கனவுக் குதிரைகள்

மாயவனத்தினில்
கொள் தின்று பசியாற
கட்டவிழ்த்து சென்றன என் கனவுக் குதிரைகள்.
அங்கு புல் மட்டும் கண்டு
புலம்பிய படியே
எனை வில் கொண்டு தாக்க
வேட்டைக்காரன் ஒருவனை
விலைக்கு வாங்கி
அவை வேக வேகமாய் வருகின்றன..
அவனை என் சொல் கொண்டு
தடுத்திட வேண்டும்
குதிரைகளுக்கு கொள் கொஞ்சம்
கொடுத்திட வேண்டும்
என் பல் உடைபடும் முன்னே
தப்பிக்க வேண்டும்
இல்லையேல் கனவுக் குதிரைகளை
இனி வளர்க்க முடியாது
அவை இல்லையேல்
கற்பனை ஏது கவிதை ஏது
விற்பனை ஆகாத தக்காளியாய்
அழுகிப் போகும் இதயம்
அவை பசியாறியதும் அவற்றை
தட்டிக் கொடுக்க வேண்டும்
கொள் நிறைய இருக்கும் வேறொரு மாயவனத்தை
குத்தகைக்கு எடுக்க வேண்டும்..