளை இந்த சமூக மக்களை ‘ஏத்திவிட்டே’ உயர்ஜாதி இந்துக்கள் நடத்துகிறார்கள். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நேர் மேல் இருக்கிற இந்த சமூகம், தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வன்முறைகளில் அடிக்கடி ஈடுபடுகிற சமூகமாகவும் இந்து ஜாதி அமைப்பு முறை உருவாக்கி வைத்திருக்கிறது.
1948 ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் எழுதிய ‘தீண்டப்படாதார் என்பவர் யார்? அவர்கள் எவ்வாறு தீண்டப்படதார் ஆயினர்?’ என்ற நூலுக்கான முன்னுரையை இப்படி துவக்குகிறர்:
“சூத்திரர்களைத் தவிர இதர மூன்று சமூகப் பிரிவினரை இந்து நாகரிகம் தோற்றுவித்துள்ளது. இத்தகைய இந்து மக்கள் இருந்து வருவது குறித்து எந்த அளவுக்கு அக்கறை காட்ட வேண்டுமோ அந்த அளவுக்கு அக்கறை காட்டப்படவில்லை. மேலே குறிப்பிட்ட மூன்று சமூகப் பிரிவினர் வருமாறு:
1) குற்றப் பரம்பரையினர், இவர்களது எண்ணிக்கை சுமார் 2 கோடி சொச்சம்;
11) ஆதிவாசிகள், இவர்களது எண்ணிக்கை ஏறத்தாழ 1.5 கோடி;
111) தீண்டப்படாதவர்கள், இவர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 5 கோடி.
இப்படிப்பட்ட வகுப்பினர் இருந்துவருவது ஒரு மாபெரும் மானக்கேடாகும், அவக்கேடாகும். இந்த சமூக சீர்கேடுகளின், விபரீத விளைவுகளின் வெளிச்சத்தில், பகைபுலனில் பார்க்கும்போது, இந்து நாகரிகம் என்பது ஒரு நாகரிகம் என்று அழைப்பதற்கே அருகதையற்றதாகிவிடுகிறது! மனித குலத்தின் ஒரு பகுதியை இவ்வாறு அடக்கி ஒடுக்கி அடிமைப்படுத்துவது என்பது கொடிதினும் கொடிதான, பேய்த்தனமான அவமானகரமான ஒரு சூழ்ச்சியாகும்: அப்பட்டமான வஞ்சகமாகும். பெரும்பழி, குரூர அவமதிப்பு என்பதுதான் இதற்குச் சரியான பெயராக இருக்கமுடியும்.”
தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பேச வந்த டாக்டர் அம்பேத்கர், சமூகரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிற குற்றப் பரம்பரையினருக்காகவும் சேர்த்தேதான் குரல் கொடுக்கிறார்.
இந்த மனிதநேயரை எதிர்ப்பதற்குத்தானா இவ்வளவு ஆவேசம்.
தாழ்த்தப்பட்ட மக்களின் மீது நடத்தப்பட்ட வன்கொடுமைகளை கண்டிக்கும் போது பிற்படுத்தப்பட்ட ஜாதிகளை கண்டிக்கிற டாக்டர் அம்பேத்கர், தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சனைகளுக்கு முழுக்காரணம் என்று இந்து மதத்தையும் பார்ப்பனர்களையுமேதான் குற்றம் சுமத்துகிறார்:
“இன்று அனைத்துப் புலமையும் பிராமணர்களிடமே கட்டுண்டு கிடக்கிறது. ஆனால் அப்படியிருந்தும் துரதிருஷ்டவசமாக எந்தப் பிராமண அறிஞரும் ஒரு வால்டேராகச் செயல்படுவதற்கு இதுவரை முன்வரவில்லை. எதிர்காலத்திலும் இத்தகைய ஒரு பிராமண அறிஞர் அரங்கில் தோன்றுவார் என்றும் தோன்றவில்லை.
இந்த வால்டேர் யார்? கத்தோலிக்க திருச்சபையின் சித்தாந்தங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வளர்ந்தவர்; எனினும் விரைவிலேயே அந்த சித்தாந்தங்களுக்கு எதிராகவே கிளர்ந்தெழுந்து, குரல் எழுப்பும் அறிவாற்றல், நேர்மை அவரிடமிருந்தது.
பிராமணர்களால் ஒரு வால்டேரை உருவாக்க முடியவில்லையே என்பது அவர்களது புலமைக்கு இகழ் சேர்க்கிறது; அவர்களது அறிவாற்றலுக்கு அவப்பெயர் தேடித்தருகிறது. பிராமண அறிஞர் என்பவர் ஒரு கற்றறிந்த மனிதரே தவிர அவர் ஓர் ஆய்வறிவாளர் அல்ல என்பதை மனதிற்கு கொண்டால் இதில் வியப்படைவதற்கு எதுவுமில்லை.
கற்றறிந்தவருக்கும் ஆய்வறிவாளருக்கும் மலைக்கும் மடுவுக்குமுள்ள வேறுபாடு இருக்கிறது. முந்தியவர் வர்க்க உணர்வு கொண்டவர்; தமது வர்க்க நலன்களில் கண்ணும் கருத்தும் கொண்டவர்.
பிந்தியவரோ கட்டறுந்தவர்; வர்க்க நோக்கங்களுக்கு அடிமையாகாமல், ஊசலாடாமல் சுதந்திரமாகச் செயல்படக்கூடியவர்.
பிராமணர்கள் படித்தவர்களாக மட்டுமே இருப்பதால் அவர்களால் ஒரு வால்டேரை தங்கள் மத்தியில் தோற்றுவிக்க முடியவில்லை.
பிராமணர்களால் ஏன் ஒரு வால்டேரை உருவாக்க முடியவில்லை? இந்தக் கேள்விக்கு மற்றொரு கேள்வியைக் கொண்டுதான் பதிலளிக்க முடியும். துருக்கி சுல்தான் முகமதிய உலகின் சமயத்தை ஏன் ஒழித்துக்கட்டவில்லை? போப்பாண்டவர் கத்தோலிக்க மதத்தை ஏன் பழிந்துரைக்கவில்லை?……………………………………….
……………………………………………………………………………
பிராமணர்கள் பெற்றுள்ள அதிகாரமும் அந்தஸ்தும் இந்து நாகரிகம் அவர்களுக்கு அருள்கொடையாக அளித்தவையே ஆகும். அது அவர்களைத் தெய்வீக மனிதர்களாகப் பாவிக்கிறது; கீழ்த்தட்டுகளிலுள்ள வகுப்பினரை எல்லாவிதமான இன்னல் இடுக்கண்களுக்கும் உள்ளாக்குகிறது; அவர்கள் வீறு கொண்டெழுந்து தங்கள்மீது பிராமணர்களுக்குள்ள ஆதிக்கத்துக்குச் சவால் விடாதபடி, அதற்கு ஆபத்தை உண்டுபண்ணாதபடிப் பார்த்துக் கொள்கிறது.
ஒவ்வொரு பிராமணனும் அவன் வைதிகனாக இருந்தாலும், அவன் புரோகிதனாக இருந்தாலும் அல்லது கிரகஸ்தனாக இருந்தாலும் படித்த அறிவாளியாக இருந்தாலும் அல்லது படிக்காதவனாக இருந்தாலும் பிராமண ஆதிக்கத்தை நிலைநாட்டுவதில் அளவற்ற ஆர்வமும் அக்கறையும் கொண்டவனாக இருக்கிறான். அப்படியிருக்கும்போது பிராமணர்கள் எவ்வாறு வால்டேர்களாக இருக்க முடியும்?”
உண்மை எது என்று தெளிவாக ஆய்ந்து தனது சொந்த விருப்பங்களுக்கு இடம் கொடுக்காமல், இயங்கிய இந்த மாமேதையின் சிலையை இடிப்பதற்காகவா ஜாதிவெறியர்களுக்கு இவ்வளவு ‘வீரம்’?
-தொடரும்